ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்
சி.ஐ.எஸ்ஸின் மூலோபாய ஆய்வாளர் டாக்டர் அதர் ஜாஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன்
இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இந்த வாரம் நடந்தேறியது.
பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதே இந்தக் குழுக்களின் நோக்கம். இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். சர்வதேச அளவில் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் பயண கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் வழியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருதரப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், வர்த்தக முன்னுரிமை ஒப்பந்தம், விவசாய விளைபொருட்களுக்கான பரஸ்பர சந்தை அணுகல், இந்தியாவின் கடன் திட்டங்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட திட்டங்களை செயல்படுத்துதல், இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கும் உஸ்பெகிஸ்தானின் ஆண்டிஜன் பிராந்தியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளையும் கருத்தில் கொண்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த தாஷ்கண்டில் உள்ள இந்தியா-உஸ்பெகிஸ்தான் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய அதிகாரிகள், திட்டங்களை விரைவாக முடிப்பது இருதரப்பு வர்த்தகத்தை மேலும் பலப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
தனது புவியியல் அமைவினால், மத்திய ஆசியாவில் உஸ்பெகிஸ்தான் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி என்ற அளவில், 32 மில்லியன் மக்கள்த்தொகை கொண்ட நாடு உஸ்பெகிஸ்தான். இந்தியா- உஸ்பெகிஸ்தான் இடையிலான உறவுகள் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். பல்வேறு கலாச்சார பண்புகளைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளும் மூலோபாய பங்காளிகள் ஆகும். அண்மை ஆண்டுகளில் இந்த உறவு ஆக்கப்பூர்வமான வகையில் வளர்ந்து வருகிறது. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அதேபோல், அந்நாட்டு அதிபர் ஷவ்காட் மிர்சியோயெவ் (Shavkat Mirziyoyev ) 2018 அக்டோபர் மற்றும் 2019 ஜனவரியில் இந்தியாவுக்கு வருகை தந்தார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்புமிக்க இந்தியா- மத்திய ஆசியா வெளியுறவு அமைச்சர்களின் முதல் பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சமீப காலமாக மேம்பட்டு வருகிறது. 2019 நவம்பர் மாதத்தில், டஸ்ட்லிக் -2019 என்று பெயரிடப்பட்ட முதல் கூட்டு கள பயிற்சி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. உஸ்பெகிஸ்தானுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டுப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ கல்வி மற்றும் ராணுவ மருத்துவத் துறை தொடர்பான ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உறுப்பினர்கள். எஸ்.சி.ஓவின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு முகமை (RATS) தலைமையகம் தாஷ்கண்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பான அரசியல் உறவுகள் மற்றும் இருதரப்பு நிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவை பொருளாதார ஈடுபாட்டுடன் பொருந்த வேண்டும். இப்பகுதிக்கு நேரடி நில அணுகல் இல்லாததால் வர்த்தகம் தடைபட்டுள்ளது. பெரிய பொருளாதாரமான இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பான எரிசக்தி ஆதாரங்கள் மத்திய ஆசியாவில், அதிலும் குறிப்பாக உஸ்பெகிஸ்தானில் பெருமளவில் கிடைக்கிறது. மறுபுறம், தாஷ்கண்ட், இந்தியாவை ஒரு சாத்தியமான முதலீட்டாளராகவும், வர்த்தக மற்றும் தொழில்நுட்பப் பங்காளியாகவும் கருதுகிறது. வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், உலோகம், மருந்து மற்றும் ரசாயன துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவாக்க முடியும். அண்மை ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் அதிகரித்து வந்தபோதிலும், COVID-19 பெருந்தொற்றால் சர்வதேச பொருளாதார சூழ்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் தத்தமது நாடுகளில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. சுகாதார சவால்களைச் சமாளிக்க உஸ்பெகிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கியது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் ஸ்திரமற்றத் தன்மை மற்றும் தெற்காசியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான நேரடி இணைப்பு இல்லாமை உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் உறவுகள் வாய்ப்பளிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் அமைதியை மீட்டெடுப்பதில் உஸ்பெகிஸ்தான் தீவிரமாக முயற்சிக்கிறது. மசார்-இ ஷெரீப்பில் இருந்து ஹெராத் வரை அமைக்கப்படும் ரயில்த் தடமானது, ஆப்கானிஸ்தான் வழியாக தெற்காசியா-மத்திய ஆசியா இடையிலான வர்த்தகத்தை சாத்தியமாக்கும். அஷ்கபாட் போக்குவரத்து நடைபாதையில் இணைந்துள்ள இந்தியா, இரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளது. சபாஹர் துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தாழ்வாரத்தை (ஐ.என்.எஸ்.டி.சி) முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடுகள் அதிகரிக்கும். இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் கூட்டு முயற்சிகள் பரஸ்பர வர்த்தக வருவாயில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.
Comments
Post a Comment