பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.

(இட்ஸா தெற்காசிய மையத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.)

பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளர் சலீம் சஃபி அவர்கள், டெய்லி ஜங் என்ற பத்திரிக்கையில், பாகிஸ்தானில் நிலவும் குழப்பமான சூழ்நிலை குறித்து, புலம்பலுடன் எழுதியுள்ளார். அதில், பாகிஸ்தான் புதிய சமுதாய ஒப்பந்தம் ஒன்றை உடனடியாக உருவாக்கத் தவறினால், பின் எப்போதும் அதனை உருவாக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானிலுள்ள நிறுவனங்கள், ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்படுவதோடு, ஒரு நிறுவனம் பாதிப்புக்குள்ளானால் பிற நிறுவனம் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்குத் தங்களுக்குள் விரோத மனப்பான்மையுடன் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சூழலில், பாகிஸ்தானுக்கு உண்மையைக் கண்டறிந்து, தீர்வுகாணும் குழு ஒன்று அவசியம் என்றும், அதன்மூலம், கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை இனங்கண்டு, களைந்து, புதிய தொலைநோக்குடனான அரசியல் எதிர்காலத்தை நோக்கிப் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்தடுத்து பல நெருக்கடிகளை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், இத்தகைய புலம்பல்கள் தொற்றுநோய் போல் பரவையுள்ளது இயற்கையே. பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் கட்சிகள், தங்கள் ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்களை மறைப்பதில் மூழ்கியுள்ளன.

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் முயற்சியில், தேசியப் பொறுப்பேற்பு நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அவலநிலை கையாளப்பட்டு வருகிறது. இதனால் ஆளும் கட்சியின் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு மாற்றாக, இம்ரான்கான் அரசு, தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, அதிக பேச்சு, குறைந்த செயலாக்கம் என்று செயல்பட்டு, நாட்டின் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், அவருக்கு ராணுவத்தின் பின்புல ஆதரவு இருப்பதை இது தெளிவாக்குகிறது.

ஜனநாயக மாண்புகள் காற்றில் பறக்க விடப்பட்ட சூழலில், சக்தி வாய்ந்த ராணுவத்தின் ஆதரவை அரசு பெற்றிருப்பது கண்கூடான நிலையில், ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு, எதிர்க்கட்சிகளிடமிருந்து வருவதற்குப் பதிலாக, நிறுவனங்களுக்கு இடையேயிருந்து வெளிப்படுகிறது. நிறுவனங்களுக்கு இடையே, தங்கள் ஆளுமையை நிலைநாட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. ராணுவத் தளபதி மீண்டும் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக, நீதிமன்றம் வினா எழுப்பியதையும், முன்னாள் ராணுவ சர்வாதிகாரியான ஜெனரல் முஷாரஃப்ஃபிற்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். வழக்கமான நடைமுறையில், இத்தகைய தீர்ப்புக்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்நிலையில், ராணுவத்தின் பெயரைக் காப்பாற்றும் சவாலை இம்ரான் அரசு எதிர்கொண்டுள்ளது.

இவ்வளவு நடந்த பிறகும், நிறுவனங்களை எதிர்கொள்ளத் திராணியற்றவையாக பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் உள்ளன. இம்மாதம் 2 ஆம் தேதியன்று, ராணுவத் தளபதியை மீண்டும் நியமிக்க அரசு கொண்டு வந்த தீர்மானத்தை, முக்கிய எதிர்க்கட்சியான பிஎம்எல் – என், பலவீனத்துடன் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியின் இத்தீர்மானத்தின் வாயிலாக, ராணுவத் தளபதியை மீண்டும் நியமனம் செய்யும் அதிகாரம், பிரதமருக்கு வழங்கப்படுகிறது. இதே போக்கில், ராணுவத்தைத் திருப்தி செய்யும் வகையில் முஷராஃப்ஃபின் தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்கப்படுவதையும் எதிர்பார்க்கலாம்.

ஜனநாயகக் கோட்பாடுகளை மீறிய இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால், பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகத்தன்மை மக்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. ராணுவத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துணிந்த ஆய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதுகெலும்பற்ற சட்டசபையினால் தப்பித்த ராணுவத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

குழப்பமான சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தவறியதற்குக் காரணம், எஞ்சியுள்ள ஜனநாயகத்தைக் கபளீகரம் செய்யத் தயாராயிருக்கும் ராணுவம், ஏதாவது ஏடாகூடமாக செய்து விடும் என்ற அச்சமேயாகும். இம்ரான்கான் அரசின் அதிகாரத்தை சீர்குலைப்பதில் கவனம் செலுத்தும் எதிர்க்கட்சிகள், அரசுக்குப் பின்புலமாக விளங்கும் ராணுவத்தைப் பலவீனப்படுத்துவதில் நாட்டம் கொள்ளவில்லை. இந்த இடைப்பட்ட சந்தர்ப்பத்தில், பாகிஸ்தான் ராணுவம், தனது ஆளுமையை நிலைநாட்டிக் கொள்ள அவகாசம் பெற்றுள்ளது. தற்போது, எல்லா நிறுவனங்களையும்விட, இம்ரான்கான் அரசின் ஆதரவே ராணுவத்துக்குப் பலமாக உள்ளது. இந்நிலையில், மாற்றங்களுக்கான முயற்சிகள், மாற்றங்கள் இல்லாத பழைய நிலைக்கே பாகிஸ்தானை இட்டுச் செல்லக் கூடும் என்பதால், பத்திரிக்கையாளர் சஃபியின் புதிய சமுதாய ஒப்பந்தக் கனவு, கனவானவே விளங்கும் என்றால் அது மிகையல்ல.

_______________________

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்