இருதரப்பு உறவுகளுக்கு வலு சேர்க்கும் இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள், உயர்மட்டக் குழுவுடன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்ட இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களைச் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களை சந்தித்த இலங்கைப் பிரதமர், அவருடன் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்களும் இலங்கைப் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்.

நினைவுக்கெட்டாத பழங்காலந்தொட்டே, அண்டைநாடாகவுள்ள இலங்கையுடன், இந்தியா நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கூறினார். கலாச்சாரம், மதம், ஆன்மீகம், கலை மற்றும் மொழி ரீதியாக, இருதரப்பு உறவுகள் பிணைக்கப்பட்ட வரலாற்றை இருநாடுகளும் பெற்றுள்ளன என்று அவர் மேலும் கூறினார். பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும், கடந்த கால மற்றும் எதிர்காலப் பிணைப்புக்களை அனைத்துப் பகுதிகளிலும் இருநாடுகளும் பெற்றுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கூறினார். இலங்கையின் வளமையும், பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் இந்தியாவுக்கு மட்டுமல்லாது, இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதற்குமே நன்மை அளிக்கக் கூடியவையாகும். எனவே, இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கும், வளமைக்கும் இருதரப்பு உறவுகள் நெருக்கமாயிருத்தல் இன்றியமையாதது. இந்தியாவின் ’அண்டைநாடுகளுக்கு முதலிடம்’ மற்றும் ’சாகர்’ என்ற அனைவருக்குமான பாதுகாப்பு, வளர்ச்சிக் கொள்கைகளின் கீழ், இந்தியா, இலங்கைக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது. இந்தியாவுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காகப் பணிபுரிய இலங்கை முன்வந்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கிய அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாத்த்துக்கு எதிராக இந்தியாவும், இலங்கையும் உறுதியுடன் போராடி வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. அது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரானது. பயங்கரவாதத்துக்கு எதிராக, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவின் தலைசிறந்த பயிற்சி மையங்களில் இலங்கை போலீஸ் அதிகாரிகள் பயிற்சிபெறத் துவங்கியுள்ளனர். இருநாட்டு பாதுகாப்பு அமைப்புக்களுக்குமிடையே தொடர்புகளை அதிகரிப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இருதரப்பு கூட்டுப் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். பொருளாதாரம், தொழில் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து அலசப்பட்டது. சுற்றுலாத் துறையை ஊக்குவித்து, இருதரப்பு மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே அண்மையில் நேரடி விமானப் போக்குவரத்து துவக்கப்பட்டது, இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளின் எடுத்துக்காட்டாக உள்ளது. இலங்கையின் வடபகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தியாவுடன் தொடர்புகளை விரிவாக்க வாய்ப்பு வழங்குவதோடு, இந்த நேரடி விமானப் போக்குவரத்து, அப்பகுதியின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். இந்த நேரடி விமானப் போக்குவரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது இருநாடுகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவுகளை மேலும் ஊக்குவிக்கும் வழிகள் குறித்து இருநாட்டுப் பிரதமர்களும் விவாதித்தனர்.

இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளி நாடாக உள்ளது. இலங்கைக்கு இந்தியா அறிவித்துள்ள புதிய கடன் திட்டம், இருநாட்டு வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கு வலு சேர்க்கும். இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து விரட்டப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக, 48,000 வீடுகள் கட்டும் இந்தியாவின் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது இந்தியாவிற்குத் திருப்தியளித்துள்ளது. நாட்டின் பிறபகுதிகளிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுக்காக ஆயிரக் கணக்கான வீடுகள் கட்டித்தரும் பணியும் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது., மீனவர் பிரச்சனையை இருநாட்டுத் தலைவர்களும் மனிதாபிமான அடிப்படையில் ஆக்கபூர்வமாக அணுக முற்பட்டனர்.

இலங்கை அரசு உள்நாட்டு விவகாரங்களில் திறம்படச் செயலாற்ற வேண்டியதன் அவசியம், அயல்நாட்டுக் கொள்கைகள் குறித்து முடிவுகளைத் தீர்மானிக்கத் தூண்டுகோலாக உள்ளதாக இலங்கை அதிபர் வலியுறுத்தினார். தம் நாட்டிற்கு வளர்ச்சி முதல் தேவை என்றும், அதற்கான கால அவகாசம் குறைவு என்றும் இலங்கை அதிபர் குறிப்பிட்டார். இன்னும் ஐந்தாண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யாவிடில், தாங்கள் அதிகாரத்திலிருந்து துரத்தப்படுவோம் என்றும், அதுவே தமக்கு முன்னர் நேரிட்டதாகவும் இலங்கைப் பிரதமர் ராஜபக்ச அவர்கள் குறிப்பிட்டார். இலங்கை நாட்டு மக்களுக்குப் பலனளிக்கும் விஷயங்கள் மீது தங்கள் கவனம் செல்லும் என்றும் அவர் கூறினார். சீனாவிடம் கடன் சிக்கலை இலங்கை எதிர்கொள்வது குறித்துப் பேசுகையில், தாங்கள் அரசு அதிகாரத்திலிருந்திருந்தால் இதனை ஒருக்காலும் அனுமதித்திருக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

சர்ச்சைகளுக்கான தீர்வுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் வெளிப்படையாக, விரிவாக விவாதித்தனர். இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதையை எதிர்பார்க்கும் தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசு பூர்த்தி செய்யும் என்று தாம் நம்புவதாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தெரிவித்தார். இதற்கு, இலங்கை அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.



Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.