தேவையற்ற  விஷயங்களில் மூழ்கியுள்ள பாகிஸ்தான்.

(ஐடிஎஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹுரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. குருமூர்த்தி.)

கடந்த ஒரு மாத காலமாக, ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வினோதமான அரசியல் நிகழ்வுகள் காணக் கிடைத்தன. பாகிஸ்தான் மக்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, கடந்த மாதம் முழுவதும், மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மானின் ஆஸாதி பேரணி மீதும், நோய்வாய்ப்பட்ட முன்னாள் பிரதமர், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படலாமா என்பது குறித்த விவாதங்களிலும் தனது பொன்னான நேரத்தை பாகிஸ்தான் விரயம் செய்துள்ளது. தொலைக்காட்சி சேனல்களின் முக்கிய நேரமும், அச்சு ஊடகங்களின் முன்பக்கங்களில் அதிக இடமும் இத்தகைய விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்டன.

மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மானின் ஆஸாதி பேரணி மீது, ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தின. கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி, சுக்கூரிலிருந்து துவங்கிய இப்பேரணி, சிலநாட்கள் கழித்து இஸ்லாமாபாத் வந்தடைந்தது. பேரணியின் முக்கிய நோக்கம், இம்ரான்கான் அவர்களின் அரசை வீழ்த்துவது தான் என்றும், அதனை நிறைவேற்றாமல், தன் ஆட்கள் இஸ்லாமாபாத்தை விட்டுச் செல்ல மாட்டார்கள் என்றும் மௌலானா கூறினார். கைகளில் தடியேந்திய தொண்டர்கள் கூட்டத்தின் வீடியோ காட்சிகள், தொற்றுநோய் போல் பரவ, அரசை ஆட்டம் காண வைக்கும் வன்முறை பெருமளவில் வெடிக்கும் என் விமரிசகர்கள் கணித்தனர். சில நாட்கள் கழிந்த பின்னர், ஒரு நிலையில் தனது உறுதியையும், மற்றொரு நிலையில் பதட்டத்தையும் அரசு வெளிப்படுத்த, ஃபஸ்லூர் அவர்களுடனும், மெத்தனமாக அவருக்கு ஆதரவு அளித்த சில எதிர்க்கட்சிகளுடனும், மேலெழுத்துவாரியாக, பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமது ஆட்களிடம் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறி, நாடு முழுவதிலும் உள்ள சிறு நகரங்களில் பேரணிகளை நடத்தி, இம்ரான்கான் அரசின் தோல்விகளை எடுதுரைக்குமாறு மௌலானா கேட்டுக் கொண்டார். இந்த இஸ்லாமாத் பேரணியைக் கூட்டியதிலும், பின்னர் அதனைக் கலைத்து இஸ்லாமாபத்தை விட்டு வெளியே செல்ல மௌலானாவை வற்புறுத்தியதிலும், பின்புலமாக, பாகிஸ்தான் ராணுவத்தின் சதி இருந்ததாகப் பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

பேரணியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், நவாஸ் ஷெரீஃப் அவர்களை சிகிச்சைக்காக அயல்நாடு செல்ல அனுமதிப்பது குறித்த விவாத மேடைகள் ஊடகங்களில் களைகட்டத் தொடங்கின. ஒரு ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி 7 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நவாஸ், மற்றொரு வழக்கிலும் கைதானார். அவருக்கு இதயத்தில் நீண்டநாள் பிரச்சனை இருந்தது. அவரது இரத்தத்தில் பிலேட்லெட் எண்ணிக்கைக் கடுமையாகக் குறைந்து ஆபத்தான நிலையை எட்டியபோது, உடல்நலம் காரணமாக, அவருக்கு லாகூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இருந்தாலும், இம்ரான்கான் அரசு, வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டோரின் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்கத் தயக்கம் காட்டியது. ஒரே ஒருமுறை, நான்குவார காலத்துக்கு வெளிநாடு செல்ல, 700 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீட்டுப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதித்தது. பிஎம்எல் – நவாஸ் கட்சி, எதிர்பார்த்ததுபோல், அதனை நிராகரித்தது. இந்நிலையில், லாகூர் உயர்நீதிமன்றம் மீண்டும் குறுக்கிட்டு, நவாஸ் அவர்களை அயல்நாடு செல்ல அனுமதிக்குமாறு பணித்தவுடன், வேறு வழியின்றி, ஆரவாரமின்றி, அரசு அனுமதியளித்தது. இறுதியில், இம்மாதம் 20 ஆம் தேதியன்று, கத்தார் விமான ஆம்புலன்ஸ், நவாஸ் ஷெரீஃப் அவர்களை சிகிச்சைக்காக லண்டன் கொண்டு சென்றது.

ஊழல் வழக்கில் சிக்கி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அயல்நாடு செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைப்பதை சற்று அடக்கி வாசிக்குமாறு, இம்ரான் கானுக்கு, பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளதாக வதந்திகள் நிலவுகின்றன. தாக்கம் ஏற்படுத்தும் அரசியல் பின்னணி கொண்ட ஒரே காரணத்திற்காக, நவாஸ் ஷெரீஃபுக்கு எந்த சலுகையையும் தான் அளிக்கப் போவதில்லை என்றும், ரியாசத் ஏ மதீனா என்ற கோட்பாட்டை அமல் செய்யும் புதிய பாகிஸ்தானில், வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு விதிகள் என்ற கோட்பாடுக்கு இடமில்லை என்றும் கண்டிப்புடன் கூறிய இம்ரான்கான், தேவையில்லாமல் வலுவான சிக்கலில் தன்னை சிக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கதை இத்துடன் முடியவில்லை. நவாஸ் விஷயத்தில் பல்டியடித்ததற்கு, நீதிமன்றத்தைக் குற்றம் சாட்டிய இம்ரான்கான், தன்னை நவாஸுக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றம் நிர்ப்பந்தித்ததாகக் கூறினார். அதற்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் தலைமை நீதிபதி, அரசின் முடிவுக்கு நீதிமன்றத்தின் மேல் பழி சுமத்தக் கூடாது என்று கூறியுள்ளார். இம்ரான்கான் அவர்களின் கொள்கைகள் இதனால் மேலும் விமரிசனங்களுக்கு உள்ளாகும். பாகிஸ்தானில் அரசியல்வாதிகள் இத்தகைய சர்ச்சைகளுக்குள் மூழ்கி, கை தாழ்ந்த நிலைக்குத் தங்களை இட்டுச் செல்லும் வேளையில், ராணுவத்தின் நிழல் பூதாகரமாக விரியத் தொடங்குகிறது.

விலைவாசி கட்டுக்கடங்காமல், வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், மக்களிடையே அதிருப்தி பரவுவதும், அரசியல் கொந்தளிப்புக்கள் நீடித்து வருவதும், இம்ரான்கான் அரசுக்கு மட்டுமின்றி, பாகிஸ்தானின் ஜனநாயத்திற்கும் நல்லதல்ல.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.