இலங்கை வெளியுறவு அமைச்சரின் முதல் இந்தியப் பயணம்.

(இட்ஸா ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

இலங்கை வெளியுறவு, திறன் வளர்ப்பு மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா அவர்கள், இந்தியாவுக்கு முதல்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன், நால்வர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் பயணித்தது. கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் புதிய அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சரின் இப்பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தின் போது, அமைச்சர் குணவர்தனா அவர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர், திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு மஹேந்திரநாத் பாண்டே, தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் கூட்டத்தில் உரையாற்றினார். அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் என்ற பொது ஆர்வ ஆய்வு மையத்திற்கும், புதுதில்லியிள்ள இந்திய மஹாபோதி சமூக அமைப்பிற்கும் விஜயம் செய்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஏற்பாடு செய்த உயர்மட்டக் குழு அளவிலான கூட்டத்தில், முதலீடு, பாதுகாப்பு, மீன்வளம், செயலாக்கத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு உதவி, கல்வி, கலாச்சாரக் கூட்டுறவு ஆகியவை உள்ளிட்ட அனைத்து இருதரப்பு விஷயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை மேலும் வலுவாக்கும் வழிகள் குறித்து ஆராய்ந்தனர். இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தின்போது, குறிப்பாக, திறன் வளர்ப்பு, பயிற்சி ஆகியவை உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அமைச்சர் குணவர்தனா அவர்கள், அவற்றில் இந்தியாவின் ஆதரவைக் கோரினார். இத்துறைகளில், இலங்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று, டாக்டர் ஜெய்ஷங்கர் உறுதியளித்தார். இத்துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து, இருதரப்பினரும் ஆலோசித்து வருகின்றன. பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பிராந்திய, உலகளாவிய விஷயங்களில் பரஸ்பர நலன்கள் குறித்து இரு அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் பிடியிலுள்ள 15 மீனவர்கள் மற்றும் 52 படகுகள் ஆகியவற்றை விடுவிப்பது குறித்து, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் கேட்டறிந்தார். இதற்கான பணிகள் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டுள்ளதாக இலங்கையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவது குறித்துப் பேசப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் குணவர்தனா அவர்கள், அனைத்து மாவட்ட செயலகங்கள் வாயிலாக, இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விழையும் 3000 அகதிகளுக்குத் தேவையான வசதிகள் அளிக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது என, ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இவ்வகையில் முதல் இலங்கை அகதிகள் குழு, வரும் பிப்ரவரி மாதத்தில் தாயகம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகதிகளின் அடையாளப் பரிசீலனை முடிவுற்ற பின்னர், இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பிராந்தியத்தில் அகதிகளின் சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார். இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்புவது குறித்துப் பல ஆண்டுகளாக இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இதுநாள் வரை, தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு ஐ.நா. மனிதநேயக் குழு உதவி வந்தது. இலங்கை அரசு போதிய வசதிகளை ஏற்படுத்தாததால், அகதிகள் தாயகம் திரும்ப மறுத்து வந்தனர். இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

நெருங்கிய நட்புறவு பேணும் இருநாடுகளும், பாதுகாப்பு, சுற்றுலா, கலாச்சாரம், திறன் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் ஏற்கனவே துடிப்புமிக்க பிணைப்பைக் கொண்டுள்ளன. எனினும், மீன்வளம், இந்திய உதவியுடன் செயலாக்கப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை குறித்து சில பிரச்சனைகள் நிலவுகின்றன. இவை பல காலம் முன்பாகவே அடையாளம் காணப்பட்டிருந்தாலும், அவற்றுக்குக்கான தீர்வு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபர் 2019 ஆம் ஆண்டு நவம்பரில் மேற்கொண்ட இந்தியப் பயணம், தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சர் மற்றும் உயர்மட்டக் குழுவின் பயணம் ஆகியவை, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதோடு, நிலுவையிலுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் உதவும் என்பது உறுதி.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.