வலுவாகும் இந்திய – ஐக்கிய அரபு அமீரக செயலுத்தி உறவுகள்
மேற்காசிய விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மொஹம்மத் முத்தாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன்
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அமைதி மற்றும் வளமையை நோக்கிய பாதையில் பயணிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இளவரசர் மொஹமத் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் தலைமையில், இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கணிசமாக முதலீடு செய்துள்ளன. கூட்டு ஆணையக் கூட்டங்கள் போன்ற இருதரப்பு வழிமுறைகள் மூலம் விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்துக்கான உறவுகளை உயர்த்த இரு நாடுகளும் உழைத்து வந்துள்ளன.
வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா-ஐக்கிய அரபு அமீரக கூட்டுக் கூட்டத்தின் 13 வது அமர்வு மெய் நிகர்க் கூட்டமாகக் கூடியது. இதற்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தலைமை தாங்கினர். கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக கூட்டு ஆணையக் கூட்டம் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை; இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த, தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இரு நாடுகளும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தின.
உலகளாவிய பெருந்தொற்றை எதிர்த்துப் போராட இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து செயல்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா 5.5 மில்லியன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியது. மே மாதத்தில், எமிராட்டி மருத்துவமனைகளில் சுகாதாரத் துறைச் சேவைகளுக்கு உதவியாக 88 தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களை இந்தியா அனுப்பியது. ஐக்கிய அரபு அமீரகம், கோவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உதவும் வகையில், 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியது. பிரதமர் மோதி மற்றும் இளவரசர் மொஹமத் உட்பட இரு நாடுகளின் தலைவர்களும் இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்வது குறித்து, தொலைபேசி உரையாடல்களை நடத்தியுள்ளனர்.
கூட்டு ஆணையக் கூட்டத்தின் போது, இரு தரப்பினரும் கடந்த சில மாதங்களாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் போது நெருக்கமாக ஒத்துழைத்ததை வரவேற்றனர். மேலும், நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை ஈடுகட்ட ஒரு கூட்டுச் செயலுத்தி குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளுக்குப் புத்துயிரூட்ட, புத்தாக்கத் தீர்வுகளை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள காலத்தில், இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் தொடர்ச்சியான வேகம் குறித்து இக்கூட்டம் திருப்தி தெரிவித்தது. தற்போதுள்ள துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புதிய துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கூட்டு ஆணையக் கூட்டங்களின் கீழ், இரு தரப்பினரும் உயர்மட்ட பரிமாற்றங்களுக்கான ஐந்து துணைக்குழுக்களை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரம்; வர்த்தகம் மற்றும் முதலீடு; தூதரகம் மற்றும் சமூக விவகாரங்கள்; பாதுகாப்பு; கல்வி, கலாச்சாரம் மற்றும் இளைஞர்கள் ஆகியன இந்த இந்தக் குழுக்களில் அடங்கும். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த துணைக் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டு ஆணையக் கூட்டத்திற்கான ஏற்பாடாக, மெய்நிகர் கூட்டங்களை நடத்தினர், இது பரந்த, வெளிப்படையான மற்றும் நட்பு விவாதங்களுக்கு வழிவகுத்தது.
கூட்டு ஆணையக் கூட்டத்தில், தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவின் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பல்தரப்பு மன்றங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேற்கு ஆசியாவில் இந்தியாவின் நெருங்கிய செயலுத்திக் கூட்டாளிகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்க-இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக கூட்டு அறிக்கையை இந்தியா வரவேற்றது கவனிக்கத்தக்கது.
கூட்டத்தின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செயலுத்தி விவகாரங்களை ஐக்கிய அரபு அமீரகம் புரிந்து கொண்டு ஆதரவளிப்பதையும் குறிப்பிட்டார். குறிப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) போன்ற மன்றங்களில், இந்தியாவை இழிவுபடுத்த பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்த போது இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கும் தொற்றுநோயால் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் வழங்கிய உதவிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஒத்துழைப்பு, அண்மைக் காலங்களில் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடாகவும் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தொழிலாளர்களும் முன்னணி வர்த்தக வல்லுநர்களும் இந்தியர்களே ஆவர். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன, மேலும் கோவிட்-19 க்குப் பிந்தைய உலகில், இரு நாடுகளும் இருதரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேலும் மேம்படுத்தும்
Comments
Post a Comment