துருக்கியின் ஐரோப்பிய எல்லை திறப்பு – சிரிய அகதிகள் நெருக்கடி அதிகரிப்பு.

(ரஷ்யா, சிஐஎஸ் மற்றும் துருக்கி நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

2015 ஆம் வருடம் ஏற்பட்ட புலம்பெயர்ந்தல் பிரச்சினைகளின் போது ஏற்பட்ட பல உயிரிழப்புக்கள் மற்றும் அப்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் போன்ற நினைவுகள், தற்பொழுது துருக்கி நாட்டின் செயல்களால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. போன வாரம் துருக்கி, ஐரோப்பாவை நோக்கி, அகதிகளுக்காகத் தனது எல்லையைத் திறந்து விட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் துருக்கி ஏற்படுத்திக் கொண்ட அகதிகள் ஒப்பந்தத்தின் அத்துமீறலாக இதனை ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன. தனது நாடு, அகதிகளை உள்வாங்கும் கொள்திறன் அளவை எட்டி விட்டது என்றும், இனியும் ஐரோப்பிய எல்லையை அகதிகளுக்கு மூடி வைக்க முடியாது என்றும் துருக்கி தெரிவித்துள்ளது. மேலும்,, ஐரோப்பிய ஒன்றியம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. ஒப்பந்தத்தின்படி, துருக்கிக்கு அளிக்க வேண்டிய 600 கோடி யூரோ உதவித் தொகையை அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறி விட்டது என்றும் துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. துருக்கி நாட்டுடனான வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் அதிகரிக்கவில்லை என்றும், துருக்கி நாட்டு மக்கள் விசா இல்லாமல் ஐரோப்பாவில் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என்றும் துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதனை மறுத்த ஐரோப்பிய ஒன்றியம், ஒப்பந்தத்தின்படி அளிக்க வேண்டிய உதவித் தொகை நேரடியாக அகதிகள் உதவி நிறுவனத்திற்கு முழுவதுமாக அளிக்கக்கபட்டு விட்டது என்றும், துருக்கி அரசாங்கத்திற்கு நேரடியாக அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதனை, துருக்கி அதிபர் டய்யிப் எர்டோகன் அவர்கள் 2016 ஆம் வருடம் எடுத்த சில கடுமையான நடவடிக்கைகளின் பின்னணியில் நோக்க வேண்டும். பத்திரிக்கையாளர் மற்றும் விமர்சகர்கள் மீது துருக்கி அரசாங்கம் இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியது. ஜெர்மன் நாட்டு குடிமக்கள் அதிக அளவில் துருக்கி நாட்டின் சிறைச்சாலையில் மாட்டிக் கொண்டுள்ளனர். உலக அளவில் வர்த்தகத்தில் பலவீனம் ஏற்பட்டதால், ஐரோப்பா மற்றும் துருக்கிக்கு இடையேயான வர்த்தகத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குடியேற்ற எதிர்ப்புக் கட்சிகள் உள்பட, வலதுசாரி பழமை வாய்ந்த கட்சிகளின் வளர்ச்சியினால், சங்கடமான சூழல்கள் ஏற்பட்டுள்ளன. துருக்கி உள்ளிட்ட பிறநாட்டு மக்கள் மீதான வெறுப்பு, மத சகிப்பின்மை ஆகியவையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தலைதூக்கியுள்ளன.

2015 ஆம் வருடம் ஏற்பட்ட புலம்பெயர்தல் பிரச்சினைகளில் இருந்து ஐரோப்பிய நாடுகள் இன்னும் மீண்டு வரவில்லை. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள், ட்ரான்ஸ் அட்லாண்டிக் பாதுகாப்பு வளையத்திலிருந்து துருக்கி நாட்டை வெளியே தள்ள விரும்பவில்லை. ஏனெனில், புலம்பெயர்தல் உள்ளிட்ட பெரும் பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும்.

சிரியாவிலிருந்து 36 லட்சத்திற்கும் மேலான அகதிகளை, துருக்கி நாடு உள்வாங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்நிலையில், இன்னும் அதிகமான அகதிகளை சேர்த்துக் கொள்ள முடியாது என்று துருக்கி கூறியுள்ளது. துருக்கியில் உள்நாட்டுப் பிரச்சனைகளும், அந்த நாட்டின் பொருளாதாரமும் மோசமான நிலையை எட்டியுள்ளன. அதிகப் பணவீக்கம் , வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அகதிகளுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவை நிலவுகின்றன. சிரிய அகதிகளின் அதிகப்படியான வருகையினால், துருக்கியின் உள்நாட்டு நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.

சிரியாநாட்டின் இட்லிப் நகரில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்களினால், அதிகமான சிரிய அகதிகள் துருக்கியில் தஞ்சம் அடைய முயல்கின்றனர். 2019 ஆம் வருட மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ், துருக்கி அரசாங்கம் இந்த அகதிகளைக் கட்டாய நாடுகடத்தல் செய்கின்றது. அதிகப்படியான அகதிகள் வருகையால் நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தடம்புரண்டு விடும்.

சிரியா நாட்டின் குர்துகள் மற்றும் சிரிய அரசாங்கத்தைத் தோற்கடிக்க, துருக்கி நாட்டிற்கு ஐரோப்பாவின் பாதுகாப்பு உதவி தேவைப்படுகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத் அவர்களுக்கு விசுவாசமாக உள்ள சிரியப் படைகள், இட்லிப் நகரில் துருக்கிப் படைகளுடன் கடுமையாகப் போரிடுகின்றன. சிரியப் போரில் எர்டோகன் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்க விரும்புகின்றார். எனினும் இதுவரை அவருக்கு அது சாத்தியமாகவில்லை. துருக்கியின் பாதுகாப்புக்கும், அரபு உலகத்திலும் மற்றும் சர்வதேச சமுதாயத்திலும் துருக்கியின் செல்வாக்குக்கும் தற்போது பலவீனம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலும் கூட, துருக்கி அதிபர் தனது செல்வாக்கை இழக்கும் நிலையில் உள்ளார். இட்லிப் நகரின் நிலைமை சம்பந்தமாக, துருக்கி அதிபர், ரஷ்ய அதிபர் புடின் அவர்களை மாஸ்கோவில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இட்லிப் நகரில் வன்முறை தொடர்வதால், லட்சக்கணக்கான சிரிய அகதிகள் அங்கிருந்து தப்பி வெளியேறி உள்ளனர். சமீபத்திய அகதிகள் நெருக்கடி, ஐரோப்பாவுக்கும், துருக்கிக்கும் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஐரோப்பாவிற்கு அழுத்தங்களை அதிகரித்து, உதவிகளைப் பெற துருக்கி முயற்சி செய்கிறது. உள்நாட்டில் எர்டோகன் அவர்களுக்கு இது பலனளிக்கக் கூடும். 2015-16 இல் சாதித்தது போல், பால்கன் வழித்தடத்தில் பெருவாரியான அகதிகள் வருகையைத் துருக்கி தடுத்து நிறுத்த இயலும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது.

சிரியாவின் வடமேற்கு பகுதியில், துருக்கி மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கையை இந்தியா கண்டித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை பாதிப்படையும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும் இந்தியா கூறியுள்ளது. துருக்கிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான இழுபறியினால், பேரழிவைச் சந்திக்கும் லட்சக்கணக்கான சிரிய அகதிகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.