கொரொனாவைரஸ் தொற்றின் விளிம்பில் ஊசலாடும் உலகம்
மூத்த பத்திரிக்கையாளர் கே.வி.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
இதற்கு முன்னர், மனிதர்களிடம் அடையாளம் காணப்படாத புதிய வகை கொரொனோ வைரஸ் தற்போது உலகை ஆட்டி வைத்துகொண்டிருக்கிறது. சுவாச நோயான கொவைட் 19ஐ உருவாக்கும் இந்த வைரஸினால் 81,000 பேர்களுக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏறத்தாழ 3000 பேர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகளில், மோசமான இந்த வைரஸ் தொற்று ஆரம்பித்த சீனாவில் மட்டுமே 96.5 சதவிகிதம் பேர் அதாவது 2800 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலும் கொரொனோவைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே வருகிறது. ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஆசியா என இந்த தொற்று விரிய ஆரம்பித்துள்ளது. 51 நாடுகளில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்காளில் பெரும்பான்மையானோர் சீனாவுக்கு சென்று வந்தவர்களோ அல்லது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களோ கிடையாது; எந்த விதமான தொற்றுனோயியல் இணைப்பும் இல்லாதவர்கள் ஆவர். லத்தீன் அமெரிக்காவின் முதல் கொரொனா வைரஸ் பாதித்தவரை ப்ரேசில் உறுதிபடுத்தியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக அபாயத்தில் இருக்கும் மூன்று நாடுகளில் ஒன்றான இரான் 26 உயிரிழப்புகளையும் 245 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் குடியரசுத் துணைத் தலைவர் மாசௌமெ இபேத்கர் மற்றும் சுகாதாரத் துணை அமைச்சர் இராஜ் ஹாரிர்சி இருவரும் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டில் ஏறத்தாழ 400 பேர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பிருப்பதாகக் கூறப்படுகிறது; இவர்களுள் 12 பேர் இறந்துவிட்டனர். ஐரோப்பாவில் இதுவரையில் பதிவானதில் இதுவே மிக மோசமான தொற்றுநோய்த் தாக்குதலாகும்.
கொவைட் 19ஆல் பாதிக்கப்பட்டிருந்த கடைசி மூன்று இந்திய மாணவர்களும் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவானது இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபட்டிருக்கிறது. இருப்பினும் ஜப்பானில் கடலிலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த குழுவினர் சிலர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ஊஹான் நகருக்கு 15 டன்கள் மருந்துப் பொருட்களும் உபகரணங்களும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட சீன நகரில் இருந்த இந்தியர்களையும், வெளி நாட்டினரையும் இந்தியா அங்கிருந்து வெளியேற்றி இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுக்கு, ஹாங்காக்கிற்கு, இரானுக்கு செல்லும், அங்கிருந்து வரும் விமானச் சேவைகள் அத்தனையையும் இந்தியா ரத்து செய்து வைத்துள்ளது.
இந்த வைரஸானது, 2019-ன் இறுதியில் ஊஹான் நகரின் சந்தையில் சட்டப்படியான அனுமதி இல்லாமல் விற்க பட்ட காட்டு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. இந்த வைரசானது முதலில் வெளவால்களை பிறப்பிடமாக கொண்டு பின்னர் சில விலங்குகள் மூலமாக மனிதர்களை வந்தடைந்ததாக சுகாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். டிசம்பர் மாதத்தின் இறுதியில் ஊஹானில் பலர் நிமோனியா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளானர் என்று தெரிய வந்து உலக சுகாதார அமைப்பானது எச்சரிக்கை அடைந்தது. ஒரு வாரத்திற்கு பின்னர் சீன அதிகாரிகள் புது வகையான வைரஸ் ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக உறுதி செய்தனர்.
