பாக்தாதில் அமெரிக்கா ஈரான் இடையில் போர் போன்ற சூழல்

பேராசிரியர் பி.ஆர். குமாரசுவாமி, ஜெ.என்.யு

தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார்

அமெரிக்காவிற்கு சரியான செய்தி கிடைத்தது!! பாக்தாதின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான ‘க்ரீன் ஸோன்’ எனப்படும் ‘பச்சை மண்டலத்தில்’ உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி நடந்த சமீபத்திய ஆர்ப்பாட்டங்களின் நிறுத்தத்தை, ஈரான் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இவ்வாறுதான் பார்க்கிறார்கள். ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படை நடத்திய ஒரு தாக்குதலில், ஒரு அமெரிக்க ஒப்பந்தக்காரர் கொல்லபட்டார், சில அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான தொடர்புகள் மோசமாயின.

இதைத் தொடர்ந்து, துணை ராணுவப் படைகளின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் கட்டளையிட்டார். இதில், சுமார் 25 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இதனால், கோவமடைந்த ஈராகில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர். கட்டிடடத்தின் சுவரின் மீது ஏற முயன்றனர். இதையடுத்து, வளாகத்திற்குள் இருந்த அமெரிக்கப் படை வீரர்கள், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று.

ஈராக்-சிரியா எல்லையில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது நடந்த முதல் நிலைத் தாக்குதல்கள், கடவுளின் பாதையின் படை என தங்களைக் கூறிக்கொள்ளும் கதேப் ஹெஸ்புல்லா என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த அமைப்பு, ஈரானால் ஆதரிக்கப்படும் பாபுலர் மொபிலைசேஷன் படையின் அங்கமாக இருக்கும் ஒரு ஷியா துணை ராணுவப் படையாகும். 2003 மார்ச் மாதம், அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நடந்த ஈராகிய உள்நாட்டுப் போரில் கதேப் ஹெஸ்புல்லா செயல்படத் துவங்கியது. பிரச்சனைக்குள்ளான அதிபர் பஷார் அல்-அசாதின் ஆதரவாக, இந்த அமைப்பு சிரிய உள்நாட்டுப் போரிலும் பங்கு கொண்டது.

டிசம்பர் மாதம் 29 அன்று, ஐந்து துணை ராணுவத் தளங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவரிக்கையில், அதிபர் டிரம்ப், ‘நாங்கள் சரியாக பதிலடி கொடுத்தோம், தொடர்ந்து கொடுப்போம். ஈரான், ஈராகில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்க திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது’ என ட்வீட் செய்தார். துரிதமாக செயல்பட்டு, அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக, அவர் ஈராக் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு தனது புத்தாண்டு எச்சரிகையை விடுத்தார். ‘எங்களது தளங்களில் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கும், சேதங்களுக்கும் ஈரான் தான் பொறுப்பு. இதற்கு அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும்! இது எச்சரிக்கையல்ல, இது ஒரு அச்சுறுத்தல். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என அவர் கூறினார்.

இதற்கிடையில், ஈரானிய குட்ஸ் படைத் தளபதி, மேஜர் ஜெனரல் க்வாசேம் சொலெய்மானி மற்றும் ஈராகிய கிளர்ச்சிப் படைத் தலைவன் அபு மஹ்தி அல்-முஹண்டிஸ் ஆகியோர் பாக்தாதில், ஒரு அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பெண்டகன் ஒரு ‘தீர்க்கமான தற்காப்பு நடவடிக்கையை’ எடுத்துள்ளது என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் டி. எஸ்பர் கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்கா ஈரானுடனான தன் அணு ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியது. மேலும், ஈரானிய எரியாற்றல் துறையை நோக்கி பொருளாதாரத் தடைகள் புதுப்பிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் அதிகரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா-ஈரான் பிரச்சனைகள் உருவெடுத்தன. கடந்த சில வாரங்களில், சாதாரண ஈரானிய குடிமக்கள் சந்திக்கும் பொருளாதார கடினங்கள் குறித்து பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்தன. நிதித் தடையும், உள்நாட்டு நிதியின் தவறான நிர்வாகமும் இந்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகும்.

