இந்திய ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் லாவ்ரோவின் பயணம்

மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்

ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ். இரு நாடுகளுக்கிடையேயான மிக அருமையான உறவுகளை மறு ஆய்வு செய்ய இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஈரான், லிபியா, சிரியா உள்ளிட்ட தற்போதைய பிராந்திய நிலவரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்ஷங்கர் அவர்களுடன் விரிவான விவாதம் மேற்கொண்டார் லாவ்ரோவ். பிறகு அவர், பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும் சந்தித்து உரையாடினார். சென்ற ஆண்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் இரு தரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் 20ஆவது ஆண்டு நிறைவடையும் 2020 ஆம் ஆண்டு அந்த முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோதி கூறினார்.

மத்திய கிழக்கு பகுதியில் வளர்ந்து வரும் பதற்றமான சூழல் குறித்தும் இரு வெளியுறவு அமைச்சர்களும் விவாதித்தனர். இந்த பதற்றம் மேலும் அதிகரித்தால், அதனால் உலக பொருளாதாரம் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் புவி சார் அரசியலில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டிற்கான இருதரப்பு திட்டங்கள் குறித்தும் இருவரும் கவனம் செலுத்தினர். இவ்வாண்டு நடக்க இருக்கும் உச்சி மாநாட்டு அளவிலான பல்தரப்புச் சந்திப்புகளுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இந்த உயர்மட்டச் சந்திப்பு முகமன் கூறுவதாக அமைந்தது.

இந்தியா-ரஷ்யா வருடாந்தர மாநாட்டில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புத்தினும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் சந்தித்தனர். இவ்வாண்டு ரஷ்ய அதிபர் இந்தியா வரும்போது இரு தலைவர்களும் மீண்டும் சந்திக்கவுள்ளனர். இது தவிர, ஜி-2 மாநாடு, பிரிக்ஸ் மாநாடு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு ஆகிய பல்தரப்புச் சந்திப்புக்களிலும் இருவரும் சந்திக்கவுள்ளனர். அதற்கு முன்னர், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியப் படைகள் சோவியத் யூனியனிடம் சரணடைந்த வெற்றி தினமான மே 9 ஆம் தேதி அன்று அந்நாளின் 75 ஆவது நிறைவையொட்டி, மாஸ்கோ செல்கிறார் நரேந்திர மோதி அவர்கள் .

சிறப்பு வாய்ந்த இரு தரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் வளர்ச்சி குறித்தும் தற்சமயம் நிலவும் இருதரப்பு உறவுகள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். சென்ற ஆண்டு 20ஆவது வருடாந்தர உச்சி மாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியாவும் ரஷ்யாவும் புவிசார் அரசியலில் ஏற்படும் குழப்பங்களுக்கு இரையாகாமல், நிலைத்து நிற்கும் நாடுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாட்டு வெளியுறவுக் கொள்கைகளிலும் இரு நாட்டு உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சிக்கலான சர்வதேச சூழலிலும் இந்திய – ரஷ்ய செயலுத்தி கூட்டாளித்துவம் வலுவாக நிலைத்துள்ளது.

இந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்கும் நோக்கில், இரு நாட்டு வர்த்தகம் 2025-க்குள் 3000 கோடி அமெரிக்க டாலர் என்ற அளவை எட்ட வேண்டும் என்று இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த இலக்கை எட்ட, இரு நாடுகளின் சிறந்த வளங்களையும் பயன்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் கூட்டாளித்துவத்தையும் ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்க இரு நாடுகளும் உழைத்து வருகின்றன.

இருதரப்பு சிறப்பு செயலுத்திக்கூட்டாளித்துவத்தின் துணாக இரு நாடுகளும் கருதுவது, ராணுவ மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பேயாகும். இதன் படியே, அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தம் ஒன்றும் எட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு வலுசேர்ப்பதிலும் ஐ நா போன்ற சர்வ தேச மன்றங்களில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதிலும் ரஷ்யா எப்போதும் துணையாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு ரஷ்யா ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவே இருந்து வருகிறது. 15 உறுப்பினர் கொண்ட ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கும் 48 உறுப்பினர் கொண்ட அணுப்பொருள் வழங்கும் நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்ப்பதற்கும் ரஷ்யா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இந்தப் பின்னணியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் செயலுத்தி முக்கியத்துவம் வாய்ந்த இரு தரப்பு ஒத்துழைப்புத் திட்டங்களை மறு ஆய்வு செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்தது. பல கடினமான சோதனைகளைக்கடந்தும் நிலைத்து நிற்கும் இந்திய ரஷ்ய உறவுகள், வேகமாக மாறி வரும் புவி அரசியலில் மேலும் சிறக்கும் என்றால் அது மிகையாகாது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.