நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்.

(பத்திரிக்கையாளர் வி.மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், மாநிலங்களவையின் 250 ஆவது அமர்வுக்கான கொண்டாட்டங்களுடன், கடந்த திங்களன்று துவங்கியது. இந்த மூன்றுவார குளிர்கால கூட்டத் தொடரின் முக்கிய அம்சமாக, மாநிலங்களவை, 250 ஆவது அமர்வில் அடியெடுத்து வைத்தது விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மாநிலங்களவையில் பேசுகையில், உறுப்பினர்கள், தேசிய கண்ணோட்டத்தையும், பிராந்திய நலன்களையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மக்கள் சார்ந்த விஷயங்கள் குறித்து, இடைஞ்சல்களைத் தவிர்த்து, பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். ஜனநாயகத்தில், கட்டுப்பாடுகளைக் கைக்கொள்வதற்கு, மேலவை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். அதுவே இறுக்குப்பிடியாக மாறாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை விளக்கும் சிறந்த மேடையாக மேலவை விளங்குகிறது என்று அவர் நினைவுபடுத்தினார்.

அரசியலமைப்பை உருவாக்கிய நம் முன்னோர்கள், நாடாளுமன்றத்திற்கு இரு அவைகளை தொலைநோக்குடன் அமைத்துள்ளனர் என்றும், அது இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுவாக்குகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அரசியலில் ஈடுபடாத பல துறை வல்லுனர்கள், தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்க, நாடாளுமன்ற மேலவை வாய்ப்பளிக்கிறது என்று அவர் கூறினார். மாநிலங்களின் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநிலங்களின் கவுன்சில், உறுப்பினர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார். நாடு முன்னேறுவதற்கு ஆதரவான வகையில் மாநிலங்களவை இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் சமூக, பொருளாதார மாற்றங்களில், மாநிலங்களவை பெரும்பங்கு வகித்துள்ளது என்று, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த ஆறுமாத காலத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு, 13,000 அயல்நாட்டவர் உள்ளிட்ட35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அவர்கள் தெரிவித்தார். மக்களவையில் கேள்விக்குப் பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர், சுற்றுலாத் துறையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கடந்த ஆறு மாதத்தில், 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகத் தெரிவித்தார்.

அரசியல் பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கல்லெறி சம்பவம் வெகுவாகக் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை, மாநிலத்தில், 190 வழக்குகள் கல்லெறி சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கிஷன் ரெட்டி அவர்கள் எழுத்து மூலமாகப் பதிலளித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுமையாக சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், 195 காவல் நிலைய கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தெரிவித்தார். பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, மாநில அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இணையதள வசதியை மீண்டும் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று, மாநிலங்களவையில் கூடுதல் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார். அரசியல் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என்று அவர் கூறினார்.

’ஒரு நாடு ஒரு மொழி’ என்ற திட்டம் எதுவுமில்லை என்று கூறிய மத்திய அரசு, இந்திய அரசியலமைப்பில் அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. கேளியொன்றுக்குப் பதிலளிக்கையில் கிஷன் ரெட்டி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

சீனாவின் ஒரு வளையம் ஒரு சாலை திட்டம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு, தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளதாக, வெளியுறவு இணையமைச்சர் வி.முரளீதரன் அவர்கள், கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார். சீனாவின் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம், பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர்ப் பகுதிகளை உள்ளடக்கியதால், இந்தியாவின் எல்லைக்கும், இறையாண்மைக்கும் நேரடியாக பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். இணைப்புக்கள் குறித்த விஷயங்கள், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் என்பதில் இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தலைநகர் தில்லி சார்ந்த பகுதியின் காற்று மாசுபாடு குறித்து, மக்களவையில் விவாதிக்கப்பட்டது. இது ஒரு தீவிரமான விஷயம் என்றும், அரசியலைத் தாண்டி, இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்களும் தெரிவித்தனர். மாசுக் கட்டுப்பாடு குரித்து பலதரப்பட்ட பரிந்துரைகளை உறுப்பினர்கள் அளித்தனர். பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பினரின் நிதியிலிருந்தும், 2 கோடி ரூபாய் காற்று சுத்திகரிப்பு கோபுரங்கள் நிறுவுவதற்கு அளிக்கப்பட வேண்டும் என்பன அவற்றுள் அடங்கும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.