ரைசினா பேச்சு வார்த்தை 2020
21 ஆவது நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் நாம் அடி எடுத்துவைக்கும் இந்த தருவாயில், பல சர்வதேச சவால்களும் பெரும் அதிகார மாற்றங்களும் இந்த உலகை எதிர் நோக்கியுள்ளன. பல புதிய சக்திகளின் உருவாக்கத்துடன் பழம்பெரும் ஆளுமை பொருந்திய நாடுகள், சர்வதேச அளவில் தங்களது அதிகாரத்தை இழந்தும் வருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மாற்றங்கள், அதிகார மாற்றம், அதிகார பரவல் என்ற இரு வகைகளில் ஏற்பட்டு வருகின்றன. சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி உலகையே ஆட்டி வைத்துள்ளது. உலக அளவில், இந்தியாவும் தனது அசாத்திய வளர்ச்சியை வெளிப்படுத்தியே வருகிறது. பொருளாதார ஈர்ப்பின் சர்வதேச மையமாகவும் அதிகரித்து வரும் பாதுகாப்பு சார்ந்த பதற்றங்களின் மேடையாகவும் சர்வதேச சுற்றுச் சூழல் மாற்றத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் மையமாகவும் ஆசியா உருவெடுத்துள்ளது.
புத்தாக்கம் என்பது தான் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் துருப்புச்சீட்டாக மாறியுள்ளது. புதிய சிந்தனைகளின் தொகுப்பே புத்தாக்கத்தின் வரலாறு. புதுமைகளைப் புகுத்தத் தவறினால், மறக்கப்படும் அபாயம் உள்ளது. செயலுத்திகளை மேம்படுத்துவதிலும் வெளியுறவுக் கொள்கையிலும் கூட இது உண்மை. இந்தப் புதிய சிக்கலான உலகம் பல சவால்களை நம்முன் நிறுத்தினாலும், வாய்ப்புகளுக்கும் குறைவில்லை. உலகின் மையம், இப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மாறிவருகிறது. ஆனால், புதிதாக உருவாகும் சக்திகளுக்குப் போட்டியும் கடுமையாகவே உள்ளது. புதிய சிந்தனைகளும் உலகம் குறித்த புதிய பார்வையும் தேவைப்படுகிறது. இந்தப் பின்னணியில், ரைசினா பேச்சு வார்த்தை என்பது உலக அரசியல் மற்றும் உலக பொருளாதார மேடையில் இந்தியா பீடு நடை போடும் ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
நரேந்திர மோதி அரசு பொறுப்பேற்றபின், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாகவும் செயல்திறம் மிக்கதாகவும் மாறியுள்ளது. ஜனநாயகம், பன்முகத்தன்மைகொண்ட மக்கள் தொகை, பெரும் சந்தைகள் ஆகிய தனது பலங்களை இந்தியா, வெளியுறவுக் கொள்கை இலக்குகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் வலுவான பொருளாதாரம் மற்றும் சுறுசுறுப்பான வெளியுறவுக் கொள்கை ஆகியவை இந்த ரைசினா பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக ஆக்கியுள்ளன. கடந்த ஆண்டுகளில் இந்த ரைசினா பேச்சு வார்த்தை பல அம்சங்களில் கவனம் செலுத்தி வந்துள்ளது. 2017-ல் ‘ புதிய இயல்பு நிலை’, 2018-ல் சீர்குலைக்கும்மாற்றங்கள், 2019-ல் “உலகின் புதிய அளவீடுகள்” 2020-ல் “நட்சத்திரக் கூட்டத்தை வழிநடத்தும் விடிவெள்ளி” என்ற கருப்பொருள்களுடன் சீரான பரிணாம வளர்ச்சி கண்டு வந்துள்ளது.
ரைசினா பேச்சு வார்த்தையின் இந்த ஐந்தாவது பதிப்பு, ரஷ்யா, ஈரான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், செயலுத்தி சிந்தனையாளர்கள் பலர், கல்வித்துறையினர் என்று சாதனை அளவில் நிபுணர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வாக விளங்குகிறது.. தொடக்கக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோதி அவர்கள் பங்கேற்றார்.
இந்தியா – சீனா இடையே சிக்கலான உறவுகள் இருந்த போதிலும் இரு நாடுகளும் இந்த உறவைச் சீர்குலைக்க முயலாது என்று இந்தக் கூட்டட்தில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெயசங்கர் குறிப்பிட்டார். சீர்குலைவுச் சக்திகளை சமநிலைப்படுத்தும் நிலையான பங்கை இந்தியா அளித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். விரிவான பிராந்திய பொருளாதார கூட்டாளித்துவத்தை (RCEP), இந்தியா எதிர்க்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தியா பெரும் பங்காற்றி வருவதை பல உலகத் தலைவர்கள் அங்கீகரித்தனர். தங்களது வளமைக்கும் சர்வதேச ஸ்திரத்தன்மைக்கும் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று பலதலைவர்கள் தெரிவித்தார்கள். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவி நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யாவின் முழு ஆதரவை வெளிப்படுத்தி உரையாற்றினார். எனினும், ‘இந்தோ – பசிபிக்’ என்பது ஒரு பிரிவினை கருத்து என்றும் அது சீனாவைக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் நோக்கிலானது என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃப் அமெரிக்காவின் ஒரு சார்புத்தன்மையை கண்டித்ததுடன், அந்தப் பெரியண்ணன் மனப்பான்மைக்கு எதிராக ஐரோப்பா குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் க்ளார்க், ஆஃப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் ஆன்டர்ஸ் ஃபாக் ரஸ்முசென், பூட்டானின் முன்னாள் தலைவர்ஷெரிங்க் டோப்கே மற்றும் தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் ஸ்யூங்க் சூ ஆகியோர் இந்த மூன்று நாள் கூட்டத்தில் உரையாற்றிய மற்ற முக்கிய தலைவர்கள் ஆவர். உலகின் ஜனநாயக நாடுகளின் கூட்டணியின் முக்கிய அங்கமாக இந்தியாவைக் காண விரும்புவதாக டென்மார்க் முன்னாள் பிரதமரின் கருத்தைப் பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரித்தனர். கனடாவின் முன்னாள் பிரதமர் தமது உரையில், பல சக்தி மையங்களைக் கொண்ட எதிர்கால உலகின் சிக்கல்களைத் தீர்ப்பதில் மிகப்பெரிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்று கூறினார்.
இந்தியா நெடுந்தூரம் கடந்து வந்துள்ளது. எனினும் அது இன்னும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது, குறிப்பாக, தன் அண்டையில். பயன்படுத்தப்படாத பல வாய்ப்புகள் இன்னும் காத்திருக்கின்றன. புவி அரசியலில் சமநிலைப்பாட்டை எட்டுவதற்கு தொடர்ந்து ஆதரவு திரட்டும். பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் குறிப்பிட்டது போல், பயங்கரவாதம் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இளைஞர்கள் தீவிரவாதத்திற்குப் பயிற்சி அளிக்கப்படுவதைத் தடுக்க ஜெனரல் ராவத் கூறும் வழி முறைகளை அரசு பின்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன்
Comments
Post a Comment