தடம் புரண்டிருந்த இந்திய வங்க தேச ரயில் வழி இணைப்பு மீண்டும் பாதையில்



ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மேற்கு வங்கத்தையும் கிழக்கு வங்கத்தையும் இணைக்கும் உயிர்பாதையாக திகழ்ந்த, உயிர்ப்பான துடிப்பான ரயில் இணைப்புகளை, போக்குவரத்தை, ஒரே மொழி மற்றும் கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டிருந்த மக்களுக்கிடையே இருந்த உணர்வு பூர்வமான நெருக்கத்தை துண்டிக்கும் எண்ணத்துடன்,1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் துண்டித்தது. ரயில் இணைப்புகளை அதிகப்படுத்துவது என்று பிரதமர் திரு நரேந்த்ர மோதி அவர்களுக்கும் வங்க தேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. 1965 ஆம் ஆண்டிற்கு முன் இருந்த இணைப்புகளை மீட்டெடுப்பது, அவற்றை மேலும் முன்னெடுத்து செல்வது என்பதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. தான் ஒரு இணைப்பு மையமாக விளங்கவேண்டும் என்பதில் வங்கதேசம் காட்டும் ஆர்வமும், வடகிழக்கு ப்ரதேசத்தை அருகிலிருக்கும் துறைமுகங்களோடு பாதைகள் மூலம் இணைத்து, அந்த ப்ரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகளை பெரிதாக முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதற்காக இந்தியா அளிக்கும் முன்னுரிமையும் இந்த இணைப்பு திட்டங்களை பெருமளவில் முன்னெடுத்து செல்லும் கிரியா ஊக்கியாக திகழ்கிறது.

1965 ஆம் ஆண்டிற்கு முன்னதாக இந்தியாவிற்கும், முன்னர் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்த வங்கதேசத்திற்கும் இடையே 13 பயணிகள் ரயில்கள் இயங்கி வந்தன. 2008 ஆம் ஆண்டில், கொல்கத்தாவும் டாக்காவையும் இணைக்கும் மைத்ரீ விரைவு ரயில் வண்டியை இரு நாடுகளும் மீண்டும் இயக்க துவங்கின, 2017 ஆம் ஆண்டு முதல் மற்றுமொரு பயணிகள் ரயில் வண்டி சேவையும் இயங்கி கொண்டிருக்கிறது. கொல்கத்தாவிற்கும் குல்னாவுக்கும் இடையே செல்லும் பந்தான் விரைவு ரயில் சேவை துவக்கப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டுகளில் இந்தியா வங்கதேசத்திற்கு 120 பயணிகள் ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்தது.

இந்தியா வங்கதேசத்திற்கு அளித்து வரும் கடனுதவியில் ஒரு பகுதியாக வங்கதேசத்தில் 17 ரயில்வே திட்டங்களுக்கு நிதி உதவி அளித்திருக்கிறது. மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல பாதையாக மாற்றுதல், சிக்னல்களை மேம்படுத்துதல், புதிய ரயில் பாலங்களை கட்டுதல், பழைய பாலங்களை புனரமைத்தல் போன்றவற்றிற்காக, வங்கதேசத்திற்கு மொத்தம் 2.44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி அளிப்பது என்று இந்தியா உறுதி அளித்திருக்கிறது. இவற்றுல் 9 திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டன. வங்கதேசத்தின் ஷாபஸ்பூரை இணைக்கும் கரீம்கஞ்ச்/மஹிசாசன் ரயில் பாதை மற்றும் வங்கதேசத்தின் சில்ஹாட்டியை இணைக்கும் ஹால்திபாரி ரயில்பாதையும் புனரமைக்கப்பட்டுவிட்டன. அகர்தலாவிலிருந்து அகாஹுராவை இணைக்கும் புதிய பாதை ஒன்றை அமைக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவும், வங்கதேச ரயில்வேஸ் எதிர் கொண்டு வரும் ரயில் பெட்டிகள் பற்றாகுறையை கருத்தில் கொண்டும், சரக்குகளை கொண்டு செல்ல இந்தியா தனது ரயில் பெட்டிகளை உபயோகித்து வருகிறது. இந்தியாவின் கூற்றுபடி, ஆண்டொன்றுக்கும் 20 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் போக்குவரத்து ரயில்கள் மூலம் நடைபெறுகிறது, இவற்றுள் 99 சதவிகித சரக்குகள் இந்தியாவிலிருந்து வங்கதேசம் இறக்குமதி செய்பவை ஆகும். ஜூன் மாதம் 100க்கும் மேலான சரக்கு ரயில்கள் அத்யாவசிய பொருட்களை வங்கதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக இயக்கபட்டன. இரு நாடுகளுக்குமிடையே போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துவதினால் நிகழும் இரண்டு குறிப்பிடதக்க முன்னேற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஆந்த்ர ப்ரதேசத்திலிருந்து 384 டன்கள் மிளகாய்களை ஏற்றிய சிறப்பு சரக்கு ரயில் ஒன்று ஜூலை 13 வங்கதேசம் போய் சேர்ந்தது; மற்றொன்று, 50 கொள்கலன்கள் கொண்ட முதல் கொள்கலன் சரக்கு ரயில் பொருட்களை ஏற்றிகொண்டு இந்தியாவின் மெஜெர்ஹாட்டிலிருந்து வங்கதேசத்தின் பெனாபோலுக்கு ஜூலை 26 ஆம் தேதி சென்றடைந்தது; இது இரு நாடுகளின் வரலாற்றில் முதல் நிகழ்வாகும். இந்த சேவை நிரந்தரமாக தொடரும் என்றும், இந்திய கொள்கலன் கழகத்தால் பரிந்துரைக்கபட்ட நிலையங்களிலிருந்து, வங்கதேசத்தின் பெனாபோல், ஜெசூர், சிங்கியா, நொயாபாரா மற்றும் வங்கபந்து சேது ரயில் நிலையங்களுக்கு கொள்கலன்களை கொண்டுசேர்க்கும். கொவிட் 19 பெருந்தொற்றால், வங்கதேசத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் மிக முக்கிய ஊடகமாக ரயில்வே துறை விளங்குகிறது.

