ஆஃப்கன் அதிபர் தேர்தலில் அஷ்ரஃப் கானி வெற்றி.



(தெற்காசியா குறித்த செயலுத்தி நிபுணர் டாக்டர் ஸ்ம்ருதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா.)

ஆஃப்கானிஸ்தானில், கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதியன்று, கடுமையான போட்டியுடன் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலின் முடிவுகள், பிப்ரவரி 18 ஆம் தேதி, கிட்டத்தட்ட ஐந்துமாத காலதாமதத்துக்குப் பிறகு வெளியானது. தற்போதைய அதிபர் அஷ்ரஃப் கானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது முக்கியப் போட்டியாளரான டாக்டர் அப்துல்லா அப்துல்லா இந்தத் தேர்தலின் முடிவுகளை ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், ஆஃப்கானிஸ்தானில் அடுத்த அரசாங்கத்தைத் தாம் அமைக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு மிகக் குறைவாக இருந்தது. பூர்வாங்க வாக்குகள் எண்ணிக்கையில் திரு கானி முன்னணியில் இருந்தார். வாக்குப்பதிவு விகிதம் சர்ச்சைக்குரியதாக உள்ளதாக போட்டி வேட்பாளர்கள் கூறியதையடுத்து, 15 சதவிகித வாக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், 50.64 சதவிகித வாக்குகள் பெற்ற அதிபர் கானி, தேர்தலில் வெற்றிதாக அறிவிக்கப்பட்டார்.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஷ்ரஃப் கானிக்கு இந்தியா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் விருப்பங்களை இந்தியா ஆதரிப்பதாக அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய ஆஃப்கன் அரசுடனும், ஜனநாயக அமைப்புடனும் இணைந்து, இருதரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவதை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. வெளிநாட்டு ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி, தேசிய அமைதி மற்றும் சமரசத்தை நிலைநாட்டப் பாடுபடும் ஆஃப்கன் தலைமையிலான, ஆஃப்கன் அரசால் நிர்வகிக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செயல் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு ஏற்படுவது இது முதல் முறை அல்ல. கிட்டத்தட்ட, 2014 ஆம் ஆண்டில் நடந்த ஆஃப்கன் அதிபர் தேர்தலின் மறுஓட்டமாகவே இத்தேர்தல் கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலிலும், திரு கானியும் திரு அப்துல்லா அப்துல்லாவும் வேட்பாளர்களாக இருந்தனர். அப்போது, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டதோடு, இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சையும் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகளை இருதரப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்றின் மூலம், டாக்டர் அப்துல்லா அப்துல்லா, அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்படாத பதவியான தலைமை நிர்வாகி என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்பட்டது. நான்கு ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் சிறப்பு தேர்தல் சீர்திருத்த ஆணையத்தை அமைப்பது ஆகியன, அரசின் தேசிய ஒற்றுமை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையே பிளவுபட்டு, அரசு முடங்கிப் போனதால் இந்தச் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில், இந்த இரண்டு போட்டித் தலைவர்களுக்கும் இடையே சிக்குண்ட ஆப்கானிஸ்தானின் ஒற்றுமை அரசு, முழுவதுமாகப் பிளவுபட்டிருந்தது. அதன் விளைவாக, அரசு நிர்வாகத்தில் இரு தலைவர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை, முக்கியமாகத் தங்களுடைய இனக் குழுக்களைச் சார்ந்தவர்களைக் கொண்டு நிரப்பினார்கள். இதனால் இதர சிறிய இனக்குழுக்கள் தனித்து விடப்பட்டன. இரு தலைவர்களுக்குமிடையே கசப்பான பகைமை நீடித்ததால், அரசு நிர்வாகம் முடங்கியது. இந்நிலையில், நிர்வாகத்தின் கீழ் இல்லாத இடத்தை தாலிபான் மற்றும் இதர குழுக்களின் ஆதரவாளர்கள் ஆக்ரமித்ததோடு, அவர்கள் அரசுக்கு சவால் விட்டனர்.

டிரம்ப் நிர்வாகத்துக்கும் தாலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை எட்ட ஆப்கானிஸ்தான் முனைந்துவரும் வேளையில், அதிபர் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு, இருதரப்புக்களும் வன்முறையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் ஏழுநாள் பரிசோதனைக் காலகட்டத்தைக் கடந்தாக வேண்டும். அமெரிக்கப் படைகளை பகுதி பகுதியாக விலக்கிக் கொள்வதை இந்த அமைதி ஒப்பந்தம் அனுமதிக்கும். எனினும், இதுவரை ஆஃப்கான் அரசுடனான பேச்சுக்களுக்கு மறுப்புத் தெரிவித்து வந்த தாலிபான் குழு, ஆஃப்கான் அரசுடன் பேச்சுக்களில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கும்போது தான் அமைதிக்கான முயற்சி உண்மையான பரிசோதனையை சந்திக்கும். தாலிபான் தலைவர்கள் தங்களின் தனிப்பட்ட முறையில் பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெளிவுபடுத்திய போதிலும், தாலிபான் மற்றும் ஆஃப்கன் அரசுப் பிரதிநிதிகளுடன் பல சுற்று முறைசாரா பேச்சுவார்த்தைகள் நடந்தேறியுள்ளன. அமைதிக்கான முயற்சி அவசியம் என்று அதிபர் கானி அவர்கள் சுட்டிக்காட்டிய அதே சமயம், தாலிபான் குழு, அமைதியை எட்ட விரும்புது, அவர்களது ’ட்ரோஜன் குதிரை செயலுத்தி’ என்ற தந்திரமான ஏமாற்று முறை என்று விமரிசித்துள்ளார்.

ஆப்கன் அரசை சட்டபூர்வமானதாக தாலிபான் இதுவரை ஏற்கவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து இப்போது சர்ச்சை ஏற்பட்டால், அது அஷ்ரஃப் கானியின் அரசின் சட்டபூர்வ அதிகாரத்தைக் கேள்விக்குரியதாக்கி விடும். தவிர, அதிபர் தேர்தலின் அனைத்து நடைமுறைகள் குறித்தும், ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகள் நிறுவிய ஜனநாயக அமைப்பு குறித்தும் கேள்விகள் எழும்பும். இந்த நடைமுறையை தாலிபான் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் மீதான சர்ச்சை, இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். அமெரிக்கா மூலமான அமைதி ஒப்பந்தத்துக்கு தாலிபான் ஒப்புக்கொண்டு அமைதி கூடிவரும் வேளையில், தேர்தலின் முடிவுகள் குறித்து அதிபர் கானியை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் எழுப்பும் சவாலானது, அரசியல் நிலையற்றதன்மையை மேலும் தீவிரமாக்குவதோடு, வன்முறைகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.






Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.