நாளேடுகள் நவில்வன.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர பணிக்கால சேவை வழங்க உச்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”இந்திய ராணுவத்தில் பணியாற்றும் குறுகிய பணிக்கால சேவையில் (ஷார்ட் சர்வீஸ் கமிஷன்) இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர பணிக்கால சேவை (பர்மனென்ட் சர்வீஸ் கமிஷன்) வழங்கப்படுவதுடன் படைகளுக்குத் தலைமை தாங்கும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராணுவத்தில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முயற்சியின் மிகப் பெரிய வெற்றி என்று இதைக் கருதலாம்.

இந்திய ராணுவத்தில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவது புதிதொன்றுமல்ல. ராணுவத்தின் 10 படைப் பிரிவுகளில் படை வீரர்களுக்குத் தலைமை தாங்கி பெண்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ராணுவத்தில் பெண்கள் பொறுப்பான பதவிகளை வகிப்பது புதிதொன்றுமல்ல. 1995 முதல் இஸ்ரேலிலும், 2001 முதல் ஜெர்மனியிலும் நேரடி போர்ப் பிரிவில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ராணுவத்தின் 10-இல் 8 பிரிவுகளில் 1991 முதல் பெண் அதிகாரிகள் குறுகிய பணிக்கால சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டே இரண்டு துறைகளில் நிரந்தர பணிக்கால சேவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2019 செப்டம்பரில் ஏனைய 8 ராணுவப் பிரிவுகளிலும் நிரந்தர பணிக்கால சேவை பெண் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2014-க்குப் பிறகு ராணுவத்தில் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

ராணுவத்தில் குறுகிய பணிக்கால சேவையில் 2014-க்கு முன்னால் இணைந்த பெண் அதிகாரிகள் நீண்ட நாள்களாகவே நிரந்தர பணிக்கால சேவைக்காகப் போராடி வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் திங்கள்கிழமை தீர்ப்பு மூலம் பணியில் இருக்கும் அனைத்து குறுகிய பணிக்கால சேவையில் இருக்கும் பெண் அதிகாரிகளும் நிரந்தர பணிக்கால சேவை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

2018-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பெண் ராணுவ அதிகாரிகளுக்கும் நிரந்தர பணிக்கால சேவை என்கிற வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இப்போது உச்சநீதிமன்றம் அதை முழுமையாக உறுதிப்படுத்தியிருக்கிறது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.