விண்வெளியில் இந்தியாவின் மிகவும் கூர்மையான கண்.
(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தாவன் விண்வெளி மையத்திலிருந்து, ”விண்வெளியில் இந்தியாவின் மிகவும் கூர்மையான கண்” என்று அழைக்கத்தக்க மூன்றாம் தலைமுறை, நவீன புவி புகைப்பட, வரைபட செயற்கைக் கோளான கார்ட்டோசால் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் துருவ செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டான பிஎஸ்எல்வி –சி 47 இந்த செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்ணில் ஏவப்பட்ட 17 ஆவது நிமிடத்தில், கார்ட்டோசால் 3 செயற்கைக் கோள், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ஆறு பூஸ்டர்களை சுமந்து கொண்டு, விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி –சி 47 ராக்கெட், பிஎஸ்எல்வி தொகுதியில் இதுவரை இஸ்ரோ வின்ணில் செலுத்திய ராக்கெட்டுகளிலேயெ மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த ராக்கெட், அமெரிக்காவின் 13 நேனோ செயற்கைக் கோள்களையும் சுமந்து சென்றது. கார்ட்டோசால் 3 செயற்கைக் கோளை விண்ணில் ஏவியபின், ஒன்றன் பின் ஒன்றாக, இந்த 13 நேனோ செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இஸ்ரோ, 2005 ஆம் ஆண்டு முதல் இதுவரை, 8 கார்ட்டோசாட் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இதில், ஒரு கார்ட்டோசாட் – 1 செயற்கைக் கோளும், ஏழு கார்ட்டோசாட் – 2 செயற்கைக் கோள்களும் அடங்கும். இந்த செயற்கைக் கோள்களின் தரவுகளை, குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் விரைந்து விண்ணில் செலுத்தப்பட்ட கடைசி நான்கு கார்ட்டோசாட் – 2 செயற்கைக் கோள்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளை அதிகளவில் ராணுவப் படை பயன்படுத்திக் கொண்டுள்ளது. 1,625 கிலோ எடையுள்ள கார்ட்டோசாட் – 3 செயற்கைக் கோள், இதற்கு முன்னதாக ஏவப்பட்ட 8 செயற்கைக் கோள்களின் மொத்த எடையைப் போல் இரண்டு மடங்குக்கும் அதிகமான எடை கொண்டதாகும். அதிநவீன கேமரா, அதிவிரைவில் தகவல் பரப்பு, நவீன கணினி, புதிய சக்தி மின்னணுக் கட்டமைப்பு ஆகிய புதிய தொழில்நுட்பங்களை கார்ட்டோசாட் – 3 உள்ளடக்கியுள்ளது.
புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் வரிசையில் 9 ஆவதாக ஏவப்பட்டுள்ள கார்ட்டோசாட் – 3, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மிகத் துல்லிய, புவி புகைப்பட மற்றும் வரைபடத் திறன் கொண்டதாகும். இது, எல்லைப் பகுதியைக் கண்காணிக்கப் பெரிதும் உதவும். கார்ட்டோசாட் – 3, தற்போது விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் புவி கண்கணிப்பு செயற்கைக் கோள்களிலேயே, மிக அதிகத் துல்லியப் படம் எடுக்கவல்லதாகும். அமெரிக்காவின் மக்சார் என்ற நிறுவனத்தின் செயற்கைக்கோளான வேர்ல்ட் வியூ – 3 இன் துல்லியத் திறன், பூமியில் 31 செ.மீ. அளவில் இருக்க, கார்ட்டோசாட் – 3, அதனைவிட, அதிகத் துல்லியத் திறன், அதாவது பூமியில் 25 செ.மீ. என்ற அளவைக் கொண்டதாக விளங்குகிறது. அதாவது, பூமியின் மேல் 500 கி.மீ. தூரத்தில் இருந்து கொண்டு, பூமியிலுள்ள 25 செ.மீ. அளவுள்ள பொருளைப் படம் பிடிக்கும் திறன், கார்ட்டோசாட் – 3 க்கு உள்ளது. கார்ட்டோசாட் – 2 தொகுதியில் விண்ணில் செலுத்தப்பட்ட, 2C, 2D, 2E மற்றும் 2F செயற்கைக் கோள்களின் திறன், 65 செ.மீ. ஆக இருந்தது.
அமெரிக்காவின் 13 நேனோ செயற்கைக் கோள்களில், மெஷ்பெட் என்ற தகவல் பரிசோதனை இலக்கு கொண்ட ஒரு செயற்கைக் கோளும், 12 ஃப்ளாக் -4P என்ற, புவி கண்காணிப்பு நேனோ செயற்கைக் கோள்களும் அடங்கும்.
கார்ட்டோசாட் செயற்கைக் கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள், வரைபடம் தயாரித்தல், நகர மற்றும் ஊரகப் பயன்பாடு, உள்கட்டமைப்பில் திட்டமிடல், கடற்கரையோர நிலப் பயன்பாடு மற்றும் கட்டுப்பாடு, சாலை வலையங்கள், நீர்த்தேக்கம் மற்றும் விநியோகம் ஆகிய பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
கார்ட்டோசாட் – 3 செயற்கைக் கோள் தயாரிப்பு மற்றும் சோதனைகளில், இந்தியத் தனியார் நிறுவனங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளன என்பது இதன் சிறப்பம்சமாகும். இது, செயற்கைக் கோள்களின் முழு வடிவமைப்பிலும், தனியார் நிறுவனங்கள் பங்கு கொள்ள வழி வகுக்கும் என்று இஸ்ரோ நம்புகிறது. இஸ்ரோ, ஆண்டொன்றுக்கு 12 முதல் 18 செயற்கைக் கோள்களைத் தயாரிக்க இலக்கு கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 36 செயற்கைக் கோள்களில், 27 கோள்களில், தனியார் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக, பிஎஸ்எல்வி –சி 47 ராக்கெட்டின் வெற்றிகரமான இந்த ஏவுதல் அமைந்துள்ளது. இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட 49 ஏவுதல்களில், 2 முறை மட்டுமே தோல்வி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக, 1993 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி தோல்வியில் முடிந்தது. இதேபோல், 2017 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி C 39 இன் வெப்பக் கவசம் சரிவரத் திறக்காததால், அது சுமந்து சென்ற IRNSS-1H செயற்கைக் கோளை விண்ணில் ஏவ இயலவில்லை. நிலவுக்கும், செவ்வாய்க் கிரகத்திற்கும், பிஎஸ்எல்வி வெற்றிகரமாகப் பயணித்துள்ளது.
முதன்முதலாக, இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பாக, பூமியின் குறைந்த சுற்றுப் பாதையில், இந்திய விண்வெளி வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர். இந்த முயற்சியில் இஸ்ரோ நிச்சயமாக வெற்றி பெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment