சிபிஇசி திட்டத்தில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

சீனாவின் பிஆர்ஐ எனப்படும் வளையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டமும், அதன்கீழ், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் , சிபிஇசி (CPEC) திட்டமும், 2013 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட நாள் முதலே, இந்தியா இத்திட்டத்தின் மீது கவலை கொண்டுள்ளது. இத் திட்டம், இந்தியாவின் இறையாண்மையை பாதிப்பதோடு, விதிகளுக்குட்பட்ட ஒழுங்கு அமைப்பிற்கும் அது சவாலாக விளங்குவதால், கொள்கை ரீதியான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, சிபிஇசி திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிஆர்ஐ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் நாடாகும். சீனாவில் இதற்கு முன்பு நடைபெற்ற பிஆர்ஐ மன்றத்தின் இரண்டு கூட்டங்களுக்கு, தனது பிரதிநிதிகளை அனுப்பாத ஒரே நாடாகவும் இந்தியா விளங்குகிறது. 2013 ஆம் வருடம் முதல் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் சிபிஇசி வழித்தடத்திற்கு எதிராக, இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. சிபிஇசி திட்டம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லைகள் குறித்த கவலைகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பது இந்தியாவின் அதிகாரபூர்வமான நிலைப்பாடாகும்.

இந்தியா மட்டுமல்லாமல் இதர நாடுகளும் பிஆர்ஐ திட்டத்தின் மீது,, குறிப்பாக சிபிஇசி திட்டத்தின் மீது, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. சிபிஇசி திட்டத்தின் மீது, அமெரிக்காவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. பிஆர்ஐ திட்டத்தில் உள்ள புவிசார் அரசியல் தன்மையை , தொடக்கம் முதலே இந்தியா மிகத் தெளிவாகக் கண்டுள்ளது என்றும், பொருளாதார அடிப்படையற்ற, பிறநாடுகளின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் திட்டங்கள் மீது இந்தியா கொண்டுள்ள கவலைகளைத் தாமும் பகிர்ந்து கொள்வதாகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களின் இணையமைச்சர் அலைஸ் வெல்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் சீனா – பாகிஸ்தான் இடையேயான கூட்டு, இந்தியாவின் இறையாண்மை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் பிஆர்ஐ திட்டம் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் சீனா மேற்கொள்ளும் ஆதிக்க அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிராக, இந்தியாவும் அமெரிக்காவும் கொண்டுள்ள ஒத்த கருத்துக்களைப் பிரதிபலிக்கும் விதமாக, அலைஸ் அவர்களின் கருத்து உள்ளது. பிஆர்ஐ திட்டத்திற்கு மாற்றாக, பல நாடுகளுக்கு, நீடித்த மற்றும் நம்பகமான திட்டத்தை வழங்க ஜப்பானுடன் இணைந்து செயல்பட இந்தியா ஏற்கனவே முனைந்துள்ளது. ஆசியா ஆப்பிரிக்கா வளர்ச்சி வழித்தடம் ஏஏஜிசி, சமீபத்தில் இலங்கையுடன் கையெழுத்திட்டுள்ள ஆழ்கடல் கொள்கலன் முனையம் ஆகிய திட்டங்கள், இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படும் மாற்றுத் திட்டத்திற்கு உதாரணங்களாகும். இந்தத் திட்டங்களில் இணைந்து கொள்ள அமெரிக்காவும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

வெல்ஸ் அவர்களின் கருத்துக்களை, இந்தியா- அமெரிக்காவிற்கு இடையே வேகமாக வளர்ந்துவரும் கூட்டாளித்துவத்தின் ஒரு அங்கமாகவும் பார்க்கலாம். இந்த வருடம் செப்டம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணமும், அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், அமெரிக்க செயலுத்தி சமூகத்துடன் ஏற்படுத்திய தொடர்பும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேலெடுத்துச் செல்ல முக்கியப் பங்கு வகித்துள்ளன. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் நல்லுறவு காரணமாக, சீனா – பாகிஸ்தான் கூட்டு இந்தியாவுக்கு சவாலாக உள்ளதை, அமெரிக்க கொள்கையாளர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

சிபிஇசி திட்டத்தினால் பாகிஸ்தானுக்கு ஏற்படக் கூடிய பொருளாதார அபாயங்களையும், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார். சீனா , நேர்மையான நிதி நடைமுறைகளைப் பின்பற்றுவது இல்லை என்றும், அது பாகிஸ்தானைக் கடனில் சிக்க வைக்கக் கூடும் என்றும் அவர் கூறினார். இது பரஸ்பரம் நன்மை பயக்கும் திட்டம் அல்ல என்றும், இது சீனாவிற்கு மட்டுமே பயன்தரும் திட்டமாக உள்ளது என்றும் அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். 2019 ஆம் வருடத்தில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி, 3.3 சதவீதமாக உள்ளது. அது 2020 ஆம் வருடத்தில் 2.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஇசி என்பது, பல கோடி டாலர் மதிப்பிலான திட்டமாகும். இத்திட்டத்தினால் பாகிஸ்தானின் வெளிக் கடன்களும் உயர்ந்துள்ளன. 2018 ஆம் வருடத்தில் பாகிஸ்தானின் வெளிக் கடன், 10,500 கோடி டாலர் அளவை எட்டியது. அதே வருடத்தில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 31,200 கோடி டாலராக இருந்தது. பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தைத் திடப்படுத்த, இந்த வருடம் மே மாதம், சர்வதேச நாணய நிதியத்துடன், 600 கோடி டாலர் பிணை எடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதைத் தவிர, சிபிஇசி மற்றும் இதர பிஆர்ஐ திட்டங்களுக்காக, சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் பாகிஸ்தான் நிதி உதவி கோரியுள்ளது. சிபிஇசி மீதான வெல்ஸ் அவர்களின் கருத்துக்களை சீன மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இத்திட்டம் இருநாடுகளுக்கும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ள போதிலும், ஏற்கனவே பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ள நிலையில், இந்தத் திட்டம் பாகிஸ்தானுக்கு நீடித்துப் பலனளிக்கும் திட்டமாக இராது என்றால் அது மிகையல்ல.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.