பிரெக்சிட், ஐரோப்பிய யூனியன் – இந்தியாவில் தாக்கங்கள்.

(ஜே என் யூ –வின் ஐரோப்பிய விவகாரங்கள் மையத்தின் தலைவர் பேராசிரியர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.)

நடப்பாண்டு ஜனவரி 31 ஆம் தேதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் மூலம், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது 47 ஆண்டு கால உறவை முடித்துக் கொண்டது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பு முடிவுக்கிணங்க இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் 1973 ஆம் ஆண்டு இணைந்த பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடும் லிஸ்பன் ஒப்பந்தத்தின் பிரிவு 50-ன்படி வெளியேறிய முதல் நாடாகிறது.

பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் பிரிட்டன் மீதும் பல விதங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும். ப்ரெக்ஸிட் ஆதரவாளர்கள், இது நாட்டை வலுப்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து அதிகாரத்தை மீட்டு சர்வதேச அளவில் பிரிட்டனின் வலிமையை அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள். இது அத்தனை சுலபமான பயணமாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளுடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, அந்த நாடுகளில் சந்தையைப் பிடிக்கும் சவால் பிரிட்டனுக்கு உள்ளது. நிதிச் சேவைகள் மற்றும் நிதிச் சந்தைகள் துறை பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிரெக்சிட்டின் விளைவாக, தொழிலாளர்கள், முதலீடு, சேவைகள் என அனைத்தும் பாதிக்கப்படும். பிரிட்டனின் மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் சந்தையாக ஐரொப்பிய ஒன்றியம் உள்ள நிலையில், ப்ரெக்ஸிட் காரணமாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இல்லையெனில், கட்டணங்களும், ஒதுக்கீடுகளும் சுமத்தப்பட்டு, இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, ப்ரெக்ஸிட், ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த வலிமையைப் பலவகையில் பாதிக்கக்கூடும். ஒன்றியத்தின் பொது பட்ஜெட்டின் இரண்டாவது மிகப்பெரிய பங்குதாரராகவும் ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாகவும், அணு ஆயுத நாடாகவும் இருந்து வந்தது பிரிட்டன். எனவே, பொது பட்ஜெட்டில் மட்டுமல்லாமல், பொது வெளியுறவுக் கொள்கையிலும் பிரிட்டனின் வெளியேற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அமைப்புக்களிலிருந்தும் யூனியன் ஜாக் என்ற பிரிட்டன் தேசியக் கொடி நீக்கப்பட்டுவிட்டது. இது அனைத்து முடிவெடுக்கும் தருணங்களிலும் ஒரு கை குறைவதை உணர வைக்கும். இத்தகைய பின்னடைவான சூழலிலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எதிர்காலத்தை பிரெக்சிட் பாதிக்காது என்று ஃபிரெஞ்சு அதிபர் மேக்ரோன் அவர்கள் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறி விட்டாலும், முழுவதுமாக இதைச் செயல்படுத்த இவ்வாண்டு டிசம்பர் 31 வரை கால அவகாசம் உள்ளது. அனைத்து நடைமுறைகளையும் ஒழுங்கு படுத்தி, கடினமான செயலான, வர்த்தக, சந்தை விவகாரங்களை இறுதி செய்யவும் இந்த அவகாசம் தேவைப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றித்தின் விதிமுறைகள் பின்பற்றப்படாது என்றும், சிக்கல்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் முடிவுகள் ஏற்கப்படாது என்றும் பிரிட்டன் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்தப் பின்னணியில், இந்தியா- பிரிட்டன் உறவுகளில் புதிய பரிமாணம் உருவாகியுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த விழையும் பிரிட்டனுடன், புதிய வர்த்தக, பொருளாதாரக் கூட்டாளித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு வந்துள்ளது. ப்ரெட்சிட் நிகழ்வைத் தனக்கு அனுகூலமாக்கிக் கொள்ள, இந்தியா, கார்ப்பரேட் வரிக்குறைப்பு, தரவுகளின் ரகசியத் தன்மை குறித்த விவகாரங்களில் கவனம் மற்றும் வணிகம் செய்யும் சூழலை எளிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி பிரிட்டன் தொழிலதிபர் லார்ட் கேரன் பிலிமோரியா குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சுகாதாரம் ஆகிய துறைகள் புதுப்பிக்கப்பட்ட இந்திய – பிரிட்டன் உறவுகளின் மூலம் வளர்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது. அரசியல் அளவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், இந்தியாவுடனான புதிய நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பைத் தாம் எதிர்நோக்கியுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இது வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் சுதந்தரமாகச் செயல்பட்ட, பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள் அதிக சுமையை ஏற்க வேண்டி வரும். அது இடமாற்றம் அல்லது ஏற்றுமதி வரி வடிவில் இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலும், பிரிட்டனிலும் கணிசமான சந்தை இழப்பு ஏற்படக்கூடிய சூழலில், இருதரப்பு நலன்களையும் கருத்தில் கொண்டுநடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

அரசியல் அளவில், பிரிட்டன் காமன்வெல்த் போன்ற மன்றங்கள் மூலமாக உறவுகளை வலுப்படுத்த முற்படலாம். அது இந்தியாவிற்குப் பலனளிக்கலாம். சேவைகள் துறையில், பிரிட்டனுடனான வர்த்தக மற்றும் சந்தை விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகளைக் கையாளும் சிறந்த வழிவகைகளை இந்தியா ஆராய வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இவ்வாண்டு இறுதி வரையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் கட்டத்தில் உள்ள பிரிட்டனுடன் சிறந்த கூட்டாளித்துவத்தை ஏற்படுத்தும் வியூகங்களை அமைத்து நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.