எவரெஸ்ட் மலை சிகர பயண விதிகளை கடுமையாக்கும் நேபாளம்


அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

8848 மீட்டர் உயரமுள்ள, உலகிலேயே அதிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் மலையை தன்னகத்தே கொண்டுள்ள நேபாள நாடானது ஆண்டுதோறும் மலையேற்றத்தின் மூலமாக பெரும் வருவாயை ஈட்டுகிறது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அன்னாட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி, இமயமலை பகுதி முழுமையையும் உலுக்கிய அதி தீவிர பூகம்பத்தினால் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் ஏராளமான மலையேற்ற வீரர்கள் சிக்கினர், அதில் 22 பேர் உயிரிழந்தனர். இரண்டாவதான அதிக உயிரிழப்பாகும் மே மாதம் 11 பேர் உயிரிழந்தது. 800க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் இந்த ஆண்டு சிகரத்தை தொடும் முயற்சியை மேற்கொண்டதில், ஏராளமான வீரர்கள், மரண மண்டலம் என்றழைக்கப்படும் 8000 மீட்டர் உயரத்திற்கு அதிகமான உயரப் பகுதியில், நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்க நேர்ந்தது. கணிக்கப்பட்டிருந்த மிக குறைந்த கால அளவே கொண்ட பொருத்தமான வானிலை நேரத்திற்குள், ஒவ்வொருவரும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டி விட துடித்தனர். இந்த துடிப்பே இறப்புக்கு காரணமாக அமைந்தது. அதிக உயரத்தினால் மோசமான உடல்நிலையும், களைப்பும் இறப்புகளுக்கு காரணமாக அமைந்தது. இந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று மட்டுமே 223 மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதித்ததாக நேபாள அரசு அறிவித்துள்ளது. 2016 ஆண்டு 204 பேர் வெற்றிகரமாக சிகரத்தை எட்டிய நிகழ்வை இது முறியடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மலையேற்றத்திற்கு ஏற்ற காலத்தில் அபாயகரமாக அதிகரித்துவரும் கூட்டம் நேபாள அரசை கவலை கொள்ள வைத்துள்ளது. அதிகரித்து வரும் ஆர்வலர்களின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து நேபாள அரசு யோசித்து வருகிறது. இந்த ஆண்டு 381 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டதால், எவரெஸ்ட் சிகர பயணத்தில் பெரும் கூட்டமானது.

வல்லுனர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், புதிய விதிகளும் ஒழுங்குமுறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2020 மலையேற்ற பருவகாலத்தில் அவற்றை அறிமுகப்படுத்த நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மலையேற்ற வீரர்களும் நேபாளத்தில் குறைந்தது 6500 மீட்டர் உயரமுள்ள ஒரு சிகரத்தை எட்டியிருக்கவேண்டும், 11000 டாலர்கள் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் நல்ல உடல் ஆரோக்கியமுள்ளவர் என்பதற்கான அத்தாட்சி பத்திரம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும் என்று அந்த விதி முறைகள் கூறுகின்றன. எவரெஸ்ட் அடிவார முகாமில் ஆரோக்கிய பரிசோதனையை கட்டாயமாக்குவது குறித்தும் நேபாள அரசு யோசித்து வருகிறது. அனைத்து மலையேற்ற வீரர்களும் ஆயுள் காப்பீடு மட்டுமல்லாமல், தேடுதல், மீட்பு மற்றும் மருத்துவ காப்பீடு அனைத்தும் சேர்ந்த காப்பீடு கட்டயம் செய்திருக்கவேண்டும். மலையேற்ற வழிகாட்டிகளும் இது போன்ற உயர் சிகரங்களுக்கு அழைத்து செல்வதில் குறைந்த பட்சம் மூன்று வருட அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு தற்போதிருக்கும் விதிமுறைகளின் படி, தங்களது கடவு சீட்டின் நகல் ஒன்று, தங்களை பற்றிய சிறியதொரு சுய விவரக்குறிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சான்றிதழ் ஒன்று ஆகியவற்றை மட்டும் தந்தால் போதும். மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்கள் எவரெஸ்ட் சிகர ஏற்றத்திற்கான கட்டணமாக 35000 டாலர்கள், 8000 மீட்டருக்கு அதிகமான உயரம் கொண்ட ஏனைய மலை சிகர பயணங்களுக்கான கட்டண்மாக 20000 டாலர்கள் கட்டவேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. அதே போல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு வழங்கப்படும் அனுமதி சீட்டுகளின் எண்ணிக்கையையும் குறைப்பதனால் சிகரத்தில் நெரிசல் ஏற்படுவதை தடுக்கலாம் என்ற எண்ணமும் நேபாள அரசுக்கு இருக்கிறது; அதே சமயம் அப்படி செய்வதானால் ஏற்படும் வருமான இழப்பையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

1953 ஆம் ஆண்டில் முதல் முறையாக எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய பின், எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்க விரும்பும் வீரர்களின் எண்ணிக்கை, குறிப்பாக 1990களுக்கு பிறகு அதிகரித்துக் கொண்டேயுள்ளது. மனிதக் கழிவுகள், உணவு மிச்சங்கள், கூடாரங்கள், உபயோகப்படுத்திய ஆக்சிஜன் உருளைகள், ஏணிகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள் என எவரெஸ்ட்டின் சரிவுகள் எங்கும் குப்பைகளை விட்டு விட்டு செல்கின்றனர். நேபாள அரசின் பயணக்குழு ஒன்று, எவரெஸ்ட்டில் இருந்து இந்த ஆண்டு 11 டன் குப்பைகளையும் 4 உடல்களையும் அகற்றியுள்ளது.

, உலக வெப்பமயமாதலினால், மாறிவரும் பருவனிலை கால மாற்றங்களினால் உலகின் பல பகுதிகளிலும் பனிப்பாறைகள் உருகி பயங்கரமான பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்கள் பெருகி வருவது குறித்து சர்வதேச சமூகமானது பெரும் கவலை கொண்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், தற்போதிருக்கும் சூழ்நிலையில், அஃப்கானிஸ்தானிலிருந்து, இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசத்தையும் சேர்த்து மியான்மர் வரை நீண்டுள்ள இமயமலை பனிப்பாறைகளில் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பகுதி உருகிவிடும் என்று ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எவரெஸ்ட் மலை சிகரத்தை எட்ட விரும்புவோரின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் நேபாள நாட்டின் நடவடிக்கையை இந்தியா வரவேற்றிருக்கிறது. இது குறித்து கவலையடைந்திருக்கும் இந்தியா, இமய சுற்று சூழல் மேலும் பாழ்படாமல் இருக்கவேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளது. கால நிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டம் மற்றும் இமயமலை சுற்று சூழலை நிலை நிறுத்துவதற்கான தேசிய பணி திட்டம் ஆகியவற்றை இந்தியா தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. சிக்கிம், மேகாலாயா, நாகாலாந்து, உத்தராகண்ட் உட்பட 12 மலை மாநிலங்கள் கடந்த ஆண்டு 1500 இடங்களில் ‘இமயத்தை சுத்தம் செய்யும் நிகழ்வுகளை நடத்தின.






Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.