கறுப்பல்ல – பழுப்பு : பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் மற்றுமொரு வாய்ப்பு
பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனத்தின் தெற்காசிய மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் அசோக் பெஹுரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்
கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாநகரில் உலகெங்கிலிமிருந்து 205 நாடுகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட தீவிரவாத நிதி கட்டுப்பாட்டு நடவடிக்கை பணிக்குழுவின் கூட்டத்தில், பாகிஸ்தான பழுப்பு பட்டியலிலிருந்து வெளி வருவதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா என்பது குறித்து யூகங்கள் நிலவிக்கொண்டிருந்தன.
ஏனைய பிரச்னைகள் குறித்த விவாதங்களுக்கிடையே, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவிக்கு எதிராக செயல்படுவது குறித்த தங்களது நிலைப்பாடுகளை பாகிஸ்தானும், வேறு சில நாடுகளும் சரியான முறையில் செயல்படுத்துகின்றனவா, அந்நிலைப்பாட்டில் எட்டப்பட்டிருக்கும் முன்னேற்றம் போன்றவை குறித்தும் எஃப் ஏ டி எஃப் விவாதிக்க முயன்றது. பழுப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் நாடுகள் உலக நிதி அமைப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக கருதப்படுகின்றன. ஜூன் 2018 முதல் பாகிஸ்தானும் பழுப்பு பட்டியலில்தான் இருந்து வருகிறது.
2020 பிப்ரவரி 19 ஆம் தேதி, பாகிஸ்தான் இந்த ஆண்டு ஜூன் வரையில் தொடர்ந்து பழுப்பு பட்டியலில்தான் இருக்கப்போகிறது என்று ஊடக அறிக்கைகள் வெளி வர துவங்கின. இது தவிர்க்கமுடியாத ஒன்று. ஏனெனில் பிப்ரவரி 17 ஆம் தேதி, பாகிஸ்தான் சமர்ப்பித்த இணக்க அறிக்கையை மதிப்பீடு செய்த சர்வதேச ஒத்துழைப்பு மறு ஆய்வு குழுவானது, பயங்கரவாதத்திற்கான நிதி உதவியை கட்டுபடுத்துவதற்கு பாகிஸ்தான் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அறிக்கையை முடித்திருந்தது.
நவம்பர் மாதம் 2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தபட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-ஈ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையீதை தண்டிக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் உலக சமுதாயத்தை சமாதானபடுத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு பின்னரும் கூட பாகிஸ்தானால் பழுப்பு பட்டியலில் இருந்து வெளி வரமுடியவில்லை. அனைத்து நாடுகளுக்கான புதுப்பிக்கபட்ட மதிப்பீட்டும் பட்டியல் பிப்ரவரி 13, 2020-ல் வெளியிடபட்டபோது பாகிஸ்தான் நாடு அதற்கு அளிக்கபட்ட 40 குறைப்பாட்டு பரிந்துரைகளில் ஒன்றே ஒன்றைதான் முழுமையாக நிறைவேற்றி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பல குறைபாடுகளை களைவது குறித்து பாகிஸ்தான் கவனமே செலுத்தவில்லை.
பாகிஸ்தான் அக்கறை செலுத்தாத குறைபாடுகளின் பட்டியல் அவ்வளவு நீளமாக இருந்த காரணத்தால், எப்போதும் பாகிஸ்தானுக்கு கை கொடுக்கும் நட்பு நாடான சீனா, தற்போது எஃப் ஏ டி எஃப்ஃபின் தலைமை பொறுப்பில் இருந்தும் கூட பழுப்பு பட்டியலில் இருந்து தங்களை நீக்க கோரிய பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லை. துருக்கி நாடு ஒன்றை தவிர, மற்ற நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை அடுத்த கூட்டம் நடக்கவிருக்கும் ஜூன் மாதம் வரையில் பழுப்பு பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எஃப் ஏ டி எஃப் வெளியிட்ட பரஸ்பர மதிப்பீடு அறிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதி உதவி மற்றும் பண மோசடியை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு தேவையான முன்னேற்றத்தை எட்டவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தது. திட்டங்களை நிறைவேற்ற கொடுத்திருந்த அனைத்து காலகெடுவும் முடிந்துவிட்டதை கவலையோடும் ஏமாற்றத்தோடும் அது குறிப்பிட்டிருந்தது. தீவிரவாதத்திற்கான நிதி உதவியை தடுக்கவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ளவும் பாகிஸ்தான் தீவிரம் காட்டவில்லை.
பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதானால் வரும் ஆபத்துகள் குறித்த போதிய புரிதல் கூட பாகிஸ்தானுக்கு இல்லை என்று அந்த அறிக்கை சாடியிருந்தது. நடவடிக்கை எடுக்கவேண்டிய 27 விஷயங்களில் ஐந்து குறித்து மட்டுமே விரிவாக கூறிய அந்த அறிக்கை பிப்ரவரி 2020-குள் பாகிஸ்தான் அவற்றின் மீது முழுமையாக செயல் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றும், தவறினால் உறுப்பினர் நாடுகளை பாகிஸ்தானுடான வர்த்தக உறவுகள் மற்றும் பரிவர்த்தனைகளில் சிறப்பு கவனம் அளிக்குமாறு அறிவுறுத்த போவதாக அச்சுறுத்தி இருந்தது.
பழுப்பு பட்டியலில் இருந்து தான் விடுவிக்கப்படுவோம் என்று பாகிஸ்தான் நினைத்திருந்தால், தான் கொடுத்திருந்த உறுதிமொழிகள் எதனையும் நிறைவேற்றாத தன் அத்துனை குறைபாடுகளையும் அறிந்திருந்தபோதும் அவ்வாறு எதிர்பார்ப்பது சாத்தியமற்றதாகும். தனது நட்பு நாடான சீனாவின் மீது அது வைத்திருந்த நம்பிக்கை, தற்போதிருக்கும் பழுப்பு பட்டியலில் இருந்து தன்னை வெளிக்கொணர்வதற்கல்ல, அங்கிருந்து நழுவி கறுப்பு பட்டியலில் வீழ்ந்து விடாமல் காப்பாற்றவே ஆகும். அத்தகைய முடிவுகள் அனைத்து உறுப்பினர் நாடுகளையும் கலந்து ஆலோசித்து, இசைவின் மூலமே எடுக்கப்படவேண்டும் என்பது எஃப் ஏ டி எஃப்ஃபின் விதிகள் மற்றும் விதிமுறைகளாகும். இந்தியாவும் ஒரு உறுப்பினர் நாடு என்பதால், பயங்கரவாத நிதி உதவி தடுப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் மோசமான நிலையால், பழுப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தானை எடுப்பதற்கு இந்தியா அனுமதிப்பதற்கு வாய்ப்பே இல்லை என கூறலாம்.
கடந்த சில மாதங்களாக கண்னை மூடிக்கொண்டு அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வரும் துருக்கி நாட்டை தவிர, மேலும் ஒன்றிரண்டு நாடுகள் மட்டுமே பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவளிக்ககூடும்; ஆனால் கூறப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பாகிஸ்தான் போதுமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால் பெரும்பாலான நாடுகள் பழுப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தானை எடுப்பதற்கு ஆதரவு அளிக்கபோவதில்லை. பயங்கரவாததிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அளித்திருக்கும் உறுதி மொழியை நிறைவேற்றுவதை காட்டும் நடவடிக்கையாக அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களின் மீது வழக்கு பதிந்து குற்றவாளி என்று நடவடிக்கை எடுக்குமாறு இஸ்லாமாபாதுக்கு கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அதன் தலைவர்கள் கறுப்பு பட்டியலில் விழும் ஆபத்திலிருந்து நாட்டை தற்போது காப்பாற்றி விட்டதாக தாங்களே தங்களுக்கு “ஷொட்டு’ கொடுத்து கொண்டிருப்பார்கள். ஆனால் உள்ளத்தின் அடி ஆழத்தில், தற்போது தாங்கள் இருக்கும் ஆதரவற்ற மோசமான சூழலுக்கு தாமேதான் காரணம் என்று வருந்தி கொண்டிருப்பார்கள். பயங்கரவாததுடன் பாகிஸ்தான் பல வருடங்களாக நடத்தி வந்த காதல் வாழ்வு, பாகிஸ்தானின் அரசியல், சமூக, பொருளாதார, சட்ட அமைப்புகள் அத்தனையையும் முழுமையாக கெடுத்து அசுத்தமாக்கி, தற்போது இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதை ஏறத்தாழ சாத்தியமற்றதாகவே ஆக்கிவிட்டது. உலகின் கண்களை கட்டி ஏமாற்ற முயற்சி செய்யாமல், பாகிஸ்தான் தன்னை மீட்டெடுக்க கிட்டியிருக்கும் வாய்ப்பாக இதனை கருதவேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், அந்நாட்டின் சிறந்த நெருங்கிய நட்பு நாடுகளுக்கும் கூட பாகிஸ்தான் ‘கறுப்பு பட்டியலில்’ வீழ்வதை தடுப்பதோ நிறுத்துவதோ சிரமமாகி விடகூடும்.
Comments
Post a Comment