பஜ்வாவின் சவுதி பயணம் - பிளவுகளை இணைக்க, வேறுபாடுகளை களைய முயற்சி
பாகிஸ்தான் பகுப்பாய்வாளர் முனைவர் ஸைனப் அக்தர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
கடந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் காரண்மாக பாகிஸ்தானின் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு கொள்கைகள் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. காஷ்மீரை தனது வெளி நாட்டு கொள்கையின் மைய பொருண்மையாக பாகிஸ்தான் கொண்டுள்ளதால், அங்கிருக்கும் தெஹ்ரீக்-இன்சாஃப் அரசானது கஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பெரும் ப்ரச்னையாக உருமாற்றி காட்டுவதற்காக பகீரத ப்ரயத்தனம் அனைத்தையும் செய்து பார்த்தது. முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பான ஓஐசி கஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க உயர்மட்ட கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யும் என்று பாகிஸ்தான் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தது. இஸ்லாமிய நாடுகளில் மிக முக்கியமான நாடாகவும், அவற்றின் மையமாக சவுதி அரேபியா விளங்கிவருவதோடு, ஓஐசி அமைப்பில் மிக அதிக செல்வாக்குடைய நாடாகவும் இருந்து வருகிறது. சவுதி அரேபியாவை தனது பக்கமாகவும், தனக்கு பட்சமாகவும் வைத்திருக்க பாகிஸ்தான் எப்போதுமே முயன்று வந்திருக்கிறது.
ஆனால், பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கஷ்மீர் விவகாரத்தில் சவுதியும் ஓஐசி அமைப்பும் தங்களது நம்பிக்கைகளை பொய்யாக்கி விட்டதாகவும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பொறுமை இழந்து வருவதாகவும் பேசியதன் மூலம், பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தூள் தூளாகியுள்ளன. ஓஐசி அமைப்பானது கஷ்மீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால், சவுதி அரேபியாவை விட்டுவிட்டு, ஒத்த கருத்துடைய மற்ற இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைத்து, ஓஐசிக்கு வெளியே ஒரு மா நாடு நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படகூடும் என்று வேறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார்.. இது சவுதி ஆட்சியாளர்களை பெரிதும் எரிச்சலுக்குள்ளாக்கியது; சவுதி ஆட்சியாளர்களை சமாதானபடுத்தவும், அவர்களது கோபத்தை தணித்து சேதங்களை கட்டுபடுத்தவும் இம்ரான் கான் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி கமர் ஜாவீத் பஜ்வா மற்றும் பாகிஸ்தான் உளவு துறையான ஐ.எஸ்.ஐயின் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் ஃபயிஸ் ஹமீத் இந்த வாரம் சவுதிக்கு முன்னேற்பாடுகள் ஏதுமின்றி திடீரென பயணம் மேற்கொண்டிருப்பது பாதிக்கப்பட்டிருக்கும் உறவை சீரமைக்கவும், சேத கட்டுபாடு செய்வதற்காகவே என்று பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் கூற்றுபடி இந்த பயணம் ராணுவ விவகாரங்கள் சார்ந்தது என்பதாகும். சவுதி பாதுகாப்பு துறை துணை அமைச்சர் காலித் பின் சல்மான் பின் அப்துல் அசீஸுடன் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ப்ராந்திய பாதுகாப்பு குறித்து ஜெனரல் பஜ்வா பேச்சு வார்த்தைகள் நடத்தினார். மேலும் அவர், கூட்டுபடைகள் தளபதியான லெப்டினண்ட் ஜெனரல் ஃபஹாத் பின் துர்கி அல் சவுத் மற்றும் சவுதி பொதுப்படை தலைமை தளபதி ஜெனரல் ஃபையாத் பின் ஹமீத் அல் ரவைய்லி ஆகியோரையும் சந்த்தித்து உரையாடினார். பயிற்சிகளுக்கான பரிமாற்றங்கள் உட்பட இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான உறவு இந்த சந்திப்புக்களின் பொருண்மையாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இரு தரப்பு உறவுகளோடு, பொதுவான அக்கறையுள்ள மற்றும் கவலையளிக்கும் விவகாரங்கள் குறித்தும் இந்த பயணம் அமைந்ததாக சவுதி அதிகாரிகள் கருதுகின்றனர். பொதுவான அக்கறையுள்ள அல்லது கவலையளிக்கும் விவகாரம் இங்கு விரிந்து விட்ட வேறுபாட்டை குறைக்கவும், நீக்கவும் பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளாகும். காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் நிலைப்பாடு குறித்த குரேஷியின் விமர்சனத்தின் காரணமாக நிலவும் அதிருப்தியை குறைத்து சவுதி அரேபியாவை சமாதானபடுத்த தளபதி பஜ்வா முயற்சி செய்தார். தலைமை தளபதி பஜ்வாவின் சவுதி பயணம் நிலுவையிலுள்ள சிறிய கருத்து வேறுபாடுகளை களைவதற்கே என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீதும் கூறியுள்ளார். இந்த பயணத்திற்கு முன்னதாக, குரேஷியின் அறிவிப்பினால் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியாக பாகிஸ்தானுக்கான சவுதி அரேபியாவின் தூதர் அட்மிரல் நவாஃப் சையீத் அல் மலிக்கியை பஜ்வா சந்தித்தது இங்கு குறிப்பிடதக்கது. இந்த சந்திப்பே பஜ்வாவின் சவுதி பயணத்திற்கான வழியை வகுத்து தந்தது.
ஆனால் சவுதி அவ்வளவு சீக்கிரமாக கருத்து வேறுபாடுகளை களைய அக்கறை காட்டவில்லை என்பது தளபதி பஜ்வாவால் சவுதியின் பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மானை சந்திப்பதற்கான அனுமதியை பெற முடியவில்லை என்பதிலிருந்து புலப்படுதிறது. சவுதி பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருப்பதாக பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். சவுதியின் பட்டத்து இளவரசரை சந்திப்பதற்கான முயற்சிகள் பலனளிக்காததை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் உம்ரா செய்வதற்காக ஜெட்டா சென்றனர்; அங்கிருந்து அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளனர்.
பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதாக ஏதுமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் திரு இம்ரான் கான் பூசி மெழுகினார்; தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சவுதி அரேபியாவுடனான பாகிஸ்தான் உறவு கசந்து வருவதாக பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் பஜ்வாவின் பயணமானது ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ள முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த ஒப்பந்த விவகாரம் வேறு உம்மாவிற்குள் மேலும் வேறுபாடுகளை விதைத்துள்ளது; துருக்கி, இரான் மலேசியா போன்ற நாடுகள் தனியான அமைப்பை உருவாக்க போவதாக அச்சுறுத்தி வருகின்றன.
துருக்கியுடனும் இரானுடனும் பாகிஸ்தான் நெருக்கம் காட்ட துவங்கியிருப்பதை சவுதி கனிவுடன் பார்க்கவில்லை. இரான் சவுதிக்கு பரம எதிரி நாடாகும்; துருக்கியோ சமீப காலமாக
ஓஐசி அமைப்பின் புதிய தலைமையாக தன்னை காட்டி கொள்ள முனைந்து வருகிறது. இஸ்லாமிய உலகில் சௌதி அரேபியாவிற்கு இருக்கும் மதிப்பு உலகறிந்தது. இஸ்லாமாபாதிற்கும் ரியாதிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சமீப மோதல், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, பஜ்வாவின் சவுதி பயணம் மோசமடைந்து கொண்டிருக்கும் உறவை சீர் செய்யும் முயற்சியாகும்.
Comments
Post a Comment