பாதுகாப்புத் துறை உற்பத்தி வளர்ச்சியில் பாய்ச்சலுக்குத் திட்டமிடும் இந்தியா



வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கொள்கை (டிபிஇபி) மூலம், உலக பாதுகாப்புத் தளவாடச் சங்கிலியின் ஒரு பெரிய பகுதியை இந்தியா குறி வைத்துள்ளது. 2025 வாக்கில், வரைவு உள்நாட்டு உற்பத்தியின் அளவை 25 பில்லியன் டாலராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்தில் ஒரு பங்கு ஏற்றுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தளவாடங்களின் மூன்றாவது பெரிய இறக்குமதியாளராக இருந்து, இப்போது, தற்சார்புள்ள பாரதம் கொள்கையின் அடிப்படையில், முன்னேற இந்தியா நோக்கம் கொண்டுள்ளது.

பல்வேறு தரப்பினரின் கருத்துகளுக்காக பாதுகாப்பு அமைச்சகம் வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை 2020 ஐ பொதுக் களத்தில் வைத்துள்ளது. அடுத்த மூன்று வாரங்களில், வரைவுக் கொள்கை குறித்த கலந்துரையாடல்களில் அமைச்சகம் சம்பந்தப்பட்டவர்களை ஈடுபடுத்தும். கொள்கை ஆவணம் பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் உலகின் தலைசிறந்த நாடாக வெளிவர நாட்டை வழிநடத்தும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்புத் துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பின்னணியில் இந்த வரைவுக் கொள்கை வந்துள்ளது. 49 சதவீதத்திலிருந்து வரம்பை உயர்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொள்கை முடிவு தற்சார்பு பாரதம் என்ற நோக்கத்துடன் ஒத்துப்போகும் என்று சரியாகக் கூறியிருந்தார். உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கொள்முதல் செய்வதற்காக பிரத்தியேகமாக சில பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் தளங்களை அரசாங்கம் பட்டியலிடும் என்பது தற்சார்பு பாரதம் திட்டத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

மேலும், வரைவுக் கொள்கை ஆவணம் அதிநவீன இராணுவ வன்பொருள் மற்றும் தளங்களுடன் ஆயுதப்படைகளுக்கு இந்தியா அதிகாரம் அளிக்கும் நேரத்தில் வந்துள்ளது. ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பை வாங்குவது என்பது முடிவெடுக்கும் செயல்பாட்டின் தெளிவை உறுதிப்படுத்துவதாகும்.

வரைவில் பட்டியலிடப்பட்ட குறிக்கோள்களில், விண்வெளி மற்றும் கடற்படைக் கப்பல் கட்டுமானத்துடன் உலகளவில் போட்டியிடக்கூடிய பாதுகாப்புத் துறையை உருவாக்குவது என்பதும் அடங்கும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, உண்மையில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தயார் நிலையில் உள்ளது, மேலும் வரைவுக் கொள்கை உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. லட்சிய இலக்குகளை அடைய, வரைவு ஆவணம் உள்நாட்டுக் கொள்முதலை சீர்திருத்துவதாக உறுதியளிக்கிறது. மேலும், கொள்கை ஆவணம் ‘ஸ்டார்ட்-அப்கள்’ மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பது வரவேற்கத்தக்கதாகும். தனியார் துறைக்கு விண்வெளித் துறையைத் திறப்பதற்கான கொள்கை முடிவுகளுடன் காணப்பட்ட வரைவு ஆவணம், நாட்டின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான உள்நாட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் காட்டுகிறது.

முன்னதாக, ஆயுதத் தொழிற்சாலை வாரியங்களை நிறுவனமயமாக்கும் நோக்கத்தை அரசாங்கம் தெளிவாகக் கூறியது. உலகளாவிய பாதுகாப்பு வழங்கல் சங்கிலியில் ஒரு முக்கிய பங்கைப் பெறுவதற்கான இலக்கை அடைய சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பெறுவதற்கான முன்னோக்கிய வழி இது.

அண்மையில் அரசாங்கம் அறிவித்த 20 லட்சம் கோடி தற்சார்புத் தொகுப்பு, பாதுகாப்புத் துறையிலும் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இந்தத் தொகுப்பு எம்.எஸ்.எம்.இ துறைக்கு பல நிதிச் சலுகைகளை வழங்கியுள்ளது. இது வரைவு ஆவணத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலர் பாதுகாப்பு உற்பத்தியை அடைவதற்கு முக்கியமானது என்று கருதப்படுகிறது. எம்.எஸ்.எம்.இ துறையும் நாட்டின் மிகப்பெரிய வேலை வாய்ப்பளிக்கும் துறையாகும். வரைவு ஆவணத்தால் வகுக்கப்பட்ட பாதை நாட்டிற்குள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தக்கூடும், இதன் விளைவாக வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கும்.

மேக் இன் இந்தியா முன்முயற்சி சமீபத்திய ஆண்டுகளில் வரவேற்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக மொபைல் போன்களின் உற்பத்தியை மின்னணுவியல் துறையில். தொலைக்காட்சி பெட்டிகளைப் பொறுத்தவரை, உள்நாட்டு உற்பத்தி இப்போது மொத்த தேவையில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக பூரித்தி செய்கிறது. இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வது கட்டுப்பாட்டு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக உள்நாட்டுக் கொள்முதல் செய்வதற்கான ஆயுதங்களின் பட்டியலை அதிகரிப்பதாக அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது, இது நிச்சயமாக எம்எஸ்எம்இ மற்றும் ஸ்டார்ட் அப்ஸை பலப்படுத்தும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா தனது பாதுகாப்பு ஏற்றுமதியை 2018-19 ஆம் ஆண்டில் ரூ .10,745 கோடியாக உயர்த்தியுள்ளது, இது 2017-18ல் 4,682 கோடி ரூபாய் அளவை விட 100 சதவீதம் உயர்ந்தது. இது வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கொள்கையை மிகவும் சாத்தியமாக்குகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மூத்த சிறப்பு நிருபர் மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்



Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.