வலுவடைந்து வரும் இந்திய-மொரிஷியஸ் உறவுகள்
ஆகாஷ்வாணியின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்
இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான நட்பு, இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய-மொரிஷிய ஒத்துழைப்பு மற்றும் பொது விழுமியங்களின் அடையாளமாக, இந்தியாவின் உதவியுடன் போர்ட் லூயிஸில் கட்டப்பட்ட புதிய உச்ச நீதிமன்ற கட்டடம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷிய பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்தியா மற்றும் மொரீஷியஸ் இரு நாடுகளும் தங்கள் சுயாதீன நீதித்துறைகளை தங்கள் ஜனநாயக அமைப்புகளின் முக்கியமான தூண்களாக மதிக்கின்றன. ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட செலவுக்குள் திட்டத்தை சரியான நேரத்தில் முடித்ததில் பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.
திரு. மோடி, அவரும் பிரதம மந்திரி ஜுக்நாத்தும் சில மாதங்களுக்கு முன்புதான், மற்றொரு மைல்கல், தீவு-நாட்டின் மெட்ரோ திட்டம் மற்றும் ஒரு புதிய அதிநவீன மருத்துவமனை ஆகியவற்றை கூட்டாகத் திறந்து வைத்தனர். இந்த இரண்டு திட்டங்களும் மொரீஷியஸ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சாகர் (Security and Growth for All in the Region) (பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) பற்றிய இந்தியாவின் தொலை நோக்குப் பார்வை குறித்துப் பிரதமர் மோடி முதலில் பேசியது மொரிஷியஸில் தான். ஏனென்றால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியாவின் அணுகல் மையமாக மொரீஷியஸ் உள்ளது. இன்று வளர்ச்சி கூட்டாண்மைக்கான இந்தியாவின் கொள்கைக்கு மையமாகவும் மொரிஷியஸ் உள்ளது என்றார் பிரதமர். மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி அவர் கூறினார், “நான் உலகம் முழுவதையும் கருத்தில் கொள்ள விரும்புகிறேன். எனது தேசபக்தியில் பொதுவாக மனிதகுலத்தின் நன்மை அடங்கும். எனவே, இந்தியாவுக்கான எனது சேவையில் மனிதநேய சேவையும் அடங்கும் ”. இது இந்தியாவின் வழிகாட்டும் தத்துவம் என்றும் பிரதமர் கூறினார். இந்தியா தானும் வளர்ச்சி அடைந்து மற்றவர்களின் வளர்ச்சிக்கும் உதவ விரும்புகிறது என்றார்.
வளர்ச்சிக்கான இந்தியாவின் அணுகுமுறை மனிதத்தை மையமாகக் கொண்டது. இந்தியா மனிதநேய நலனுக்காக உழைக்க விரும்புகிறது. அபிவிருத்தி கூட்டாண்மை என்ற பெயரில், நாடுகள் சார்பு கூட்டாண்மைக்கு தள்ளப்பட்டதாக வரலாறு நமக்குக் கற்பித்திருக்கிறது. இது காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு வழிவகுத்தது. இது உலகளாவிய அதிகாரத் தொகுதிகளுக்கும் வழிவகுத்தது; இறுதியில், மனிதநேயம் பாதிக்கப்பட்டது என்று பிரதமர் கூறினார்.
மரியாதை, பன்முகத்தன்மை, எதிர்காலம் குறித்த அக்கறை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி கூட்டாண்மைகளை இந்தியா செய்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, வளர்ச்சி ஒத்துழைப்பின் மிக அடிப்படைக் கொள்கை கூட்டாளிகளை மதிக்க வேண்டும் என்பது தான். அபிவிருத்திப் பாடங்களைப் பகிர்வது இந்தியாவின் ஒரே உந்துதல். இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு எந்தவொரு நிபந்தனையுடனும் வரவில்லை. இது அரசியல் அல்லது வணிக ரீதியான கருத்தினால் உந்தப்படவுமில்லை.
