இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சங்கமிக்கும் இந்திய, நியூஸிலாந்து உறவுகள்.
(ஜேஎன்யூ பேராசிரியர் ஷங்கரி சுந்தரராமன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி. குருமூர்த்தி.)
இந்திய, நியூஸிலாந்து உறவுகளைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு நல்ல துவக்கத்துடன் ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் மும்பைக்கு நியூஸிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் இயன் லீஸ் கேல்லோவே அவர்கள் வந்திருந்தார். தொடர்ந்து, இம்மாதம், நியூஸிலாந்தின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் அவர்களும், வர்த்தக அமைச்சர் டேவிட் பார்க்கர் அவர்களும் இந்தியாவுக்குப் பயணம் மேர்கொண்டனர். வர்த்தக அமைச்சருடன் வர்த்தகக் குழு ஒன்றும் பயணித்தது.
ஆங்கிலேயரின் ஆதிக்கம், நாடாளுமன்ற முறையிலான நிர்வாகம், காமன்வெல்த் அமைப்புடனான இணைப்பு என, பல அம்சங்களில் இந்தியாவும், நியூசிலாந்தும் பொதுவான வரலாற்றைப் பகிர்கின்றன. இருதரப்பு மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய அளவில், பரஸ்பரம் நலனளிக்கும் விஷயங்களில் ஆழ்ந்த புரிதல்களுடனும், நுணுக்கத்துடனும் ஒருமித்த அணுகுமுறையை முன்னெடுத்துச் செல்ல இருநாடுகளும் விழைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தான், நியூஸிலாந்து துணைப் பிரதமர், “இந்தியா 2025 – உறவுகளில் முதலீடு” என்ற செயலுத்தி ஆய்வுரையைத் துவக்கியுள்ளார்.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிப்பதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. தற்போது, இருதரப்பு வர்த்தகம், வர்த்தகப் பொருட்களில் நியூசிலாந்து டாலரில், 150 கோடி அளவிலும், வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகளில் 264 கோடி அளவிலும் இருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே, இருதரப்பு வர்த்தகத்தின் முழுமையான சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியா – நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி நகர்வதற்கான வழிமுறைகள் குறித்து, நியூசிலாந்து வர்த்தக அமைச்சரும், குழு உறுப்பினர்களும் ஆராய்ந்தனர். ஆர்சீஈபி எனப்படும் பிராந்திய, விரிவான பொருளாதாரக் கூட்டாளித்துவத்தில் இணைவதில்லை என இந்தியா முடிவெடுத்த நிலையில், இந்தியா – நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதில் இந்தியா ஆர்வமாயுள்ளது.
இந்தோ பசிஃபிக் பிராந்திய விஷயங்களில் அண்மைக்காலமாக அதிக கவனம் செலுத்த முனைந்துள்ள நியூசிலாந்து, இதில் இந்தியாவுடனான உறவுகளின் முக்கியத்துவம் குறித்த புரிதல்களைப் பெறுவதில் தீவிரமாய் உள்ளது. இந்தோ பசிபிக் என்ற தாத்பரியத்தை விடுத்து, தனது அயல்நாட்டுக் கொள்கையில் ஆசியா பசிஃபிக் என்பதிலேயே இதுநாள்வரை கவனம் செலுத்திய நியூஸிலாந்து, இந்தோ பசிபிக் பிராந்தியம் அளிக்கும் பொருளாதார சாத்தியக்கூறுகளால், அப்பிராந்தியத்தில் சர்வதேசக் கூட்டுறவை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் தெற்குமுனையில் இருக்கும் நியூஸிலாந்து, புவி ரீதியாகவும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளது.
Comments
Post a Comment