பாகிஸ்தான் தேசியப் பேரவையின் தீர்மானத்தை  மறுக்கும் இந்தியா.


(ஆகாசவாணியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.)

தன் உள் நாட்டு அமைப்புகளே ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும் விசித்திரமான ஒரு நாடு பாகிஸ்தான். இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் எதுவானாலும் அதில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் கெட்ட பழக்கமும் அதனிடம் உண்டு. இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியுரிமைத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உடனே பாகிஸ்தான் தேசிய பேரவையில் இது விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த ஒரு நாடோ இது பற்றி விவாதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள் நாட்டு விவகாரம். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தானிலிருந்து மத ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு இந்தியா வந்த சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

இச்சட்டத்தின் மூலம், சர்வதேச அரங்கில் அந்நாடு தன் சிறுபான்மையினரை நடத்தும் விதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதே பாகிஸ்தான் இப்படிப் பொங்கியெழ க் காரணமாகும். தன் நாட்டுக் குடிமக்களைக் காக்கும் பொறுப்புள்ள ஒரு அரசு, தொடர்ந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடுமைகளை ஒழிக்கத் தவறிய வரலாற்றைப், பாகிஸ்தான் கொண்டுள்ளது. சிறுபான்மையினரிடையே எப்போதும் ஒரு பயம் நிலவி வருகிறது. இறை எதிர்ப்பு என்ற குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்துவப் பெண்மணி ஆசியா பிபியை அண்மையில் பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் விடுவித்த போது, அடிப்படைவாதிகள் ஆற்றிய எதிர்வினையை உலகமே பார்த்தது. அந்தப் பெண்மணி தன் குடும்பத்துடனும் அவருடைய வழக்கறிஞரும் கூட பாகிஸ்தானை விட்டு ஓடி வெளி நாடுகளில் அடைக்கலம் கோர நேர்ந்ததை உலகம் இன்னும் மறக்கவில்லை.

இப்போது, பாகிஸ்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் நிறுவன உறுப்பினரும் பாகிஸ்தானின் முதல் சட்ட மற்றும் தொழிலாளர் அமைச்சருமான ஜொகேந்திர நாத் மண்டல் அவர்களே 1950 –களில் பாகிஸ்தானை விட்டு அடைக்கலம் தேடி வெளியேற வேண்டியிருந்தது வரலாறு. அவர் வெளியேறிய காரணம் அந்தப் புதிதாக உருவான நாடு, தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை நடத்திய விதம் தான். பின்னர் அவர் பாகிஸ்தான் குடியுரிமையைத் துறந்து கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் அடைக்கலம் நாடினார்.

பாகிஸ்தானின் இன்னொரு பெருமை மிகு திருமகனும், பார்சி இனத்தவருமான நீதிபதி டோரப் பட்டேல் அவர்கள் தலைமை நீதிபதியாகும் உரிமை மறுக்கப்பட்டார். காரணம், முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்துக்குரல் கொடுத்த ஒரே நீதிபதியாக அவர் இருந்ததே. இப்படி பல உதாரணங்கள். பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஏ க்யூ கான் அவர்களும் அஹமதியா இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக பாகுபடுத்திப் பார்க்கப்பட்டார்.

இந்தியாவின் உள் நாட்டு விவகாரங்களைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் தேசியப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா உறுதியாக மறுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் விவகாரம்குறித்த தனது பொய்ப் பிரச்சாரத்தை பரப்ப பாகிஸ்தான் எடுத்துள்ள வீண் முயற்சி என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மீதான எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் பாகிஸ்தானின் தொடர் முயற்சி இது. இந்த முயற்சிகள் தோல்வியடையும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான பாகிஸ்தானின் கொடுமைகளை உலகத்தின் பார்வையிலிருந்து மறைக்க எடுக்கப்பட்ட ஒரு பயனற்ற மாறுவேட முயற்சியே இந்தத் தீர்மானம் என்றும் இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மை மதத்தினரான ஹிந்து, கிறிஸ்தவர், சீக்கியர் போன்றோரின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துள்ளதே அவர்களின் நிலையைப் பிரதிபலிக்கின்றது

இந்தியக்குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 –ன் நோக்கங்களைக் கொச்சைப் படுத்தும் நோக்குடனே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாடுகளிலிருந்து மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்தச் சட்டம். ஏற்கெனவே இந்தியாவில் இந்தியராக வாழும் எந்த மதத்தவரின் குடியுரிமையையும் பறிக்கும் அம்சம் எதுவும் இதில் இல்லை.

சிறுபான்மையினருக்குஎதிராக சட்டத்தை இயற்றிய அதே பாகிஸ்தானின் தேசியப் பேரவை, பிறரைக் குறை சொல்வது வேடிக்கையானது. தங்கள் தவறுகளை மறைத்து மற்றவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டு, தன்னையே சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியுள்ளது இந்தியா.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், சுதந்தரமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, மக்களின் வாக்குரிமையால், நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே இது வரை ஆட்சி செய்துள்ளன. மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் அரசியலைமைப்புச் சட்டப்படி, சமமான உரிமைகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் இந்த உயரிய கோட்பாடுகளைப் பாகிஸ்தானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது இந்தியா.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், உயர் தேசத் துரோகக் குற்றத்துக்காக, பெஷாவரின் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் பாகிஸ்தான் பேரவையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நாடு கடத்தப்பட்ட முஷாரஃப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்த தீர்ப்பு வெளிவந்தவுடனே, பாகிஸ்தான் ராணுவம், முஷாரஃப் ஒரு விசுவாசமான பாகிஸ்தானியர் என்று கருத்து தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.