இந்தியாவின் வளர்ச்சிக் கூட்டாண்மை பன்முகத்தன்மை கொண்டது என்று பிரதமர் கூறினார். வர்த்தகம் முதல் கலாச்சாரம் வரை, எரிசக்தி முதல் பொறியியல், சுகாதாரம் முதல் வீட்டுவசதி, தகவல் தொழில்நுட்பம் முதல் உள்கட்டமைப்பு, விளையாட்டு முதல் அறிவியல் வரை, இந்தியா உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற வளாகத்தை கட்டியெழுப்ப உதவுவதில் இந்தியா கவுரவிக்கப்படுகிறது. நைஜரில் மகாத்மா காந்தி கன்வென்ஷன் சென்டர் உருவாக்குவதில் அது பெருமிதம் கொள்கிறது. அவசர சிகிச்சை மருத்துவமனையை நிர்மாணிப்பதன் மூலம் நேபாளத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்த உதவுவதில் புது தில்லி மகிழ்ச்சியடைகிறது. ஒன்பது மாகாணங்களிலும் அவசர ஆம்புலன்ஸ் சேவைகளை நிறுவுவதற்கான இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதற்கும் இந்தியா பாக்கியம் பெற்றது
நேபாளத்தில் இந்தியா செய்து வரும் எண்ணெய் குழாய் திட்டம் அந்த நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த உதவும் என்று பிரதமர் கூறுகிறார். இதேபோல், மாலத்தீவின் முப்பத்தி நான்கு தீவுகளில் குடிநீர் மற்றும் சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்வதில் பங்களிப்பதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் கயானா போன்ற வேறுபட்ட நாடுகளில் அரங்கங்கள் மற்றும் பிற வசதிகளை உருவாக்க உதவுவதன் மூலம் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த இந்தியா முயற்சித்தது. இலங்கையில் ஒரு பெரிய வீட்டுவசதி திட்டத்தில் தான் முன்னணியில் இருப்பது பெருமைக்குரிய விஷயமாக இந்தியா கருதுகிறது. எங்கள் வளர்ச்சி கூட்டாண்மை எங்கள் கூட்டாளி நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளை பிரதிபலிக்கிறது, என்று இந்திய பிரதமர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
திரு. மோடி, எதிர்காலம் நிலையான வளர்ச்சியை அடிப்படையகக் கொண்டது என்றார். மனிதர்களின் தேவைகளும் அபிலாஷைகளும் நமது இயற்கைச் சூழலுடன் முரண்பட முடியாது. இந்த தத்துவத்தின் அடிப்படையில், சர்வதேச சூரிய கூட்டணி (ஐஎஸ்ஏ) போன்ற புதிய நிறுவனங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த மதிப்பீடுகள் அனைத்தும் மொரீஷியஸுடனான இந்தியாவின் சிறப்பு கூட்டாண்மையுடன் ஒன்றிணைகின்றன. மொரீஷியஸுடன், இந்தியா இந்தியப் பெருங்கடலின் நீரை மட்டுமல்ல, உறவுகள், கலாச்சாரம் மற்றும் மொழியின் பொதுவான பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொள்கிறது. நமது நட்பு கடந்த காலத்திலிருந்து வலிமையை பெறுகிறது, மேலும் எதிர்காலத்தை நோக்கியும் பார்க்கிறது. மொரீஷியஸ் மக்களின் சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது. புனிதமான ‘ஆப்ராவசி காட்’ இன் குறுகிய படிகள் முதல் மொரீஷியஸ் கட்டிய நவீன கட்டடங்கள் வரை கடின உழைப்பு மற்றும் புதுமை மூலம் வெற்றி பெற்றுள்ளது. மொரீஷியஸின் ஊக்கம் நமக்கும் ஊக்கமளிக்கிறது. இந்தியாவின் கூட்டாண்மை வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக உயரும் என்று நம்பப்படுகிறது.
Comments
Post a Comment