அதிபர் டிரம்ப் அவர்களின் முதல் இந்தியப் பயணம்.
(ஜேஎன்யூ பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)
.தனது முதல் இந்தியப் பயணத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் இந்திய மண்ணில் காலடி வைத்தபோது, பிரதமர் திரு நரேந்திர மோதி அகமதாபாத் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பு அனைவரும் அறிந்ததே. ஆங்கில அரசின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதில் அண்ணல் காந்தியடிகளின் பங்கைக் கருத்தில் கொண்டு, அவரது சொந்த நிலமான குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் அவர்கள் சென்று தேசத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியா முழுவதிலும் இருந்து வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களை அஹமதாபாத்தில் மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தைத் திறந்து வைக்கக் கோரியதன் மூலம், சிறப்பான, பொருத்தமான வரவேற்பை இந்தியா அவருக்குக் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு, சில மணிநேரங்களில், பல்வேறு இந்திய மாநிலங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் வாயிலாக, இந்தியாவின் பலதரப்பட்ட சீரிய கலாச்சார பொக்கிஷத்தை மக்கள் சிறப்பாக அறிமுகப்படுத்தினார்கள்.
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் இந்திய சமுதாயத்தின் பலவிதமான கலாச்சாரங்களின் அழகால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் ஈர்க்கப்பட்டார். அதேபோல், மொடேரா அரங்கத்தில் இருந்து டிரம்ப் அவர்கள் ஆற்றிய உரை, அங்கிருந்து நேரடியாகவும், வானொலி அல்லது தொலைக்காட்சி வாயிலாகவும், லட்சக்கணக்கான இந்தியர்களின் செவிகளில் இன்பத் தேனாகப் பாய்ந்தது. வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என, பல துறைகளில் ஏழு தசாப்தங்கள் என்ற குறுகிய காலகட்டத்தில் இந்தியா பெற்றிருக்கும் வளர்ச்சியை டிரம்ப் அவர்கள் வியந்து பாராட்டினார். இந்தியா உலகின் முக்கியப் பொருளாதாரமாக மாறியுள்ளது என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இருந்த பிரிட்டனின் இடத்தை இந்தியா சமீபத்தில் பிடித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க சமுதாயத்திற்கு சுமார் 40 லட்சம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் வழங்கும் பங்களிப்பை அவர் மனதாரப் பராட்டினார்.
அதோடு, இந்தோ-அமெரிக்க மூலோபாய பங்காளித்துவத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கோடிட்டுக் காட்டிய அதிபர் டிரம்ப் அவர்கள், இது நீடித்த ஒன்றாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வதில் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை எடுத்துக் காட்டிய அதிபர் டிரம்ப் அவர்கள், மேற்கு ஆசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அதன் உயர்மட்டத் தலைவர்கள் வீழ்த்தப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார். பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான தனது முயற்சிகளை கோடிட்டுக் காட்டிய அவர், பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பு நாடு என்றும் வர்ணித்தார்.
பாகிஸ்தானைப் பற்றி அவர் குறிப்பிட்டது தேவையில்லாதது என பலருக்குத் தோன்றலாம். ஆனால், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு நோக்குகையில், அமெரிக்கக் கண்ணோட்டத்தில் அவரது கருத்துக்கள் முக்கியமானவை என்பது புலப்படும். தனது கருத்தை சமன் செய்யும் விதமாக, பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்கை அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் இருப்பதை உறுதி செய்வதில் சமீபத்தில், இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல, சீனாவும் ஒரே நிலைப்பாட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் நிர்வாகமும் பாகிஸ்தான் மீது, பொருளாதாரத் தடைகளை விதித்தல் அல்லது நிதிகளை திரும்பப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்தகைய அமெரிக்க நடவடிக்கைகளின் பின்னணியில், பாகிஸ்தான் குறித்த அவரது கருத்து புரிந்து கொள்ளத்தக்கதே.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வளர்ந்து வரும் ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் கருத்துகளையும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார். இருதரப்பு நவீன ராணுவப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய டிரம்ப் அவர்கள், இந்தியாவுக்கு அதிநவீன ராணுவத் தளவாடங்களின் விற்பனை செய்வதற்கும் உறுதியளித்தார்.
இந்தியாவுக்கான அவரது முதல் பயணத்தின் முதல் கட்டம் சம்பிரதாயமானதாக இருக்கும் என்று ஆரம்பத்தில் தோன்றியது. எனினும், அமெரிக்க அதிபரின் இந்தப் பயணம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியது. தனது உரை முழுவதிலுமே, இந்திய-அமெரிக்க மூலோபாய பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தையும் பயனையும் ஆழமான உறுதியான வார்த்தைகளால் இந்திய மக்களிடம் டிரம்ப் அவர்கள் பகிர்ந்துக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு புதிய பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாறிவரும் சர்வதேச சூழல், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் பனிப்போரின் முடிவிற்குப் பிறகு, உலக விவகாரங்களின் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இந்திய, அமெரிக்க செயலுத்திக் கூட்டாளித்துவம் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில், பல ஏற்றத் தாழ்வுகளையும், தடைகளையும், சவால்களையும் சந்தித்து வருகிறது. டொனால்ட் டிரம்ப் அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியா வணிகம் மற்றும் வர்த்தகத் துறைகளில் புதிய சவால்களை சந்தித்துள்ளது. அவற்றை எதிர்கொள்ள சமரசமான ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு இரு அரசாங்கங்களுக்கும் இன்னும் கூடுதல் கால அவகாசம் தேவை. புதிய ஒப்பந்தம் சரியான நேரத்தில் ஒப்புக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
Comments
Post a Comment