இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பு.
(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)
இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மாபெரும் வளர்ச்சி கண்டு, கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று, 45,500 கோடி டாலர் என்ற உச்சகட்ட அளவை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 2019 இல் இதுவே 41,200 கோடி டலர் என்ற அளவில் இருந்தது. இந்த இடைவெளியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அந்நிய நாணய சொத்து என்ற பிரிவில், 10 சதவிகித வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, ஜப்பானிய யென் என, பலதரப்பட்ட அந்நியச் செலாவணியின் தொகுப்பாக, அந்நிய நாணய சொத்து விளங்குகிறது. இவை அனைத்தும் அமெரிக்க டாலரில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, அன்னியச் செலாவணியை வாங்குவது விற்பது என்ற வகையிலும், அன்னியச் செலாவணிக் கையிருப்பைப் பயன்படுத்துவதால் கிடைத்த வருவாய் என்ற வகையிலும், வெளிநாட்டு உதவித் தொகை வாயிலாக மத்திய அரசு பெற்ற அந்நியச் செலாவணி என்ற வகையிலும், சொத்துக்களின் மறுமதிப்பீடு என்ற வகையிலும், அந்நிய நாணய சொத்து மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
அந்நிய நாணய சொத்து தவிர, தங்கம், SDA எனப்படும் சிறப்பு பெறுதல் உரிமைகள் மற்றும் கையிருப்பு ரொக்க நிலை போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் பிரிவுகளும் இந்தியாவின் அந்நியச் செலாவணியின் அங்கங்களாகும். மொத்த அன்னியச் செலாவணிக் கையிருப்பில், 2019 ஆம் வருடம் டிசம்பர் 20 ஆம் தேதி நிலவரத்தின்படி, அந்நிய நாணய சொத்து 93 சதவிகிதமும், தங்கம் 6 சதவிகிதமும், SDR 0.32 சதவிகிதமும், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் கையிருப்பு ரொக்க நிலை 0.80 சதவிகிதமும் பங்கு கொண்டுள்ளன.
வெளிநாட்டு வர்த்தக அளவு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையிலான விகிதம், பொருளாதார வெளிப்படைத் தன்மையின் அளவு, ரொக்கக் கையிருப்புக்கான தேவை ஆகியவை, அந்நியச் செலாவணிக் கையிருப்புக்கான தேவைகளை நிர்ணயிக்கின்றன.
இருப்பு நிர்வாகத்திற்கான அத்தியாவசிய சட்ட கட்டமைப்பானது, 1934 ஆம் வருட இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் ஆகும். அன்னியச் செலாவணிக் கையிருப்பிற்கான ஆதாரங்களில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் மூலதனக் கணக்கு அறிக்கை போன்றவற்றைப் பார்க்க வேண்டும்.
மூலதனக் கணக்கில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன - அவை அன்னிய நேரடி முதலீடு FDI, மற்றும் அன்னிய போர்ட்போலியோ முதலீடு FPI. ஆகியனவாகும். அன்னிய போர்ட்போலியோ முதலீட்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு, இந்தியாவில் வசிக்காத இந்தியர்களின் மூலதன முதலீடு, குறைந்த கால கடன், வெளிப்புற உதவி மற்றும் வெளிப்புற வர்த்தக கடன்கள் போன்றவை முக்கியக் கூறுகளாக உள்ளன. வர்த்தகப் பற்றாக்குறையில் முன்னேற்றம், அன்னிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீடு போன்றவற்றில் வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சமீபத்திய அந்நிய செலாவணிக் கையிருப்பு எழுச்சி கண்டுள்ளது.
இறக்குமதிச் செலவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அளவிற்கேற்ப, அன்னிய செலாவணிக் கையிருப்பின் அளவு அமையும். 2019-20 ஆம் வருட நடப்பு நிதியாண்டில், அந்நிய செலாவணிக் கையிருப்பு, 9.6 மாதங்களுக்கான இறக்குமதி என்ற அளவிலிருந்து, ஜூன் மாதம், 10 மாதங்களுக்கான இறக்குமதி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
உயரும் அந்நிய செலாவணிக் கையிருப்பு நிலையாக உள்ளதா அல்லது ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். அன்னியச் செலாவணிக் கையிருப்பின் பிரிவுகளைப் பொருத்து அது அமையும். உதாரணத்திற்கு, குறுகிய காலக் கடன் போன்ற ஏற்ற இறக்கங்கள் கொண்ட வரவு, அந்நியச் செலாவணியில் அதிகப் பங்கு கொண்டிருந்தால், அந்நியச் செலாவணிக் கையிருப்பு நிலையற்றதாகி விடும். காரணம், அன்னிய போர்ட்போலியோ முதலீடு என்பது ரொக்கப் பணத்திற்கு சமமானதாகும். உலகின் பிற பகுதிகளில் சாதகமான வட்டி விகிதம் நிலவினால், அன்னிய போர்ட்போலியோ முதலீடு அந்நாடுகளுக்குச் சென்று விடும்.
அன்னியச் செலாவணிக் கையிருப்பு மேலாண்மையில், இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையில், நிலையற்ற முதலீடு வருமானத்தின் விகிதம், கடந்த மார்ச் மாத முடிவில் 88.7 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து, குறைந்து, ஜூன் மாத முடிவில் 86.7 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் தேக்க நிலை மற்றும் இந்திய உள்நாட்டு சந்தையில் மிதமிஞ்சிய நிலை ஆகியன நிலவும் வேளையில், அன்னிய செலாவணிக் கையிருப்பில் ஸ்திரத்தன்மையை எதிர்பார்ப்பது முரணானது. இதனைக் கருத்தில் கொண்டு, அன்னிய செலாவணிக் கையிருப்பு அளவை நம்பியிராமல், நிதி மற்றும் நிதி சார்ந்த துறைகளில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொலைநோக்குடன் மேற்கொள்வதில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். 2020 ஆம் வருட மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல, இந்த அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளை அனைத்துப் பிரிவினரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
Comments
Post a Comment