இந்திய - ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டம்.

(பாதுகாப்பு ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.)

லக்னோவில் நடைபெற்ற இந்திய பாதுகாப்புக் கண்காட்சியின் போது, முதல் இந்திய - ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான, இந்தியாவின் முக்கிய முன் முயற்சியாக இது விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளுடன் 1950 ஆம் வருடம் முதல் இருந்து வரும் பாதுகாப்புக் கூட்டாளித்துவத்தின் அடிப்படையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு உபகரணங்களை ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு புதிய வாய்ப்பையும் இந்தக் கூட்டம் ஏற்படுத்தியுள்ளது. 14 ஆபிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 19 பாதுகாப்பு மற்றும் சேவைத்துறைத் தலைவர்கள் மற்றும் 8 நிரந்தர செயலாளர்கள் உள்பட, 154 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தற்போது அமைதி மற்றும் பாதுகாப்பு ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. “துப்பாக்கிகள் இல்லாத ஆப்பிரிக்க முன்னேற்றத்திற்கான உகந்த சூழலை ஏற்படுத்துதல்” என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் இந்த வருட கருப்பொருளாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தொலை நோக்குப் பார்வையான சாகர் எனப்படும் (அனைத்து பிராந்தியத்திற்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) என்ற தொலை நோக்குடன் இது பொருந்துகிறது.

பாதுகாப்புத்துறை ஈடுபாடுகள் என்பது, இந்திய - ஆப்பிரிக்க உறவுகளின் ஒரு அங்கமாகப் பல பத்தாண்டுகளாக நிலவி வருகிறது. ஆப்பிரிக்காவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தின் பிந்தைய காலகட்டத்தில், எத்தியோப்பியாவில், ராணுவ கலைக்கூடம் கட்டுவதற்கு இந்தியா உதவி அளித்துள்ளது. நைஜீரியாவில் பாதுகாப்புக் கல்லூரி மற்றும் கடற்படைப் போர்க் கல்லூரி கட்டுவதற்கும், கானாவில் விமானப்படை அமைப்பதற்கும், பல ஆப்பிரிக்க நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றிற்கும் இந்தியா உதவியுள்ளது. ஐநா அமைதி காக்கும் படையில் ( UNPKO) தீவிரமாகப் பங்கேற்று, ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைதியை நிலைநாட்ட, இந்தியா முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது, பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதில், இந்தியா கண்டுள்ள முன்னேற்றங்களை, ஆப்பிரிக்க நாடுகள் அங்கீகரித்தன. கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, கடல்வழிப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்திய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான கூட்டாளித்துவத்தின் அடிப்படையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. இந்த முயற்சியானது, பாதுகாப்பு ஒத்துழைப்பில் உள்ள பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடனும், அதற்கான 10 வழிகாட்டுதல் கொள்கைகளுடனும் ஒத்துப் போகிறது.

ஆப்பிரிக்காவின் முக்கியப் பகுதிகளான வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, சஹெல் மற்றும் கிரேட் லேக்ஸ் பிராந்தியம் போன்ற பல இடங்களில் மோதல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஐஎஸ்ஐஎஸ், ஜமாத் நுஸ்ரட் அல் இஸ்லாம்வால் முஸ்லிமீன் (JNIM) , போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தக் கண்டத்தில் செயல்பட்டு வருகின்றன. திருட்டு, ஆயுதமேந்திய கடற்கொள்ளை, சட்டவிரோத மீன்பிடிப்பு, கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற கடல்வழி சவால்கள், நீண்டகாலமாக ஆப்பிரிக்க நாடுகளின் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவி வருகின்றன.

இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற கடல்வழிச் சூழலை எதிர்கொள்ள, ஆப்பிரிக்கா முழுவதுமான கடல்வழி செயல் உத்தியை ஆப்பிரிக்க ஒன்றியம் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு “2050 ஆப்பிரிக்காவின் ஒருங்கிணைந்த கடல்வழி செயலுத்தி”என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு தனித்துவமான திட்டமாகும். இதன் மூலம், கடல்வழிச் சவால்களைக் குறைப்பதோடு, ஆப்பிரிக்காவின் நீலப் பொருளாதார வளர்ச்சிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மற்ற நாடுகள் ஆப்பிரிக்கா மீது கொண்டுள்ள ஆர்வங்களைப் போலன்றி, ஆப்பிரிக்கா கண்டத்துடனான இந்தியாவின் ஈடுபாடுகள், ஆப்பிரிக்காவின் முன்னுரிமைகளுக்கு உகந்தவாறே அமைந்துள்ளன. இந்தியாவின் சுரண்டல் அல்லாத அணுகுமுறையை ஆப்பிரிக்க நாடுகள் பெரிதும் பாராட்டுகின்றன. சமீபத்தில் இந்தியாவின் ஒரு அண்டை நாடு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஜிபோட்டி தொராலே துறைமுகத்தைக் கையகப்படுத்த, சாதுர்யமான, கடனில் சிக்க வைக்கும் ராஜதந்திரத்தைக் கையாண்டது, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது.

ஆப்பிரிக்காவின் இந்தியப் பெருங்கடல் கடலோரப் பகுதி நாடுகளுடன் இந்தியா, வலுவான கடல்வழிப் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், ஆப்பிரிக்க நாடுகள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, இந்திய கடற்படை, திருட்டைத் தடுப்பதற்கான ரோந்து கப்பல், பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கான கப்பல் போன்றவற்றை நிலை நிறுத்தியுள்ளது. இந்திய, ஆப்பிரிக்க நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான உறவுகள், பயங்கரவாதம் மற்றும் கடற்கொள்ளை சவால்களுக்கு இடையே, ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நாடாக இந்தியாவை முன்னிறுத்த உதவுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை அதிகப்படுத்தவதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

இந்த இந்திய - ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில், சவால்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்த புரிதல்கள் மேம்பட்டுள்ளன. இந்திய - ஆப்பிரிக்க முன்னேற்றக் கூட்டாளிதுவமானது, வரும் காலத்தில் ஆக்கபூர்வமாக மேலும் விரிவடையும் என்று நம்பப்படுகின்றது. ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாளித்துவம் மிகவும் வெளிப்படையானது. அது சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

****************************************************************************







Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.