இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் - ஆட்சி அமைப்பதில் தொடரும் தேக்கநிலை.

(ஜேஎன்யூ பேராசிரியர் குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

நெஸ்ஸெட் எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் 23 ஆவது சபைக்கான தேர்தல் இம்மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. ஓராண்டிற்குள் மூன்றாவது முறையாக நடைபெறும் இத்தேர்தலிலாவது, அரசு அமைப்பதற்கான உறுதியான முடிவு எட்டப்படும் என்ற இஸ்ரேல் மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. 120 உறுப்பினர்களைக் கொண்ட நெஸ்ஸெட்டில், குறைந்த பட்சம் 61 இடங்களைப் பெற வேண்டிய நிலையில், அந்த எண்ணிக்கையை அடையத் தவறிய லிகுட் தலைவர் பெஞ்சமின் நேதன்யாஹூ, தேர்தல் முடிந்த சிலமணி நேரங்களிலேயே தான் வெற்றி பெற்றதாகக் கூறியது நிறைவேறவில்லை. இஸ்ரேல் நாட்டின் பிரதமராக அதிக காலம் பதவி வகித்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 60 லட்சம் வாக்குகளில் 99 சதவிகிதம் எண்ணப்பட்ட நிலையில், லிகுட் கட்சி 36 இடங்களை வென்றுள்ளது. ஷாஸ் மற்றும் யுனைடெட் டோரா ஜுதாயிஸம் என்ற மத அடிப்படையிலான கட்சிகள், முறையே 9 மற்றும் 7 இடங்களைப் பெற்றுள்ளன. வலதுசாரிக் கட்சியான யாமினா 6 இடங்களைப் பெற்றுள்ளது. லிகுட் மற்றும் இந்த மத,வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, மொத்தம் 58 இடங்களை, அதாவது ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையில் மூன்று இடங்கள் குறைவாக வென்றுள்ளது. அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர் எண்ணிக்கை நிலை மாற வாய்ப்புள்ளது என்ற போதிலும், நேதன்யாஹூ அவர்கள் தனிப் பெரும்பான்மை அடைவதற்கான வாய்ப்பு அரிதாகக் காணப்படுகிறது. பொருளாதாரத்தில் நாடு கண்ட முன்னேற்றமும், அமெரிக்காவுடனான நெருக்கமான உறவு நீட்டிப்பும் தனக்கு அமோக வெற்றியைத் தரும் என்ற நேதன்யாஹூவின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.

மீதமுள்ள 62 இடங்கள் எதிர்க்கட்சிக் கூட்டணி பெற்றுள்ளதாக ஏட்டளவில் கூறப்பட்டாலும், அக்கூட்டணியும் ஆட்சி அமைக்க வாய்ப்புக்கள் அரிதாகக் காணப்படுகிறது. முன்னாள் ஜெனரல் பென்னி கன்ட்ஸ் அவர்களின் தலைமையிலான நடுநிலை ப்ளூ அண்ட் வொயிட் கட்சிக்கு 33 இடங்கள் கிடைத்துள்ளது. இடதுசாரி லேபர் – கெஷெர் – மெரெட்ஸ் கூட்டணி 7 இடங்களைப் பெற்றுள்ளது. இஸ்ரேலிய அரேபியர்களின் கூட்டு, 15 இடங்களைப் பெற்றது உண்மையான வெற்றி எனக் கூறத்தக்க வகையில், 1948 முதல் இதுவரையிலான காலகட்டத்திலேயே அதிக இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏழு இடங்களைப் பெற்ற, அவிக்டோர் லிபெர்மேன் தலைமையிலான இஸ்ரேல் பெய்தெய்னு கட்சி, ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் நிலையை மீண்டும் எட்டியுள்ளது. முன்னிலையிலுள்ள நேதன்யாஹூ மற்றும் கன்ட்ஸ் ஆகிய இருதரப்புக்குமே ஆட்சி அமைக்க லிபர்மேன் அவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனினும் அது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. அராபியக் கட்சிகளை உள்ளடக்கிய எந்தக் கூட்டணிக்கும் தனது ஆதரவு கிடையாது என்பதில் லிபர்மேன் தீவிரமாக உள்ளார். அவருடன் நேதன்யாஹூவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கலைக்கப்ப்ட்ட நெஸ்ஸட், கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தலை சந்தித்தபின், இப்போது மூன்றாவது முறையாக தேர்தலை சந்தித்தும் இழுபறி தொடர்கிறது.