இதுவரை இரு தரப்பும் நேரடித் தாக்குதலிலிருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனினும், ஈரானுக்கு நெருக்கமான மற்றும் தொடர்புடைய சக்திகள், அமெரிக்காவுடன் நட்பில் இருக்கும் நாடுகளின் சில முக்கிய இலக்குகளைத் தாக்கி அமெரிக்கக் கட்டளைக்கு ஈரானின் எதிர்ப்பைக் காட்ட முயற்சிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்கள் பின்வாங்கிய பின்னரும், ‘ஈரான் இதற்கு பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்’ என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆகையால், தற்போதைய பதட்ட நிலையை டிரம்பின் உள்நாட்டு உறுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. கடந்த மாதம், அமெரிக்க காங்கிரஸ், அதிபர் டிரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. கிறிஸ்துமஸ் விடுமுறைகள் முடிவடைய இருக்கும் நிலையில், அமெரிக்க காங்கிரசினுடைய கீழ்ச்சபையின் சபாநாயகர் நேன்சி பெலோசி, இந்த விஷயத்தை மேல் சபையான செனேடின் முன் வைக்கும் முன், தன் தரப்பு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார். இவற்றிலிருந்து தன் கவனத்தைத் திருப்ப, டிரம்பிற்கு ஒரு மாற்றம் தேவை. அதை, அவர், இவ்வகையில், ஒரு தொலை தூர இடத்தில் தேடுகிறார் என சிலர் கருதுகின்றனர். முன்னதாக, பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, மோனிகா லெவின்ஸ்கி தொடர்பான கண்டன தீர்மானத்தின்போது, அனைவரது கவனத்தையும் திருப்ப, ஆஃப்கானிஸ்தானிலிருந்த அல்-கொய்தா தளங்களைத் தாக்கினார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால், இரு தரப்பினரும் கடக்க விரும்பாத சில சிவப்பு கோடுகளும் உள்ளன. 1980 ஆம் ஆண்டு, கார்டருடைய அதிபர் பதவிக்கு குந்தகம் விளைவித்த பணயக்கைதி நெருக்கடி போன்ற ஒன்றை தேர்தல் ஆண்டில் டிரம்ப் கண்டிப்பாக விரும்ப மாட்டார். 444 நாட்கள் தொடர்ந்த அந்த நிகழ்வு, வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானுக்கு இடையில் நாற்பது ஆண்டு கால பகைமைக்கான விதைகளை விதைத்தது. இப்படிப்பட்ட ஒன்று மீண்டும் நடக்க அமெரிக்க அதிபர் டிரம்போ அல்லது ஈரான் தலைவர் அலி கமீனியோ கண்டிபாக விரும்ப மாட்டார்கள்.

இந்தியாவைப் பொறுத்த வரை, ஆற்றல் பாதுகாப்பு, அதிக அளவில் அங்கு வாழும் இந்தியர்கள், பணம் அனுப்பும் முறைமைகள் ஆகியவற்றின் காரணமாக, இப்பகுதிகளில் அதிக கவனம் கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. 2017-2018 ஆண்டிலிருந்து, ஈரான், சௌதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவிற்கு மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக உள்ளது. ஏற்கனவே, அமெரிக்கத் தடைகள், இந்தியா-ஈரான் எரியாற்றல் வர்த்தகத்தில் பலவீனமாக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. ஆகையால், பாக்தாதில், தற்போதிருக்கும் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்ற நிலை விரைவில் முடிவடைவது, பாரசீக வளைகுடா பகுதிகளில் இந்தியாவிற்கு மிக முக்கியமானதாகும்.







Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.