நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்
பத்திரிக்கையாளர் திரு யோகேஷ் சூத் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
பட்ஜெட் கூட்டதொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2 ஆம் தேதி துவங்கியது; ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய ப்ரச்னைகள் குறித்து தேசிய ஜன நாயக கூட்டணி அரசை திணற வைக்க முயற்சிக்கலாம் எனும் நிலைமையில், ஆளும் கட்சி, உண்மை நிலவரம் மற்றும் புள்ளி விவரங்களை இரு அவைகளிலும் முன் வைக்க தீர்மானித்துள்ளது. தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் வாடகைதாய் ஒழுங்குமுறை மசோதாக்களை நிறைவேற்றி சட்டங்களாக்குவதற்காக அரசானது 25 மசோதாக்களின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது. இந்த அமர்வில் நிதி மசோதாவும் நிறைவேற்றப்படும். இதனிடையே மானிலங்களவையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், கொரொனாவைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இனி அனைத்து சர்வதேச பயணிகளும் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.
தற்போதைய அமர்வில், ரயில்வே அமைச்சகத்திற்கான 2020-21 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த ரயில்வே நிலைக்குழுவின் அறிக்கையை திரு ராதா மோகன் சிங்கும், திரு சுனில் குமார் மொண்டலும் அவையில் முன் வைப்பார்கள். விமான திருத்த மசோதா, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா, ஹோமியோபதி தேசிய ஆணைய மசோதா மற்றும் கனிம சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகியவையும் இந்த அமர்வில் பரீசீலிக்கப்பட உள்ளன. நிலுவையில் உள்ள மசோதாக்களின் பட்டியலில் தனிப்பட்ட சொந்த விவரங்கள் தரவு பாதுகாப்பு மசோதா 2019-ம் அடங்கும். இது தனிப்பட்ட தரவுகள் பயன்பாட்டின் நோக்கத்தை கவனிக்க தரவு .பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கும். நேரடி வரி சச்சரவுகளுக்குத் தீர்வு காண்பதற்கான தீர்வு வழிமுறையை உருவாக்கும் நேரடி வரி ‘விவாத் சே விஸ்வாஸ்” மசோதா நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கான வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2020 ஐ மக்களவையில் அறிமுகபடுத்தினார். மத்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக தொழில் திறனை அதிகரித்தல், மூலதனத்திற்கான அணுகலை செயல்படுத்துதல், நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்தி கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தி தரமான வங்கி சேவைக்கு வழிவகுக்க இந்த மசோதா விழைகிறது. மார்ச் 4 ஆம் தேதி நேரடி வரி மசோதாவை எந்த வித விவாதமும் இல்லாமல், மத்திய நிதி அமைச்சர் நிறைவேற்றினார். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் வரி செலுத்துவோர் சச்சரவிலிருக்கும் வரி முழுமையையும, அதனுடன் கூடுதலாக 10 சதவிகித சச்சரவு வரியையும் , இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்தி விட்டால், அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் வட்டி மற்றும் அபராத தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.தொழிற்சங்கங்களின் பங்கை மறு வரையறை செய்யும் தொழில் துறை குறியீட்டு மசோதவும் இந்த பட்டியலில் அடக்கம். விமான சட்டம் 1934ல் திருத்தம் செய்வதற்காக விமான திருத்த மசோதா 2020ஐ மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அறிமுகப்படுத்த உள்ளார். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 2015 –ல் திருத்தம் செய்வதற்கான கனிம சட்டங்கள் திருத்த மசோதா 2020ஐ நாடாளுமன்ற விவாகாரங்கள் அமைச்சர் திரு ப்ரஹாலாத் ஜோஷி அவையில் அறிமுகப்படுத்த உள்ளார். கனிம சட்டங்களை ப்ரகடனபடுத்துவதற்காக உடனடி சட்டமியற்றுவதற்கான காரணங்கள் குறித்து விளக்கமளிக்கும் அறிக்கையை அவர் அவையின் முன்வைப்பார்.மருத்துவத்தின் மூலம் கருக்கலைப்பு திருத்த மசோதா 2020ஐ மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். 20 வாரங்களுக்குட்பட்ட கருக்கலைப்பிற்கு ஒரு மருத்துவர், 20லிருந்து 24 வாரங்களுக்குட்பட்ட கருக்கலைப்பிற்கு இரண்டு மருத்துவர்களின் பரிந்துரை அல்லது கருத்து கேட்கப்படவேண்டும் என்று இந்த மசோதா முன்மொழிகிறது.இந்தியாவில் கொவைட் 19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து அவசிய மற்றும் அவசர நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக வியாழனன்று, மேலவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், தெரிவித்தார். கொவைட் 19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய நாடுகளுக்கு சென்று வந்த அனைவரையும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணித்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; மேலும் அவர்களுடன் தொடர்புடைய ஜூரம், இருமல், மூச்சு திணறல் உள்ளவர்களையும் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொவைட் 19 பரவும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளவும், மேலும் பரவாமல் தடுக்கவும் நாடெங்கிலும் பல அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு நோயாளிகளுக்கான தனிமை படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசானது தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைமையகம், ப்ராந்திய அலுவலகம் மற்றும் இந்தியாவிலுள்ள அலுவலகத்துடன் தொடர்பில் இருந்து வருவதுடன் அவ்வப்போதைய நிலவரத்தையும், அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளையும் பரீசீலித்து வருகிறது. நோய் தாக்கும்பட்சத்தில் அதை எதிர்கொள்வதற்கான கண்காணிப்பு, மருத்துவ பரிசோதனை மையத்தின் மூலம் நோயறிவதற்கான ஏற்பாடுகள், மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்தல்,, தேவையான விநியோக மேலாண்மை, சுகாதார ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு இதனால் ஏற்படக்கூடும் இடர் குறித்து தெளிவுபடுத்தி அதனை எதிர்கொள்ள தயார்படுத்துதல் ஆகிய முன்னேற்பாடுகள் போன்ற அவசிய நடவடிக்கைகளை பின்பற்றுவதே நமது தற்போதைய முனைப்பு என்று அமைச்சர் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளின் தற்போதைய கொவைட் 19 தாக்குதல் நிலவரத்திற்கு ஏற்ப அதற்கு தகுந்தாற் போல் நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அளவும் தீவிரமும் அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment