வெட்டவெளிச்சமாகும் பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்த இரட்டை வேடம்.
(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களைக் கையாளும் விதத்தில் காட்டும் இரட்டைநிலை அனைவரும் அறிந்ததே. எனினும், பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் நிதித்தடுப்பு செயல்குழுவான எஃப்ஏடிஎஃப் இன் முக்கியக் கூட்டத்தில், மசூத் அஸரைப் பற்றிய அப்பட்டமான பொய்யை மீண்டும் கட்டவிழ்த்து, தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டி விட்டது பாகிஸ்தான். மசூத் அஸர் பாகிஸ்தானில் அதிகாரபூர்வமான பாதுகாப்பில் இருந்துவரும் நிலையில், தாங்கள் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உலகுக்குக் காட்டிக் கொள்ள பாகிஸ்தான் முயல்கிறது. ஆனால், மசூத் அஸர், ஹஃபீஸ் சயீத், ஸாகீர் உர் ரெஹ்மான் லக்வி போன்ற பயங்கரவாதிகளைக் கூண்டில் நிறுத்தி, தகுந்த தண்டனை வழங்க உண்மையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
புல்வாமாவில், 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, 40 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களைப் பலிவாங்கிய பயங்கரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெயிஷ் ஏ முகம்மது பயங்கரவாதக் குழுவின் தலைவன் மஸூத் அஸர். இதற்குப் பதிலடியாக, இந்தியா, 2019, பிப்ரவரி 26 ஆம் தேதியன்று, பாலாகோட்டிலுள்ள ஜெயிஷ் ஏ முகதுவின் பயிற்சி மற்றும் தலைமையிடத்தை துல்லிய விமானத் தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கியது. அப்போதிலிருந்தே, மசூத் அஸரை உலக பயங்கரவாதியாக அறிவிக்குமாறு, ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இத்தீர்மானத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் கூட்டாக ஆதரவளித்த நிலையில், பாகிஸ்தானும், சீனாவும் முட்டுக்கட்டை போட்டன. இறுதியாக, 2019 மே 1 ஆம் தேதியன்று, மசூத் அஸர் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். இருப்பினும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாகிஸ்தான் மசூத் அஸருக்குப் பாதுகாப்பளித்து வருகிறது.
எஃப்ஏடிஎஃப் இன் முக்கியக் கூட்டம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, மசூத் அஸர் தலைமைரைவாகி விட்டதாகவும், அவனைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. முன்னதாக, எஃப்ஏடிஎஃப் இன் முன், பாகிஸ்தான், தனது தந்திரமான கண் துடைப்பு நடவடிக்கையாக, ஹஃபீஸ் சயீதுக்கு, பயங்கரவாத செயல்களுக்காக, ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இவ்விரு நிகழ்வுகளும், தன்னை எஃப்ஏடிஎஃப் இன் கறுப்புப் பட்டியலிலிருந்து தப்பிக்க பாகிஸ்தான் நடத்திய நாடகத்தின் அங்கங்களாகவே பார்க்கப்படுகிறது.
மசூத் அஸரின் தலைமறைவும், ஹஃபீஸ் சயீதுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையும், எஃப்ஏடிஎஃப் இன் முக்கியக் கூட்டம் கூடுவதற்கு சற்று முன்னதாக நிகழ்த்தப்பட்டது, பாகிஸ்தானின் உண்மையான நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. ஏற்கனவே, 2018 ஆம் ஆண்டில், எஃப்ஏடிஎஃப், பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் இட்டது. பண மோசடியைத் தடுப்பதற்கும், பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுப்பதற்கும் எடுக்க வேண்டிய, 27 அம்சங்கள் கொண்ட செயல் திட்டத்தை அமல் படுத்துமாறு, எஃப்ஏடிஎஃப் பாகிஸ்தானை அறிவுறுத்தியது. எனினும், அவற்றில் 14 அம்சங்கள் குறித்து மட்டுமே பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்ததாக, இவ்வாண்டு பிப்ரவரியில் நடந்த முக்கியக் கூட்டத்தில் எஃப்ஏடிஎஃப் அறிவித்தது. 27 அம்ச செயல் திட்டத்தில் விடுபட்ட அனைத்து அம்சங்கள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாடு கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. ஏற்கனவே, மோசமான நிதிநிலையைக் கொண்டுள்ள பாகிஸ்தான், கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டால், அந்நாட்டிற்கு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து நிதியுதவியைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.
மசூத் அஸர் தலைமறைவாகி விட்டதாகவும், அவனைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் பாக் அரசு கூறியுள்ள நிலையில், அவன் ஐஎஸ்ஐ யின் பாதுகாப்பில், பவால்பூரிலுள்ள ஜெயிஷ் ஏ முகமதுவின் தலைமையிடத்துக்குப் பின்னால் உள்ள இல்லத்தில் பத்திரமாக இருப்பதாக, நம்பகமான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து, மசூத் அஸருடன் மேற்கொண்ட உரையாடலின் ஒலிநாடாவை, பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்டது. மசூத் அஸரின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி, ராவல்பிண்டியிலுள்ள ராணுவ முகாமுக்கு மற்றப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இது, பாகிஸ்தானின் பொய் முகத்தைக் கிழித்துக் காட்டியுள்ளது.
இத்தகைய தந்திரமான செயல்கள் மூலம், எஃப்ஏடிஎஃப் இன் தீவிர நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் தற்காலிகமாக,த் தப்பித்துள்ளது. இது எத்தனை காலம் தாங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே, பயங்கரவாதக் குழுக்கள் குறித்த பாகிஸ்தானின் இரட்டை வேடம் அமபலமாகியுள்ளது. சர்வதேச சமுதாயத்துடன் தனது உறவுகளைப் பேண, பாகிஸ்தானுக்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியாமாகிறது. இந்தியாவில், புல்வாமாவிலும், பதான்கோட் விமான தளத்திலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய குழுக்களைப் பாகிஸ்தான் தண்டிப்பதுடன், காஷ்மீரில் அரங்கேறும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதும் அவசியமாகிறது. இதன்மூலம், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் விழைகிறது என்பதை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.
Comments
Post a Comment