நைஜர் மற்றும் துனிசியாவுடன் உறவுகளை ஆழப்படுத்தும் இந்தியா
பத்திரிகையாளர் வினித்வாஹி அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம் ராஜ்குமார் பாலா.
ஆப்பிரிக்க நாடுகளில் அதிக கவனம் செலுத்துவதற்கும் அவர்களுடன் நெருக்கமான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வளர்ப்பதற்கும் ஏதுவான ஒரு முயற்சியாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இந்தவார தொடக்கத்தில் நைஜர் மற்றும் துனிசியாவிற்கு பயணம் மேற்கொண்டார். ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக, ஐ.நா சபையில் இந்தியாவுக்கு உதவி செய்ததிலிருந்து, இந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதை நிரூபிப்பது போல், வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு எஸ். ஜெய்சங்கர் ஆப்பிரிக்காவுக்கு முதல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
நைஜரின் நியாமிக்கு சென்ற டாக்டர் ஜெய்சங்கர், நைஜர் அதிபர் முகமது இசாவ்ஃபவ் (Mahamadou Issoufou) அவர்களை சந்தித்தார். இருதலைவர்களும் கூட்டாக மகாத்மா காந்தி சர்வ தேசமாநாட்டு மையத்தை திறந்து வைத்தனர். தற்போது அண்ணல் காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருவதை நினைவு கூரும் விதமாக ஆப்பிரிக்காவில் இந்தியா நிறுவிய முதல்மையம் இது. இந்தியா-நைஜர் நட்பின் ஒரு அடையாளமாக நிறுவப்பட்டுள்ள இந்த மையம், ஆப்பிரிக்கா மீதான இந்தியாவின் உறுதியான உறுதிப்பாட்டின் அடையாளமாகும். இந்தமையம் ஒரு விசாலமான, நவீன மற்றும் சுற்று சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இங்கு, ஆப்பிரிக்க யூனியன் (ஏ.யூ) உறுப்பு நாடுகள் மற்றும் பிற உயர்நிலை மாநாடுகள் நடைபெறுவதற்கு ஏதுவாக 2000 பேர் அமரக்கூடிய பரந்த மண்டபம் ஒன்றும் உள்ளது.
நியாமியில் தங்கியிருந்தபோது, நைஜர் பிரதமர் பிரிஜிரபினியையும் (Mr. Brigi Rafini)இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்தார். நைஜர் வெளியுறவு அமைச்சர் கல்லா அங்கூராவ் உடன் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் கலந்தாலோசித்தார். இருதரப்பினரும் பரஸ்பர உறவின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப்போராடுவதற்கான தேவை உட்பட வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட சவால்களைப் பற்றியும் விவாதித்தனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமாக விரிவடைந்துள்ளன. போக்குவரத்து, மின்மயமாக்கல், சூரியஆற்றல், குடிநீர் போன்ற திட்டங்களுக்காக நைஜருக்குலைன் ஆஃப் கிரெடிட் என்ற வசதியை இந்தியா வழங்கியுள்ளது. நைஜரின் நூற்றுக்கணக்கான அதிகாரிகள், இந்திய தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐ.டி.இ.சி) திட்டத்தின் கீழ் இந்தியாவின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களில் பங்கேற்று பயனடைந்தனர். கடந்த ஜூலை மாதம் நியாமியில் நடைபெற்றஏ.யூ. உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவாக நைஜருக்கும் இந்தியா உதவி வழங்கியுள்ளது.
நைஜர் சர்வதேச அரங்கில் பல்வேறு பதவிகளுக்கு இந்தியாவின் விண்ணப்பங்களை ஆதரித்துவருகிறது. 2020-2023 காலத்திற்கான உலக சுகாதார அமைப்பின் வெளி தணிக்கையாளர் பதவிக்கும், இணக்கம் மற்றும் வசதி, உலக சுங்க அமைப்பின் இயக்குநர், 2019-2022 காலத்திற்கான ஐ.சி.ஏ.ஓ கவுன்சில் ஆகிய பதவிகளுக்கு இந்தியாவின் விண்ணப்பங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது நைஜர். நைஜருடனான இந்தியாவின் வர்த்தகம், 2016-17-இல் 81.27 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, அது, 2017-18 ஆம் ஆண்டில் 140.45 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டது. 2019-20ல் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நைஜருக்கான இந்திய ஏற்றுமதி 51.76 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், நைஜரின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 0.34 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.
டாக்டர் ஜெய்சங்கரின் துனிசியா பயணத்தின்போது, இரு நாடுகளும் அங்கு ஒரு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப தாக்கமையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. துனிசிய அதிபர் கைஸ்சயீத்தை (Mr. Kais Saied)சந்தித்த வெளியுறவு அமைச்சர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சப்ரிபச்டோப்ஜியையும் (Mr. Sabri Bachtobji)சந்தித்து, இருதரப்பு பொருளாதார உறவுகளை விரிவாக்குவதில் கவனம் செலுத்தும் வகையில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பலதரப்பு மன்றங்களில் நெருக்கமாக பணியாற்றவும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். பாஸ்பேட்டுகளுக்கு நம்பகமான ஆதாரமாக இருந்துவரும் துனிசியாவின் உலகளாவிய பாஸ்போரிக் அமில ஏற்றுமதியில் சுமார் 50 சதவீதம் இந்தியாவுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா துனிசிய மாணவர்களுக்கு உயர்கல்விக்காக, ஐ.டி.இ.சி-யில் 100 இடங்களையும், இந்தியகலாச்சார உறவுகள் கவுன்சிலில் (ஐ.சி.சி.ஆர்) 10 இடங்களையும் ஒதுக்கீடு செய்வதோடு கல்வி உதவித்தொகையையும் வழங்கியது.
2017 ல் புதுதில்லியில் நடைபெற்ற துனிசியா-இந்தியா கூட்டுக்குழுவின் முடிவுகளின் அடிப்படையிலும்,பலமுக்கிய துறைகள் மற்றும் பொதுவான ஆர்வமுள்ள பகுதிகளில் இந்தியா-துனிசியா கூட்டாண்மைக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்த சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொலை நோக்குடைய“முன்னோக்கிய திட்டத்தின்” பரிந்துரைகளின் பின்னணியில் வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியமானது.இது 1958 ஆம் ஆண்டு முதல் வட ஆஃபிரிக்க நாட்டிற்கான இந்திய வெளியுறவு அமைச்சரின் இரண்டாவது அரசுமுறை பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நைஜர், துனிசியா இரு நாடுகளுமே இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில் அவை இரண்டுமே ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் என்பதோடு, பலமுறை புது தில்லி இந்த நட்பு ஆஃபிரிக்க தேசத்தின் ஆதரவையும் பெற்றுள்ளது. எனவே, அவர்களின் ஆதரவுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை அமைந்துள்ளது.
Comments
Post a Comment