அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் அமைதி ஒப்பந்தம் தருவது நம்பிக்கையையா அல்லது அச்சத்தையா?

(ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த மூலோபாய ஆய்வாளர் டாக்டர் ஸ்மிதா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.)

ஆப்கானிஸ்தானில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வருவதற்காக அமெரிக்காவும் தாலிபானும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டே நாட்களில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு (ANDSF) எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக தாலிபான் அறிவித்துள்ளது. ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கத்தார் நாட்டின் தோஹாவில், அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சல்மே கலீல்சாத் மற்றும் தாலிபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பிரதார் ஆகியோரிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. சமாதான ஒப்பந்தத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை: போர்நிறுத்தம், வெளிநாட்டுப் படைகளைத் திரும்பப் பெறுதல், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் ஆகியவையாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், 10 நாட்களுக்குள் தனது துருப்புக்களைத் திரும்பப் பெறத் தொடங்குவதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு, தனது துருப்புகளின் எண்ணிக்கையை 135 நாட்களுக்குள் 8,600 ஆகக் குறைப்பதாகவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா 14 மாதங்களுக்குள் தனது துருப்புக்களை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், சிறையில் உள்ள தாலிபான் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மார்ச் 20க்குள் 5,000 கைதிகளை விடுவிக்கக் கோருவதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, அடுத்த மூன்று மாதத்திற்குள், மீதமுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இருந்தாலும்கூட, இந்த ஒப்பந்தமானது, உள்நாட்டிலும், சர்வதேச நிலையிலும் பல்வேறுவிதமான அச்சங்களையும், அதே சமயம், நம்பிக்கையையும் ஏற்படுத்திள்ளது. ஆப்கன் மக்களிடமும், வெளி உலகத்துடனும் தாலிபான் கொண்டுள்ள அணுகுமுறை மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களுடனான அவர்களின் தொடர்பு ஆகியவை குறித்த அவர்களுடைய கடும்போக்கு சித்தாந்தங்களே, இந்த ஒப்பந்தம் தொடர்பாக எழும் அச்சங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் விலகினால் பாதுகாப்பு வெற்றிடம் உருவாகும் என்றும், அதனால், அது தெற்காசியப் பிராந்தியம் முழுவதிலும் பாதுகாப்பை சீர்குலைக்கலாம் என்றும் பலர் அச்சப்படுகின்றனர்.

சமாதானத்திற்கான இதுபோன்ற முன்னெடுப்புகளை பெரும்பான்மையான ஆப்கன் மக்கள் ஆதரிக்கின்றனர். ஆனாலும்கூட, உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகளின் போது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு, ஆயுதங்களைக் கைவிட்டு ஆப்கானிஸ்தானிய சமூகத்தில் தாலிபான் மீண்டும் ஒருங்கிணைதல் உட்பட, பல பிரச்சனைகளை அந்நாடு எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் ஒரு சிக்கலான பிரச்சினை தான். அது மட்டுமல்ல, இனம், சிறிய பிரிவுகள் மற்றும் பழங்குடியினர் என, ஏற்கனவே பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள பலவீனமான ஆப்கானிய மத்திய அரசால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். கடந்த பதினெட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இப்போது தாலிபான்கள் வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. அறுபதாயிரம் போராளிகளுடன், இந்தக் குழு நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அதோடு, காபூல் மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் தளங்கள் உட்பட, பல இடங்களில் பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

சமாதானப் பேச்சுவார்த்தைகளில் எந்த அக்கறையும் காட்டாத தாலிபானின் பிளவுபட்ட பிரிவினரும், பிற குழுக்களும் தொடர்ந்து அமெரிக்கத் துருப்புக்களைத் தாக்கக் கூடும். இது சமாதான உடன்படிக்கையை பலவீனப்படுத்துவதாக இருக்கிறது. 5,000 தாலிபான் கைதிகளை விடுவிக்கும் வரை, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்த முடியாது என்று தாலிபான் ஏற்கெனவே கூறிவிட்டது. அதேசமயம், தனது கொடிய எதிரிக்கு ஆயிரக்கணக்கான போராளிகளைத் திரும்பக் கொடுத்து அவர்களுக்கு வலுவூட்ட, ஆப்கன் அதிபர் கானி அவர்கள் காட்டும் தயக்கமும் புரிந்துக் கொள்ளக்கூடியதே. ஆப்கானிஸ்தான் முழுவதும் தொடரும் தாக்குதல்கள், தாலிபானுக்குப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மற்றும் தாலிபான் கைதிகளை விடுவிப்பதில் உள்ள கருத்து வேறுபாடு ஆகியவை, சமாதான முன்னெடுப்புகளைத் தடுத்து நிறுத்தக்கூடும்.

தாலிபான்களுக்கு உதவி செய்த பாகிஸ்தான், பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கும் உதவியது. எனவே, அந்நாடு இந்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக வரவேற்றிருந்தாலும், நிதி நடவடிக்கைப் பணிக்குழு எஃப்.ஏ.டி.எஃப்-பின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியே வர, அமெரிக்கா தனக்கு உதவும் வரை, இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அது அனுமதிக்காது. ஜெர்மனியும் நார்வேயும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த போதிலும், எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் எங்கே, எப்போது நடைபெறும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்சமயம், இந்த சமாதான ஒப்பந்தம், முடிக்கப்பட்ட ஒப்பந்தம் அல்ல என்ற நிலையிலேயே உள்ளது. ஆப்கானிஸ்தானின் மேடு பள்ளங்கள் மிகுந்த அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில், போர்க்களத்திலும், பேச்சுவார்த்தை மேசையிலும் இன்னும் நிறைய நடக்க இருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஆப்கானிஸ்தானின் வலுவான ஆதரவாளராக உள்ள இந்தியா, 2001 முதல் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வணிகத்தை வளர்ப்பதற்கும் 300 கோடி டாலர் அளவில் முதலீடு செய்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் இந்தியா பங்களிக்கிறது. பாகிஸ்தானின் செல்வாக்கைக் குறைப்பதும், பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறுவதைத் தடுப்பதுமே இந்தியாவின் முக்கிய குறிக்கோள்.

தாலிபான்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தாலிபான் குழுவை ஒரு சட்டபூர்வ அரசியல் அமைப்பாக நியாயப்படுத்தப்படுவதை இந்தியா ஏற்கவில்லை. நிலையான அமைதியைக் கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானின் தலைமையிலான மற்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை இந்தியா ஆதரிக்கிறது. ஒன்றுபட்ட, இறையாண்மை பொருந்திய, ஜனநாயகத்தை உள்ளடக்கிய, நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தான் உருவாகவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் உதவினால் மட்டுமே, 2001 முதல் அந்நாடு அடைந்த சாதனைகளைப் பாதுகாத்து, நீடித்த அமைதியைப் பெற முடியும்.








Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.