இஸ்ரேலின் வரலாற்றிலேயே, அதிக காலமாக காபந்து அரசுக்குத் தலைமையேற்ற தலைவராக விளங்கும் நேதன்யாஹூ, அரசு அமைப்பதற்கான முயற்சியில் தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் துவக்கியுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளன. இதன் முடிவு எட்டப்பட்டபின், அதிபர் ரூவென் ரிவ்லின் அவர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படும். அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, யார் ஸ்திரமான ஆட்சி அமைக்கக்கூடும் என்பதை அதிபர் தீர்மானிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, தேர்தல் நடந்து முடிந்து, குறைந்தபட்சம் நான்கு வாரங்களில் அரசு அமைக்கப்படும் என்ற போக்கு இத்தேர்தலிலும் பிரதிபலிக்கிறது.

கடந்த ஆண்டில் நடைபெற்ற இருதேர்தல்களிலும், அரசு அமைக்க இயலாமால் போனதற்கு, லிபர்மேன் அவர்கள் லிகுட் கட்சித் தலைவரை அங்கீகரிக்காததே காரணமாகும். இதே அணுகுமுறையை லிபர்மேன் கையாளும் பட்சத்தில், நேதன்யாஹூ ஆட்சி அமைக்க, ப்ளூ அண்ட் வொயிட் கட்சியிலிருந்து வேட்பாளர்கள் தாவினால்தான் சாத்தியமாகும் என்பதால், அதற்குரிய பேச்சுவார்த்தகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அங்குதான் சிக்கல் உள்ளது. வரும் 17 ஆம் தேதி, பிரதமர் பதவியில் இருக்கும் தலைவர், ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் முதன்முதலாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையை நேதன்யாஹூ எதிர்கொள்ளவிருக்கிறார். பதவியிலிருக்கும் பிரதமருக்கு வழக்குகளை சந்திப்பதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்டத்தை கடந்த சில மாதங்களாக நிறைவேற்ற நேதன்யாஹூ அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரதமராகப் பதவி வகிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை ஊக்குவிக்கும் திட்டத்தில் ப்ளூ அண்ட் வொயிட் கட்சி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி அரசு கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும், லிகுட் கட்சி தனது தலைவரை மாற்ற வேண்டும் என்று ப்ளூ அண்ட் வொயிட் கட்சி கோருகிறது. ஆனால், அவ்வாறு மாற்றினால் எதிர்பாராத சவால்களை சந்திக்க நேரிடும் என்றும், கட்சி பலவீனமடையும் என்றும் கருதும் பெரும்பான்மைக் கட்சி உறுப்பினர்களுக்கும், நேதன்யாஹூவுக்கும் ப்ளூ அண்ட் வொயிட் கட்சியின் கோரிக்கை ஏற்புடையதாக இல்லை.

இஸ்ரேலில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை, அந்நாட்டுனான இந்தியாவின் உறவுகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆட்சித் தலைவர் மாறினாலும், இந்திய, இஸ்ரேலிய உறவுகளில் எந்த மாற்றமும் இருக்காது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், செயலுத்திக் கூட்டாளித்துவமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. எனவே, இஸ்ரேல் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், இந்திய, இஸ்ரேல் இருதரப்பு உறவுகளின் அடிப்படைக் கோட்பாடுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

*****************************************************************************************

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.