ஏறுமுகத்தில் இந்தியா பங்களாதேஷ் உறவுகள்
இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, பிரதமர் மோடியின் செய்தியை எடுத்துச் சென்றார் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா. பிரதமர் ஷேக் ஹசீனா அவரை தனிப்பட்ட முறையில் வரவேற்றார். COVID19 தொற்றுநோய் பரவிய பல மாதங்களுக்குப் பிறகு அவரை சந்திக்க வந்த முதல் வெளிநாட்டு பிரமுகர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஆவார். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பரிமாற்றங்கள் அனைத்தும் மெய்நிகர் கூட்டங்கள் மூலமே நடத்தப்பட்டன. கொரொனா பெருந்தொற்றால் தெற்காசிய பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாஹ்ரியர் ஆலம் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் மசூத் பின் மோமன் ஆகியோரையும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சந்தித்தார்.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளருக்கும் வங்கதேசப் பிரதமருக்கும் இடையிலான ஒரு மணி நேர சந்திப்பின் போது, இரு நாடுகளும் தற்போதுள்ள இணைப்பு வலையமைப்பை மறுதொடக்கம் செய்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. COVID19 தடுப்பு மருந்துகள் மேம்படுத்தப்படுவது குறித்து பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்வது, இரு நாடுகள் கூட்டாக அனுசரித்து வரும் “முஜிப் போர்ஷோ” கொண்டாட்டங்களை முடித்துக் கொள்வது குறித்தும் இரு நாடுகளும் விவாதித்தன. இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான COVID19 க்கு பிந்தைய மூலோபாயத்தை வடிவமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. வங்கதேசத்திற்கான இந்தியாவின் பல்வேறு நிதியுதவி திட்டங்களை மேற்பார்வையிடுவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் நிலையில் கூட்டு ஆலோசனைக் குழுவை மீண்டும் தொடங்கலாம் என இந்திய தரப்பில் முன்மொழிவு வைக்கப்பட்டது. கடைசியாக இதுபோன்ற சந்திப்பு 2019 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இந்த செயல்முறையை மறுதொடக்கம் செய்ய மெய்நிகர் கூட்டம் ஒன்றை மேற்கொள்ளலாம் என இந்தியா முன்மொழிந்துள்ளது. வர்த்தகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோரின் வருகைக்கு வசதியாக இரு நாடுகளுக்கும் இடையில் ‘air bubble’ எனப்படும் சிறப்பு பயண ஏற்பாட்டை உருவாக்க இந்தியா முன்மொழிந்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் பட்டியலில் வங்கதேசத்தினர் முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தயாரிக்கும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை வங்கதேசத்தில் பரிசோதிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முயற்சியில் இந்த விஷயம் தொடர்பாக உலகின் பிற நாடுகளுடன் டாக்கா விவாதித்து வருவதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்துடனான வர்த்தக உறவை சீராக்க ஜூலை மாதத்தில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகம், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், அவை ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்கின. இந்தியா தனது மானிய உதவி திட்டத்தின் கீழ் 10 டீசல் என்ஜின்களை அண்டை நாடான வங்கதேத்திற்கு வழங்கியது. ஜூலை மாதத்தில் இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவுகளில் பல விஷயங்கள் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்டன. 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்தின் முதல் சோதனைப் பயணம் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. கொல்கத்தாவிலிருந்து அகர்தலா மற்றும் கரிம்கஞ்ச்சுக்கு சிட்டகாங் துறைமுகம் வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டதிருந்தது. தற்போதைய சோதனைப் பயணத்தில் எஃகு கம்பிகள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆந்திராவின் குண்டூரிலிருந்து வங்கதேசத்தின் பெனாபோல் வரை மிளகாய் மற்றும் துணிகளை கொண்டு செல்லும் சரக்குப் பெட்டகங்கள் மின்னணு முத்திரையிடப்படும். தற்போது புழக்கத்தில் இருக்கும் போக்குவரத்து முறைகளில் பார்சல் வேன்கள் மற்றும் கொள்கலன்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் பெருமளவில் இருப்பது டாக்காவின் முக்கிய கவலையாகும். இதை இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள வங்கதேசம், இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் இருப்பது பிராந்தியத்தில் பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கவலையை முன்வைத்தது. ரோஹிங்கியா அகதிகளை திரும்ப அழைத்துச் செல்வதை வலியுறுத்துவதற்காக இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறும் டாக்கா கோரியுள்ளது. டாக்காவின் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இந்தியா, ரோஹிங்கியாக்களை, மியான்மர் திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அறிக்கைகள் மூலம் கேட்டுக் காட்டியுள்ளது. ரோஹிங்கியாக்களை கண்ணியத்துடன் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதையும் புதுடெல்லி ஆதரிக்கிறது. அவர்கள் திரும்புவதற்கு வசதியாக, மியான்மருடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட 250 "முன்னரே தயாரிக்கப்பட்ட" (prefabricated houses) வீடுகளை இந்தியா பரிசளித்தது. அகதிகளின் வருகைகளை சமாளிக்கும் வங்கதேசத்திற்கு உதவும் இந்தியாவின் “Insaniyat” திட்டத்தின் கீழ், வங்கதேசத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் ரோஹிங்கியாக்களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கியது.
‘பிராந்தியத்தில் முன்மாதிரியாக’ வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், இந்த காலம் இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளுக்கும் இடையிலான உறவின் பொற்காலம் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார். இதே உணர்வை வெளிப்படுத்திய வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன், இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவுகள் வரலாற்றுரீதியிலானது, உறுதியானது மற்றும் ரத்த பந்தம் கொண்டது என்று சிலாகித்திருந்தார். COVID19 சூழ்நிலையில் இந்திய வெளியுறவு செயலாளரின் வங்கதேச பயணமானது, இருதரப்பு உறவுகளின் வலிமையை சுட்டிக்காட்டுகிறது.
முனைவர் ஸ்ம்ருதி பட்டனாயிக், ஆய்வறிஞர், ஐ.டி.எஸ்.ஏ. அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன்
Comments
Post a Comment