மிகப்பெரும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கொரொனா வைரஸ்களானது சாதாரண ஜலதோஷத்தை உண்டு பண்ணுவதில் இருந்து மிக மோசமான ஆபத்தான நோய்களான, சுவாசத்தை மிக கடுமையாக தாக்கும் சார்ஸ் போன்ற நோய்களையும் தூண்டுகிறது. ஜூரம், இருமல், மூச்சுத் திணறல், சுவாச நோய் அறிகுறிகள் போன்றவை கொரொனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். கடுமையான நோய் தொற்று இருக்கும் பட்சத்தில், இந்த தொற்றானது நிமோனியா, கடும் சுவாச பாதிப்பு, சிறுநீரகம் பழுதடைதல், போன்ற பாதிப்புகளையும், மரணத்தையும் கூட அளிக்ககூடும். இந்த வைரசின் மேற்பரப்பில் கிரீடம் போன்ற அமைப்புடைய புடைப்புகள் இருப்பதால் இது கொரொனா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
கொரொனா வைரஸ் பீதியால், இது பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை உலகின் பல நாடுகள் எடுத்து வருகின்றன. ஜப்பானில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சவுதி அரேபியா, மெக்காவுக்குப் புனிதப்பயணம் வருபவர்களுக்கு அளிக்கும் இசைவுட் சீட்டுகளை நிறுத்தி வைத்துள்ளது.
மிகப்பெரும் தொற்றுநோய் அபாய அச்சமானது வளர்ந்து வருகிறது. உலகப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைகின்றன. இந்தத் தொற்று நோய் அபாயத்தினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தாக்கத்தின் முழு பாதிப்பின் மதிப்பு இன்னமும் அறியப்படவில்லை. சீனா ஒரு மிகப்பெரும் பொருளாதாரமாகும். கடந்த ஆண்டு மட்டுமே, உலகின் உள் உற்பத்தியில் சீனாவின் பங்கு மூன்றில் ஒன்றாகும். கொரொனா வைரஸ் தாக்குதலால், உலக பொருளாதாரமானது 1.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு அடிவாங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பரவி வரும் இந்த பயங்கரமான தொற்று நோயால், உலக வினியோகச் சந்தைகளும் தொடர்புகளும் இடையூறுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. சீனாவானது பல பொருட்களின் இறுதி உற்பத்திக்குத் தேவையான பாகங்கள் பலவற்றைத் தயாரித்துத் தரும் உற்பத்தி நாடாகும்.
ஆண்டிபயாட்டிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகள், நீரிழிவு நோய் மாத்திரைகள், வலி நிவாரணிகள் என உலகெங்கிலும் உபயோகப்படுத்தப்படும் மருந்துகளைத் தயாரிப்பதற்கான முக்கியப் பொருட்களை சீனா தயாரித்து தருகிறது. இவை அனைத்தும் கிட்டுவது தற்போது பாதிக்கப்படும். உலகிற்கு மிகப்பெரும் மரபணு மருந்து தயாரித்து தரும் நாடாக இருக்கும் இந்தியா, இந்த மருந்துகளில் இருக்கும் மிக முக்கியமான மருந்து பொருட்களைப் பெறுவதற்குச் சீனாவையே பெரிதும் நம்பி உள்ளது.
இந்தியா, கொரொனா வைரஸ் தாக்குதலில் இருந்து இது வரையில் தப்பித்திருந்தாலும் கூட, சீனாவுடன் சம்பந்தமே இல்லாத பகுதிகளில் கூட இந்த வைரஸ் தாக்குதல் பரவிகொண்டிருக்கும் வேளையில், தொற்றுத் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது. இந்த தொற்று நோயின் அறிகுறியில்லா பரிமாற்றம் குறித்து சீனா உறுதி செய்திருக்கும் நிலையில் நோய்த் தொற்றுக் கட்டுபாட்டு நெறிமுறைகள் மேலும் சிக்கலாகியுள்ளது.
உலகின் இரண்டாவது மிக பெரிய மக்கள் தொகை நாடான இந்தியா, நோய்த் தொற்று உள்ளவர்கள் இந்தியாவில் நுழைவதை தடுப்பதற்காக அனைத்துத் துறைமுகங்களின் நுழைவிடங்களில் வெப்ப ஊடுகதிர் உபகரணங்களை நிறுவியும், பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளார்களை அமர்த்தியும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடுமையான கண்காணிப்பு மற்றும் கட்டுபாட்டு நெறிமுறைகள் ஆகியவையும் எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம் குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வு ப்ரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன; இதன் மூலம் வைரஸ் பரவுவதைப் பெருமளவில் தடுத்து நிறுத்த முடியும்.
Comments
Post a Comment