பிரிட்டனில் திடீர் தேர்தல் – ஒரு கண்ணோட்டம்.
(ஐரோப்பிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் எனப்படும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் எட்டும் முயற்சியாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், டிசம்பர் 12 ஆம் தேதி, முன் கூட்டியே, தேர்தல்களை அறிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் நான்காவது முறையாகத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ல் நடந்த பிரெக்ஸிட் குறித்த பொது வாக்கெடுப்புக்குப் பிறகு, அந்நாடு சந்தித்து வரும் அரசியல் தேக்க நிலையிலிருந்து வெளிவர மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2017-ல் அப்போதைய பிரதமர் தெரசா மே அவர்களால் அறிவிக்கப்பட்ட திடீர் தேர்தலில், அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவை அவர் ஜனநாயக ஒருங்கிணைப்புக் கட்சியிடமிருந்து பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.
மூன்றாவது வாரத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின், கருத்துக் கணிப்புக்களின் படி, தொழிலாளர் கட்சியைவிட கன்சர்வேடிவ் கட்சி,19 புள்ளிகள் முன்னணியில் உள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் வாக்கு சதவீதம் 47 ஆகவும், தொழிலாளர் கட்சிக்கு 28 ஆகவும் உள்ளது. லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கு வாக்கு சதவீதம் 12 ஆகவும், பிரெக்ஸிட் கட்சிக்கு 3 ஆகவும் உள்ளது. தற்போதைய மிக முக்கியமான விஷயமான பிரெக்ஸிட் குறித்த முக்கியக் கட்சிகளின் நிலைப்பாடு, அவர்களின் தேர்தல் அறிக்கையில் எவ்வாறு பிரதிபலித்தது என்பது இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. ஜனவரி மாதத்திற்குள் பிரெக்ஸிட்டை நடைமுறைப்படுத்தி புதிய பிரிட்டனின் சகாப்தத்தைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் உள்ளது. பிரெக்ஸிட் நடைமுறைப் படுத்தப்படுவதனால் பள்ளி, காவல் மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடுகளைச் செலுத்த முடியும் என்று அக்கட்சி கூறிவருகிறது.
தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் அவர்கள், அண்மையில் தமது தேர்தகல் அறிக்கை வெளியீட்டின் போது, கட்சி ஆறு மாதங்களில் பிரெக்ஸிட் விஷயத்தை சுமுகமாகத் தீர்த்து வைக்கும் என்று உறுதியளித்துள்ளார். தங்களது புதிய திட்டம், நிரந்தரமான, விரிவான, பிரிட்டன் முழுவதற்குமான சுங்க ஒன்றியம் மற்றும் ஒற்றைச் சந்தை முறையை ஒட்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார். மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசுகையில், கோர்பின் அவர்கள், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தங்கி இருக்கவா, விடவா என்று பொருள்படும் லீவ் ஆர் ரிமெய்ன் என்ற கொள்கைக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று கூறினார். இந்த நடுநிலையான நிலைப்பாடு அவருக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்புள்ளது. ஏனெனில், வலுவிழந்துள்ள அரசியல் சூழலிலிருந்து நாட்டை மீட்டு, சமூக, பொருளாதார நிச்சயத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய தலைமையைத் தான் மக்கள் இப்போது விரும்புகிறார்கள். லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியோ தாங்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனைப் பிரிக்காமல் வைத்து, 50 ஆவது சட்டப்பிரிவை நீக்கப் போவதாக உறுதியளித்துள்ளது. பிரெக்ஸிட் கட்சி, ‘சீரான பிரெக்ஸிட்’ என்ற கோஷத்தை முன்னெடுத்து, டோரிக்களுடன் உடன்பாட்டை விரும்புகிறது.
இதற்கிடையில், தொழிலாளர் கட்சியானது, தேவையே இல்லாமல், பிரிட்டன் தேர்தல் களத்தில், இந்தியாவின் பெயரை இழுத்துள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் அக்கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். அதில், காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்து வருகிறது என்றும் காஷ்மீர் மக்கள் தங்கள் வாழ்வைத் தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என்றும் தவறாக சித்தரிக்கப்பட்டது. இது, உண்மைக்கு முற்றிலும் புறம்பான, அபத்தமான நிலைப்பாடாகும். ஒரு இறையாண்மையுள்ள நாடான இந்தியா, தனது உள்நாட்டு விவகாரங்களில் மாற்றங்களைக் கொண்டு வர, முற்றிலும் உரிமை கொண்ட நாடாகும். 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம், உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பரவலான வரவேற்பையே பெற்றது. பிரிட்டன் நாட்டுத் தேர்தலில் வாக்குகளை அள்ள, காஷ்மீர் போன்ற பிரச்சனையை எழுப்புவது தேர்தலுக்கு முன்னர், தேவையற்ற இறுக்கத்தை விளைவிக்கவே வழிவகுக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சிக்கலைத் தீர்க்காத வரை, பிரிட்டனின் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையுடன் தான் இருக்கும். அதிகமான நிச்சயமற்ற நிலை, வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தடுக்கும். எனவே, வரும் ஆண்டில், பிரெக்ஸிட் விவகாரம் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். திடீர் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம், பிரதமர் ஜான்சன் அவர்கள், ஆபத்தை விலைக்கு வாங்கியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சி வென்றால், ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டுக்கான ஏற்பாடுகள் தொடரும் என்று கருவூலத்துறை அமைச்சர் ரிஷி சுனாக் கூறியுள்ளது அவரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தும். வரும் 2020 டிசம்பர் 31-க்குப் பிறகு, எந்தப் பேச்சுவார்த்தையும் தொடரப்படாது என்ற பிரதமரின் முடிவு, ஐரோப்பிய ஒன்றியம் இடும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டோ அல்லது ஒப்பந்தமில்லாத வெளியேற்றத்துக்கோ தான் வழிவகுக்கும். நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் குறித்த எந்த நிலைப்பாட்டுக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல், இவ்விஷயத்தில் முக்கியத் தடைக்கல்லாக உள்ளது. எந்த முடிவும் எடுக்கப்படும் முன் இந்த சிக்கல் தீர்க்கப்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment