பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு புதிய தலைக் குனிவு.

(முன்னாள் இந்தியத் தூதர் அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - லட்சுமண குமார்)

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் மிகவும் புனிதத் தலமானதும், உலகப்புகழ் பெற்ற குருத்வாராவுமான நான்கானா சாஹிப்பில் 400க்கும் அதிகமான பேர் நுழைந்து, சீக்கியர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் குருத்வாராவைச் சுற்றி வளைத்து கற்களை வீசினார்கள். அந்த கும்பலுக்குத் தலைமை ஏற்றவர்கள் முகமது ஹசான் என்பவரின் குடும்பத்தினர். முகமது ஹாசன் அந்த குருத்வாராவின் பூசாரியின் மகள் ஜக்ஜித் கௌரைக் கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதம் மாற்றித் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஈனச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சீக்கியர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

வீடியோ காட்சி ஒன்றில், அந்தப் புனிதத்தலத்தில் குருத்வாரா இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழுமியிருந்த கூட்டம் முழக்கமிட்டதையும், குருத்வாரா நான்கானா சாஹிபின் பெயரை குலாமான் ஏ முஸ்தஃபா என்று மாற்றப்போவதாக அவர்கள் சூளுரைத்ததையும் காண முடிந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாராவுக்குள் அதிக அளவில் மாட்டிக் கொண்டுள்ள சீக்கியர்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசின் அலட்சியமும், மெத்தனப் போக்கும் பாகிஸ்தானில் வாழும் சீக்கிய சமூகத்தினர் பாதுகாப்பு குறித்து அதிகக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான நான்கானா சாஹிப்பில், . அதன் பெயரிலேயே குருத்வாரா இடம் பெற்றுள்ளது.1469 ஆம் ஆண்டு சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் தேவ் அவர்கள் அங்கு பிறந்தார். சீக்கிய மதத்தினரின் மிகவும் புனிதமான தலமாக இது கருதப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள சீக்கியர்கள் கடந்த வருடம் குருநானக் தேவின் 550 ஆவது பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாடினார்கள். சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோபிந் சிங்கின் பிறந்த நாளைக் கொண்டாடிய மறுநாள் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது மிகவும் முரண்பட்ட செயலாகும்.

காலம் தாழ்த்தாமல், உடனடியாக, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்க இந்தியா தவறவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், நான்கானா சாஹிபிலிருந்து ஜக்ஜித் கௌர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நடந்துள்ளது என்று இந்தியா வலியுறுத்திக் கூறியுள்ளது.

புனிதத் தலம் ஒன்றைத் திட்டமிட்டு அழித்து அவமானப்படுத்த முற்பட்ட இச்செயலை இந்திய வன்மையாகக் கண்டித்தது. மேலும், அங்குள்ள சீக்கியர்களைப் பத்திரமாகப் பாதுகாக்கவும், அவர்களது நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தியுள்ளது. புனித வழிப்பாட்டுத் தலமான குருத்வாராவை சேதப்படுத்தி, சிறுபான்மையினரான சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் இந்தியா பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், புனிதத் தலமான நான்கானா சாஹிபையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாப்பதில் பாகிஸ்தானுக்குள்ள பொறுப்பையும் இந்தியா பாகிஸ்தானுக்கு நினைவுபடுத்தியது.

இந்த வன்முறைச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், இந்தியாவின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அவர்கள், நான்கானா சாஹிப் குருத்வாராவில் சிக்கியுள்ள பக்தர்களைப் பத்திரமாக மீட்கவும், குருத்வாராவைச் சுற்றியுள்ள கும்பலிடமிருந்து குருத்வாராவைப் பாதுகாக்கும்படியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்த மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கௌர் பாதல் அவர்கள், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகுகிறார்கள் என்ற நிதர்சனமான உண்மை வெளிப்பட்டுள்ளது என்று கூறினார். குருத்வாரா மீதான தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். ஷிரோன்மணி அகாலிதள் கட்சித் தலைவரும் மற்றும் பிற கட்சித் தலைவர்களும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சீக்கிய மதத்தினரும் இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே அதிக அளவில் மக்கள் திரண்டு இந்த சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மௌனம் கலைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தார். தனது லட்சியத்திற்கு எதிரானது இந்த சம்பவம் என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தனது அரசு கருணை காட்டாது என்றும் கூறினார். கண்டனம் தெரிவித்த அதே வேளையில், இந்தியாவிற்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சியாக, கண்டிக்கத்தக்க நான்கானா சாஹிப் குருத்வாரா சம்பவத்திற்கும், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் நிலைமைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளதாக, அவர் கூறினார். பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு அபத்தனமானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். பாகிஸ்தானின் இத்தகைய நிலைப்பாடு, அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் பாகிஸ்தான் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக, இச்சம்பவம் குறித்த தகவல்கள் தவறானவை என்றும், தேநீர் கடை ஒன்றில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட சிறு கைகலப்பு சம்பவம் இது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் சப்பைக்கட்டு அறிக்கை வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்தார்பூர் வழித்தடத்தைத் துவக்கி வைத்து, தனது போலித்தனத்தை முகமூடி கொண்டு மறைக்கப் பார்த்த பாகிஸ்தானின் கபட நாடகத்தை இந்த சம்பவம் குறித்த பாகிஸ்தானின் முரண்பட்ட நிலைப்பாடு, வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்தியாவும், சர்வதேச சமூகமும் பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, பாகிஸ்தானிலிருக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்ய வேண்டும்.


Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.