பொருளாதார அறிக்கை -2020

(பத்திரிக்கையாளர் மனோஹர் மனோஜ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்தியப் பாராளுமன்றத்தின் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர், மக்கள் மற்றும் மாநிலங்களவைகளின் கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரையுடன் துவங்கியது. தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொருளாதார அறிக்கையை சமர்ப்பித்தார். நாட்டில் ஒரு நிதியாண்டில் நிகழ்ந்த பொருளாதார சாதனைகள் மற்றும் குறைபாடுகள் ஆகியவை குறித்த மிகப் பெரும் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வறிக்கையாக இந்தப் பொருளாதார அறிக்கை விளங்குகிறது. அண்மைக் காலமாக, இந்தியப் பொருளாதாரம் சற்று மந்தநிலையை எட்டியுள்ள பின்னணியில், 2020 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் மொத்த உள்நாட்டுப் பொருளாதாரம் 5 சதம் வளர்ச்சி பெறும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதற்கு இணங்க அறிவித்தது தவிர, இந்தப் பொருளாதார அறிக்கை, சில கடினமான சூழல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளது. புதிய உத்வேகத்துடன், வெகு விரைவில் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றமைடைந்து, 2020-21 ஆம் ஆண்டில் 6 முதல் 6.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்று பொருளாதார அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறையை 3.3 சதம் என்ற எல்லைக்குள் கட்டுப்படுத்தி இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகப் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. மொத்த விலையில் 1.9 சதம், சில்லறை விலையில் 4.1 சதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே விலைவாசி உயர்வு இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. அந்நியச் செலாவணி கட்டண சமநிலை, திருப்திகரமாக உள்ளது என்றும், இறக்குமதிக் குறைவு மற்றும் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் இது சாத்தியமாகியுள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. தவிர, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிய தொகை 3,840 கோடி டாலர் அளவை எட்டியது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. இம்மாதம் 10 ஆம் தேதி நிலவரப்படி, அந்நியச் செலாவணிக் கையிருப்பு, 46,120 கோடி டாலர் என்ற வரலாற்று எல்லையைத் தொட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைந்ததாலும், நடப்பு நிதியாண்டில் முதல் 8 மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு 2,440 கோடி டாலர் அளவை எட்டியதாலும், அந்நியச் செலாவணி கட்டண சமநிலை, திருப்திகரமாக உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதார அறிக்கை, முக்கியத்துவம் வாய்ந்த இரு பொருளாதார நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளது. முதலாவதாக, மொத்த வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் முறைசார் வேலைவாய்ப்புக்களின் பங்கு, கடந்த ஐந்தாண்டுகளில் 17.6 சதத்திலிருந்து 22.5 சதமாக உயர்ந்துள்ளது. இது இந்தியா, முறைசார் வேலை வாய்ப்புக்களை நோக்கி முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவதாக, பங்கு மர்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகும் நிறுவனங்களுக்கு அதிக இடமளிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள், பொருட்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் வகையில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பங்குச் சந்தை, தனது பட்டியலிலுள்ள நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கை விலக்கி அவ்விடத்தில் புதிய நிறுவனங்களுக்கு இடமளித்து ஊக்கமளிப்பது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்முனைவோர் அதிகரித்து வரும் ஆரோக்கியமான மேம்பாட்டை இந்தியப் பொருளாதாரம் கண்ணுற்றதை அறிக்கை வெளிச்ச்ம் போட்டுக் காட்டியுள்ளது.

உலக வங்கியின் அறிக்கையின்படி, புதிய நிறுவனங்கள் உருவாக்கத்தில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் 70,000 என்ற எண்ணிக்கையில் இருந்த புதிய நிறுவனங்கள் உருவாக்கம், 2018 இல் 1,24,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், புதிய நிறுவனங்கள் உருவாக்கம் 3.8 சதவீத வளர்ச்சி கண்டது. அதுவே, 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 12.2 சதமாக உயர்ந்துள்ளது. ’உலகிற்காக இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற மந்திரத்தை பொருளாதார அறிக்கை 2020 கையிலெடுத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புக்கள் பெருமளவில் கூடி, உலக ஏற்றுமதிப் பங்கில் 2025 ஆம் ஆண்டுக்குள் 3.5 சதவீதம், 2030 ஆம் ஆண்டுக்குள் 6 சதவீதம் என்ற எல்லைகளைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோதி அவர்களின் அரசு, அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு எடுத்துச் செல்வதில் மிகவும் தீவிரமாக உள்ளது. எனவே, தொழில்கள் சார்ந்த சூழலை உடைய புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு பொருளாதார அறிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதில் எளிமை என்ற கணக்கீட்டில் அபிரிமித வளர்ச்சி கண்டு, 2014 ஆம் அண்டில் 142 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 63 ஆவது இடத்தைத் தொட்டுள்ளது. எனவே, பொருளாதார அறிக்கை 2020 இல், தொழிலுக்கு சாதகமான சூழல் மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

____________

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.