அண்டை நாடுகளிலிருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா.

(தெற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிரிதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

அண்டை நாடுகளிலிருந்து, துன்புறுத்தல்களால் அவதிப்பட்டு வெளியேறி, இந்தியா வந்த சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை எதிர்த்து பாகிஸ்தான் குரல் கொடுத்துள்ளது. பிரிவினையின்போது, 23.5 சதமாக இருந்த சிறுபான்மையினத்தவரைத் திட்டமிட்டு அழித்து, தற்போது 3.5 சதமாகக் குறைப்பதற்குக் காரணமாக விளங்கிய பாகிஸ்தான், இவ்விஷயம் குறித்துப் பேச அருகதையற்றது.

நேருவுக்கும், லியாகத் அலிக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வசிக்கும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பாகிஸ்தானில், சிறுபான்மையினத்தவரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததோடு, அங்கிருந்து சிறுபான்மை மதத்தினைச் சேர்ந்தவர்கள் வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். பங்களாதேஷில், 1971 ஆம் ஆண்டில், 21.3 சதமாக இருந்த சிறுபான்மையினத்தவரின் எண்ணிக்கை, 8.5 சதமாகக் குறைந்துள்ளது. சிறுபான்மையினத்தவர் பாகுபாடு செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. மாறாக, இந்தியாவில் பிரிவினையின்போது 9.8 சதமாக இருந்த சிறுபான்மையினத்தவரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. சிறுபான்மையினத்தவர் இந்தியாவிலும், அண்டைநாடுகளிலும் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பிரிவினைக்குப் பின், பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினத்தவரின் வாக்குரிமையைப் பறிக்க, பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறுபான்மையினத்தவருக்கு என, தனி தேர்தல் நடைமுறை நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தேர்தல் அரசியலில் அவர்களின் பங்களிப்பை ஒன்றுமில்லாமல் செய்தது பாகிஸ்தான். சிறுபான்மையினத்தவர் யாரும் அதிபர் அல்லது பிரதமர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்று பாகிஸ்தான் அரசு தீர்மானித்தது. அரசியலமைப்பின்படி, இவ்வாறு இழைக்கப்பட்ட தவறைச் சரி செய்யக் கோரும் மசோதா ஒன்றை கடந்த அக்டோபர் மாதம், பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்துவ உறுப்பினர் முன்வைத்தபோது, பாகிஸ்தான் தேசிய சபை அதனைக் குரல் வாக்கெடுப்பு மூலம் புறக்கணித்தது.

ஹிந்து, கிறிஸ்துவ, சீக்கிய சிறுபான்மையினத்தவரைத் தவிர, பாகிஸ்தானிலுள்ள அகமதியாக்கள் முஸ்லீம் அல்லாதோர் என, பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது திருத்தம் அறிவித்தது. அதிகம் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அறியப்பட்ட அகமதியாக்கள், 1984 ஆம் ஆண்டு முதல், தனி தேர்தல் நடைமுறையின்படி, முஸ்லீம் அல்லாதோராக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்டனர். இதனால், அகமதியாக்கள் தேர்தலை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்தனர். அல்லா வசாயா – பாகிஸ்தான் கூட்டமைப்பு (ரிட் மனு 3862, 2017) வழக்கில் தீர்ப்புக் கூறிய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, அகமதியாக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டிக் கொள்ளும் வகையில், தங்கள் பெயர்களில், ‘கதியானி’, ’மிர்ஸா’ போன்ற பெயர்களை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது குறிப்பிடத் தக்கது. பெரும்பாலும் தூக்குத் தண்டனையில் முடியும் மத நிந்தனைக் குற்றச்சாட்டுகள், சிறுபன்மையினத்தவர் மீது அடிக்கடி சுமத்தப்பட்.டு, மத நிந்தனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகின்றனர். சாதாரண சர்ச்சைகளுக்கும் மத நிந்தனை சாயம் பூசி, சிறுபான்மையினரைத் தண்டிக்க, மத நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் மத மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்கள், பலவந்தமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.

பாகிஸ்தானில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லீம்களையும், முஸ்லீம் அல்லாதோர் என அறிவிக்க, மதத் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர். பாகிஸ்தானை சுன்னி இஸ்லாமிய நாடாக அறிவித்து, ஷியா பிரிவினரை நாடுகடத்த வேண்டும் என, தீவிரவாத அமைப்புக்கள் வற்புறுத்துகின்றன. .

மதரீதியிலான சிறுபான்மை இனத்தவர் மட்டுமல்லாது, பாகிஸ்தான் குடிமக்களான முன்னாள் கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வங்காள முஸ்லீம்கள், பலூசிகள் மற்றும் மொஹாஜிர்கள் ஆகியோர், இரண்டாம் தரக் குடிமக்களாகப் பாகுபடுத்தப்படுவது, அந்நாட்டில், பாகுபாடுகளுக்கான கட்டமைப்பு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பறைசாற்றுகிறது. 1971 ஆம் ஆம் ஆண்டு முதல், ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸிலின் கீழ் உள்ள முகாம்களில் வசிக்கும் பிஹாரிகளை ஏற்றுக் கொள்ள பாகிஸ்தான் மறுத்து விட்டது. இந்த பிஹாரிகள் பாகிஸ்தானில் குடியேற்றம் பெற விரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டைநாடுகளிலிருந்து, துன்புறுத்தல்களால் அவதிப்பட்டு வெளியேறி, இந்தியா வந்த முஸ்லீம் அல்லாத சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க இந்தியா முற்பட்டுள்ளதற்கு எதிராக, சிறுபான்மையினருக்கு எதிரான மோசமான நடத்தையைப் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் குரல் கொடுப்பது ஆச்சரியமளிக்கிறது. முன்னதாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காத 19 லட்சம் பேர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்து, கடுமையான விமரிசனங்களைப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்தார். பதிவேட்டில் இடம் பெறாததற்கு எதிராக மனு அளிக்க இவர்களுக்கு உரிமை உண்டு.

1947 ஆம் ஆண்டு முதல், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அண்டைநாடுகளிலிருந்து, சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்நாடுகளில் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இந்த அகதிகள் வெளியேறி வருகின்றனர். அவர்கள், அந்நாட்டுகளில் சமூக விரோதக் கும்பல்களாலும் துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் மூலம், அவர்கள் இந்தியாவில் தங்குவதற்கான சட்டரீதியிலான அனுமதி வழங்கவும், இந்தியக் குடிமக்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் பெறவும் வகை செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.