அமெரிக்க அதிபரின் வருகையால் அதிகரித்திருக்கும் இரு தரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவம்.
(அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - கே. லட்சுமண குமார்)
அமெரிக்க அதிபரின் 36 மணி நேர இந்தியப் பயணம் கோலாகலம் நிறைந்ததாகவும், அர்த்தம் கொண்டதாகவும் இருந்தது. இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஏழாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார். கடந்த இருபது ஆண்டுகளில் நான்கு அமெரிக்க அதிபர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்திருப்பது, அமெரிக்க - இந்திய உறவுகள் ஏறுமுகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க அதிபருடன் அவரது மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா டிரம்ப், அவரது மகள் இவான்கா மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னேர் ஆகியோரும் வந்தனர். இவர்களுடன் உயர் பிரதிநிதிக் குழு ஒன்றும் வந்தது.
அதிபர் டிரம்பின் வருகையை ஒட்டி, அவருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சிறப்பான வரவேற்பை அஹமதாபாத் மக்கள் வழங்கினார்கள். சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று வந்த பிறகு, அமெரிக்க அதிபரும் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் மோடேரா (MOTERA) விளையாட்டரங்கில் 'நமஸ்தே டிரம்ப்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கூடியிருந்த 1.25 லட்சம் மக்கள் மத்தியில் உரையாற்றினார்கள். ஐந்து மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ’ஹவ்டி மோடி’ , அதாவது ’மோடி நலமா?’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த அமெரிக்க இந்திய சமூகத்தினரிடையே அமெரிக்க அதிபரும், இந்தியப் பிரதமரும் உரையாற்றியது நினைவுகூரத் தக்கது. அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தனித்தன்மையையும், தலைமைப் பண்புகளையும், இந்தியாவின் சாதனைகளையும் மனதாரப் பாராட்டினார். எழுபது ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசாகவும், உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சியாகவும் உருவாகியுள்ளது என்றும், உலகிலேயே மிகவும் வியக்கத்தக்க நாடாகவும் விளங்குகிறது என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையே நிலவி வரும் சிறப்புமிக்க நட்புறவும் இந்த நிகழ்ச்சியின் போது வெளிப்பட்டது. ஆக்ராவிற்குச் சென்று உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைக் கண்டு களித்து, அதிபர் டிரம்ப்பும் அவரது குழுவினரும் தலைநகர் புது தில்லி திரும்பினர்.
அதிபர் டிரம்புக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு, திரு டிரம்ப் தனது துணைவியாருடன் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிரதமர் மோதியும் அமெரிக்க அதிபரும் அரசு முறைப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதித்த இரு நாட்டுத் தலைவர்களும், பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும், பாகிஸ்தான் அரசு இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். மும்பை தீவிரவாதத் தாக்குதல் மற்றும் பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலில் சம்பத்தப்பட்டவர்களை விரைவில் நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மைக்காகவும், இணைப்புக்களை வழங்கவும் இந்தியா தொடர்ந்து எடுத்துவரும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். வியாபார நிறுவனத் தலைவர்களுடனும் சந்திப்பு நடைபெற்றது. அதிபரைக் கௌரவிக்கும் வகையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் அவர்கள் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சியில் அதிபரும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபரின் இந்தப் பயணத்தின் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான விரிவான உலகளாவிய செயலுத்திக் கூட்டாளித்துவத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா முக்கியமான பாதுகாப்புக் கூட்டாளி என்பதை உறுதிப்படுத்திய அதிபர் டிரம்ப், இதன் மூலம், இந்தியாவிற்குக் கொள்முதல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றில் முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்தினார்.. MH - 60R ரக கப்பல் மற்றும் AH-64E APACHE ரக ஹெலிகாப்டர்கள் வாங்கும் இந்தியாவின் முடிவை அவர் வரவேற்றார்.
அவரது இந்தப் பயணத்தின் போது, இந்திய - பசிபிக் பகுதியில் இருநாடுகளுக்கும் இடையிலான செயலுத்தி ஒருங்கிணைப்பு வலியுறுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம், இந்தியாவில் நிரந்தர முகாமை ஏற்படுத்துவது என்று முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம், இந்தியாவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டங்களில் 60 கோடி டாலர் மதிப்பில் முதலீடு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. உலகளாவிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முயற்சியாக, BLUE DOT NETWORK என்ற திட்டத்திற்கு இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.
உள்நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்குப் புத்துணர்ச்சி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இரு நாட்டு அமலாக்கத்துறைகளுக்கு இடையே, புதிய போதை மருந்து தடுப்புக்கான செயல் குழு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
சிக்கல்கள் மிகுந்த இருதரப்பு வர்த்தகப் பிரச்சனைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறைந்த அளவிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்கவும், பின்னர் இரு நாட்டுப் பொருளாதார சாத்தியக்கூறுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி நகரவும் முடிவு செய்யப்பட்டது.
அண்மையில் சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியும், பெட்ரோலியத் துறையில் அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் முதலீடும், எரியாற்றல் துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப், பிரதிபலிக்கின்றன. இது மேலும் விரிவடையக்கூடும். விண்வெளி, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகிய துறைகளிலும் அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம் ஊக்குவிப்பை நல்கும்.
மறுசீரமைக்கப்பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதிலும், அணுசக்திப் பொருட்கள் வழங்கும் குழுவில் இந்தியாவை உறுப்பினர் ஆக்குவதிலும் அமெரிக்காவின் ஆதரவை அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார். அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாகவும், நினைவு கூரத்தக்கதாகவும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
Comments
Post a Comment