ஆஃப்கானிஸ்தானில் தொடரும் நிச்சயமற்ற தன்மை.
(மூத்த பத்திரிகையாளர் ரஞ்சித்குமார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்.)
மார்ச் மாத முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் முக்கியமான முன்னேற்றங்களைக் கண்ணுற்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆப்கானில் உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை சுலபமாக்குவதற்காக, பிப்ரவரி 29 ஆம் நாளன்று அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைதியை விரும்பும் ஆப்கான் நாட்டு மக்களுக்காக, ஆப்கான் ஜனநாயக அரசு, ஒன்றுபட்ட வடிவில், தாலிபானுடனான பேச்சுவார்த்தைகளை சீரிய முறையில் வழிநடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தற்போது அங்கு ஆழமான பிளவுகள் தென்படுகின்றன. இது அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தற்போது ஆஃப்கானில் நிலவிவரும் அரசியல் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் அஷ்ரஃப் கனி வெற்றி பெற்றதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அஷ்ரஃப் கனி வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை, அப்துல்லா அப்துல்லா தலைமையிலான மற்றொரு சக்திவாய்ந்த பிரிவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அஷ்ரஃப் கனியை இரண்டாவது முறையாக அதிபராக ஏற்க மறுத்த டாக்டர் அப்துல்லா அப்துல்லா, அஷ்ரப் கனி அதிகாரபூர்வமாக பதவியேற்றுக் கொண்ட அதே நேரத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்தான் அதிபராகத் தான் பதவி ஏற்றுக்கொண்டார். இது தற்போதைய ஆளும் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, தற்போது தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் தாலிபன்களுடனான பேச்சுவார்த்தையில் அரசு ஒற்றுமையாக, ஆக்கப்பூர்வமாக ஈடுபடமுடியுமா என்ற கேள்வியையும் அது எழுப்பியிருக்கிறது. ஆப்கன் உள்நாட்டுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நிலையை இந்த அரசியல் முரண்பாடு வெகுவாகப் பாதிக்கும்.
சமாதான முயற்சியாக, தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி, ஆப்கானிய அரசாங்கத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் அப்துல்லா அப்துல்லாவுடன் அதிகாரத்தைப் பகிரும் திட்டம் ஒன்றைக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அரசின் இரண்டு சக்திவாய்ந்த பிரிவுகளும் இணைந்து, தாலிபான் தலைவர்களின் தீவிரவாத நோக்கத்தை எதிர்த்துப் போராடாவிட்டால், ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் தொடர்ந்து தடுமாறிக் கொண்டே இருக்கும்.
உயர்மட்ட ஆப்கானியத் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், மார்ச் 10 முதல் தொடங்கவிருக்கும் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆஃப்கானின் ஜனநாயக அரசாங்கம் வலுவான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், அவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆழமான பிளவுகள், நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கான அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தும். தங்கள் சொந்த அரசாங்கத்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்கிய பிறகுதான், ஆப்கானிஸ்தானின் ஜனநாயக அரசாங்கம் நிறுவப்பட்டது. ஆப்கானிய மக்கள், குறிப்பாகப் பெண்கள், கடந்த இரண்டு தசாப்தங்களில், பிற சுதந்திர சமூகங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை அனுபவித்துள்ளனர்.
எது எவ்வாறாயினும், 2001 ல் நடந்த நியூயார்க் இரட்டைக் கோபுர பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட தீவிரவாத தாலிபான் அமைப்பு, பாகிஸ்தான் அதிகாரிகளின் ஆதரவோடு தொடர்ந்து தழைத்தோங்கியது. ஆஃப்கானில் ஜனநாயக ஆட்சியைப் பாதுகாப்பதற்காக கடந்த இரண்டு தசாப்தங்களாகப் போரிடும் அமெரிக்கப் படைகளின் வலிமைக்கும் தாலிபான்கள் சவால் விடுத்தனர்.பிப்ரவரி 29 இல் ஏற்பட்ட அமெரிக்க, தாலிபான் ஒப்பந்தத்திற்குப் பிறகும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் தாலிபான்கள் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டவுடனே, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5000 பேரை விடுவிக்குமாறு தாலிபான் கேட்டுக் கொண்டது. இதை அஷ்ரஃப் கனியின் அரசு மறுத்ததும் இயல்பானதே. ஆப்கன் உள்நாட்டுப் பேச்சுவார்த்தையின் போது ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே, சிறையில் இருந்து வெளியே அனுப்பும்கோரிக்கையை முடிவு செய்யவேண்டும் என்று அரசு விரும்புகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில், ஆப்கானிய தேசத்தையும், சமூகத்தையும் புனரமைப்பதில் இந்தியா ஒரு முக்கியப் பங்கை வகித்துள்ளது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உறுதியளிக்க அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இந்தியா எப்போதும் ஆதரவாகவே இருந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தொடரும் சிக்கல் தொடர்பாகப் பேசுகையில், இந்தியா, அமைதிக்கான ஆப்கானிஸ்தானின் விருப்பத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ஆப்கன் சமூகத்தின் பாதுகாப்புக்கும், அமைதியான, வளமான மற்றும் ஜனநாயக ரீதியிலான எதிர்காலம் குறித்த அவர்களின் விருப்பங்களுக்கும் அனைத்து ஆதரவையும் இந்தியா தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப கடந்த 18 ஆண்டுகளில், இந்தியா, 300 கோடி டாலருக்குமேல் முதலீடு செய்துள்ளது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்னர் சிதைந்த அந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்தியா கொடுத்த கணிசமான பங்களிப்பின் காரணமாக, ஆப்கானிய மக்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறார்கள்.
Comments
Post a Comment