மத்ரித் மாநாட்டில் பருவ நிலை மாற்றத்துக்கு எதிரான இந்தியாவின் திட்டம்
இந்தியன் அறிவியல் இதழின் ஆசிரியர் என் பத்ரன் நாயர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்
பருவ நிலை மாற்றம் என்பது புறந்தள்ள முடியாத ஒரு நிதர்சனம். எந்த ஒரு நாடும் இதன் தாக்கங்களிலிருந்து தப்ப முடியாது. காரணம், எந்த ஒரு நாட்டின் செயல்பாட்டாலோ செயலற்ற தன்மையாலோ இது நிர்ணயிக்கப்படுவதில்லை. இதன் தாக்கத்தை இந்தியா ஏற்கெனவே உணரத் தொடங்கிவிட்டது. பருவம் தவறிய மழை, அதிக வெப்பம், அதற்கு நேர் எதிரான அதிக குளிர் இவையெல்லாவற்றிற்குமே பருவ நிலை மாற்றம் ஒரு காரணம். இதனால், உணவு உற்பத்தி, ஆரோக்கியம் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
2015 பாரிஸ் ஒப்பந்தத்தை2020-ல் இருந்து நடைமுறைப்படுத்தும் செயல்முறைகளை இறுதிசெய்யும் காப்25 பருவ நிலை மாநாடு அண்மையில் மத்ரித்தில் நடந்தது.
இரு வாரங்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம், அதன் விளைவுகள் குறித்த அறிவியல் பூர்வமான எச்சரிக்கைகளும் இந்தப் பேரழிவிலிருந்து மனித இனத்தைக் காக்கும் வழிமுறைகளும் ஆராயப்பட்டன. இயற்கையின் மீதான இந்தத் தாக்குதல் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், அனைத்து நாடுகளும் இது குறித்த தனது நடவடிக்கைகளையும் அவற்றின் வேகத்தையும் முடுக்கி விட்டால் மட்டுமே இந்த ஆபத்தைக் குறைப்பதில் நாம் ஓரளவாவது வெற்றி பெற முடியும் என்று பருவ நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான ஐ நா அமைப்பான ஐ பி சி சி கூறியுள்ளது.
“உலக வெப்பமயமாதலை1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பை இழக்கும் தருவாயில் நாம் இருக்கிறோம்” என்று ஐ நா-வின் சுற்றுச்சூழல் அமைப்பு தனது 2019 ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக வெப்பமயமாதல் இதே வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்தால், 2030-2052 காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1.5 டிகிரி செல்ஷியஸ் கூடும் என்று அறிவியல் பூர்வமான தனது சிறப்பு அறிக்கையில் ஐ பி சி சி குறிப்பிட்டுள்ளது.
பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சிகள் எடுக்க உலக நாடுகள் முதல் முறையாக ஒப்புக்கொள்ள உதவியது, 2015 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உச்ச மாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தம் தான். உலக வெப்பமயமாதலின் அதிகரிப்பை இந்த நூற்றாண்டில் 2 டிகிரிசெல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்தி, மேலும் அதை 1.5 என்ற அளவுக்குக் கொண்டு வருவதற்கு உலக நாடுகளை ஒன்றிணைப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். இதற்கு அனைத்து நாடுகளையும் ஒத்துக்கொள்ள வைப்பதே மத்ரித் மாநாட்டின் நோக்கமாக இருந்தது.
சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள், மரபு சார் எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் மொத்த கரியமில வாயு உமிழ்வில் 60 சதவிகிதம் பங்களிக்கின்றன. ஒரு ஜிடிபி புள்ளிக்கான உமிழ்வு அளவை 2005-ல் இருந்ததை விட 2030-ல் 33-35% வரை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. நடப்புக் கொள்கைகளுடன் நிபந்தனையற்ற இலக்கை எட்ட இந்தியா எண்ணுகிறது. மேலும், 15% வரை இலக்கை உயர்த்தவும் முற்படுகிறது. இது நான்கு முன்னெடுப்புகளைப் பொருத்துள்ளது. அவை, நிலக்கரிப் பயன்பாட்டுக்குப் பதிலாக மாற்று எரிபொருள் பயன்பாடு, உமிழ்வற்ற தொழில்நுட்பத்தை நோக்கிய பசுமை தொழில் மயமாக்கும் உத்தி, பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு அதிகரிப்பு, மின் வாகனப்பயன்பாடு ஆகியன.
நிலையான வளர்ச்சி குறித்த மகாத்மா காந்தியின் அறிவு சார் கருத்தை மத்ரித் மாநாட்டில் இந்தியா முன் வைத்தது. தேவைகளைக் குறைத்து எளிமையான வாழ்க்கை முறையைக் கையாளுதல் என்பதே அது. நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியின் அடிப்படையில் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தீர்வுகளை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.
காப் 25 மாநாட்டில் இந்தியக் குழுவின் தலைவரும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள், “ இந்தியா ஜிடிபி உமிழ்வு அளவை 21 சதம் வரை குறைத்துள்ளது.ம் பாரிஸில் வாக்களித்தது போல் 35 சதம் வரை குறைப்பதை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் குறித்த நடவடிக்கை எடுப்பதில் இந்தியா, முதல் ஆறு உலக நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
பாரிஸ் மாநாட்டில் ஒப்புக்கொண்ட 175 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 83 கிகாவாட் வரை இந்தியா ஏற்கெனவே எட்டிவிட்ட நிலையில்,இந்த இலக்கை 450 கிகாவாட்டாக உயர்த்தவும் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பருவ நிலை மாற்றம் என்பது ஒரு நிதர்சனம். இதனால் உலகம் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் மனித இன அழிவைச் சந்தித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை எதிர்கொள்வது என்பது ஒரு அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. மரபு சார் எரிபொருள் சார்பிலிருந்து நாம் மாறியே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்
Comments
Post a Comment