இதனை கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்தியா வங்கதேசத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கும் 60 கோடி ரூபாய்கள் மதிப்பிலான அகலபாதையில் செல்லும் 10 டீசல் வண்டிகள் வங்கதேச ரயில்வேயின் பலத்தை அதிகரிக்கும். வங்கதேசம் எதிர்க் கொண்டு வரும் ரயில் வண்டிகள் குறைவை சமாளிப்பதற்காக, செப்டம்பர் 2012ற்கும் டிசம்பர் 2015ற்கும் இடையே 10 மீட்டர் கேஜ் மற்றும் 10 அகலபாதை ரயில் வண்டிகளை வங்கதேச ரயில்வே இயக்க துவங்கியது. வங்கதேச ரயில்வேயில் மொத்தம் 178 மீட்டர் காஜ் ரயில் வண்டிகள் உள்ளன அவற்றுல் 139 ரயில் வண்டிகள் 20 ஆண்டுகள் பழமையானவை என்பதை கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்திய அன்பளிப்பின் முக்கியத்துவம் புரியும். அங்கிருக்கும் 90 அகல பாதை ரயில் வண்டிகளில் 55 வண்டிகள் அவற்றின் பொருளாதார வாழ்வை முடித்தவையாகும்.

காலகாலமாக இருந்து வரும் துடிப்பான உயிர்ப்பான சமூக பொருளாதார அமைப்பின் அங்கமாக விளங்கி வரும் ரயில் வழி இணைப்பானது, விரைவான மற்றும் மலிவான வெகு ஜன போக்குவரத்தாக இன்னமும் தொடர்ந்து இருந்து வருகிறது. சாலை வழி போக்குவரத்தால் கொண்டு செல்லபடும் சரக்குகளுக்கான போக்குவரத்து செலவுகளுடன் ஒப்பிடுகையில் ரயில் மூலமாக கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு ஆகும் போக்குவரத்து செலவு மற்றும் நேரம் ஆகியவை குறைவு என்பது மட்டுமல்லாமல், தெற்காசியாவில் இந்தியாவின் மிகபெரும் வர்த்தக கூட்டாளி நாடாக வங்கதேசம் இருந்து வரும் சூழ் நிலையில், பெனாபோல் துறைமுகங்களிலுள்ள நெரிசலையும் இது தீர்த்து வைக்கும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ரயில் இணைப்பு அமைப்புகளை மீட்டெடுத்து புனரமைப்பது, இந்த வட்டாரத்தின் பொருளாதாரத்திற்கு மிகபெரும் ஊக்கமளிக்கும். அது மட்டுமல்லாமல், பல நூற்றாண்டு வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளால் பிணைக்கப்பட்டிருக்கும் இந்த வட்டார மக்களின் உறவுகள் மீண்டும் புத்துணர்வுடன் தொடரவும் இது வழி வகுக்கும்.

தெற்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ஸ்ம்ருதி எஸ். பட்னாயக் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.