அண்டைநாடுகளுக்கு முதலிடம் – கொள்கையை மீண்டும் வலியுறுத்தும் இந்தியா.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் இராஜ்குமார் பாலா.)

அண்டைநாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, பல நேரங்களில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இதனைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி நடந்த தமது பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய பிராந்திர ஒத்துழைப்புக்கான அமைப்பு, சார்க்கில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதே ஆண்டில் முதன்முறையாக பூடானுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, அனைவருக்கும் கல்வி ஆகிய விஷயங்களைச் சமாளிக்க, தெற்காசியாவில் உள்ள அண்டை நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவை என்று அவர் அழைப்பு விடுத்தார். அண்டை நாடுகளின் நலனுக்காகத் தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள இந்தியா ஆயத்தமாக உள்ளது.
2020 ஆம் ஆண்டு, புத்தாண்டில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கே வாங்சுக், பூடான் பிரதமர் டாக்டர் லோட்டே ஷெரிங், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்ஷே, மாலத்தீவுகள் அதிபர் இப்ராஹிம் முஹம்மது சோலி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாளப் பிரதமர் கே பி ஷர்மா ஒலி ஆகிய அண்டைநாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு இந்தப் புத்தாண்உ துவக்கத்தின் உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டார்.

தனது சார்பாகவும், இந்திய மக்களின் சார்பாகவும் புத்தாண்டு வாழ்த்துக்களை அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் தெரிவித்தார். அண்டைநாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியாவுக்கு உள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்திய அவர், இந்த வட்டாரத்தில் உள்ள இந்தியாவின் நட்புநாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் அமைதி, பாதுகாப்பு, வளமை, மேம்பாடு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கான இந்தியாவின் தொலைநோக்கு குறித்து எடுத்துரைத்தார்.

பூடான் மன்னருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே சிறப்பான உறவுகளை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முக்கிய சாதனைகளைப் பட்டியலிட்டார். தமது பூடான் பயணத்தின்போது பூடான் மக்களிடமிருந்து தாம் பெற்ற அன்பையும் ஆதரவையும் நெகிழ்ச்சியுடன் அவர் நினைவுகூர்ந்தார். இருநாட்டு இளைஞர்கள் இடையே பரிவர்த்தனைகள் அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவுக்கு பூட்டான் மன்னர் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தைத் தாம் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இலங்கை அதிபர் கோத்தயபய ராஜபக்ஷே உடனான உரையாடலின்போது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோதி, 2020 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவது பற்றி நம்பிக்கை தெரிவித்தார். இருநாடுகளும் மிக நெருக்கமாக பணிபுரிவது பற்றி இருநாடுகளின் தலைவர்களும் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்கள்.
இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்ஷேவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர், இலங்கையுடனான நெருங்கிய ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க இந்தியாவுக்கு உள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். 2020 ஆம் ஆண்டில், இருநாடுகளிடையேயான உறவுகளை மேலும் மேம்படுத்தத் தாம் கொண்டுள்ள ஆழ்ந்த விருப்பத்தை இலங்கைப் பிரதமர் அப்போது தெரிவித்தார்.

மாலத்தீவுகளின் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற மாலத்தீவுகள் அதிபருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோதி வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியப் பிரதமருக்கு அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவித்த மாலத்தீவுகள் அதிபர் சோலி அவர்கள், தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி இணைந்து செயல்படுவதற்கான புதிய துறைகளை அடையாளம் கண்டு இந்தியாவுடனான உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும் பலப்படுத்தவும் விருப்பம் தெரிவித்தார்.

பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோதி, அடுத்த மூன்றாண்டு பதவிக்காலத்துக்கு அவாமி லீக் கட்சியின் தலைவராக அவர் மறுபடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவுக்கான பங்களாதேஷின் முன்னாள் ஹை கமிஷனர் சையது முவாசெம் அலியின் எதிர்பாரா மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலைப் பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்துக் கொண்டார். 2019 ஆம் ஆண்டில் இந்தியா-பங்களாதேஷ் இடையேயான உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து பிரதமர் மோதி பெருமையுடன் விவரித்தார். பங்கபந்து என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் நூற்றாண்டு பிறந்த தின விழாக் கொண்டாட்டங்கள், பங்களாதேஷ் விடுதலை அடைந்து, இருநாடுகளிடையே தூதாண்மை உறவுகள் ஏற்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு ஆகிய முக்கிய மைல்கல்கள், இருநாடுகளிடையேயான நெருக்கமான உறவுகளில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார். அதுவே இந்திய அரசின் முன்னுரிமையுமாகும்.

நேபாளப் பிரதமர் ஓலி அவர்களுடன் பேசிய பிரதமர் திரு. மோதி, பல திட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா நேபாளம் இடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தார். இந்தியாவின் மோத்திஹாரி, நேபாளத்தின் அம்லேக்குஞ் இடையே சாதனை அளவாக, விரைவாக, பெட்ரோலியப் பொருட்களின் சப்ளைக்கான குழாய்ப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அவர் பாராட்டினார். பிரத் நகரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி, நேபாளத்தில் வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றை, காணொலிக் காட்சி மூலமாக விரைவில் தொடங்கவும் இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.




______________

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.