இலங்கையில் கோத்தபய ராஜபக்ச ஏழாவது அதிபராகத் தேர்வு.

(ஐடிஎஸ்ஏ ஆய்வாளர் டாக்டர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

கடந்த சனியன்று, இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியைச் சார்ந்த கோத்தபய ராஜபக்ச அவர்கள், ஏழாவது அதிபராக, 52.25 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இலங்கையின் அனுராதாபுரா நகரில், அதிபர் பதவி ஏற்கப் போவதாக, கோத்தபய ராஜபக்ச அவர்கள் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோதி உள்பட, உலகத் தலைவர்கள் கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

கோத்தபய ராஜபக்ச அவர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபருடன் நெருக்கமாகப் பணிபுரிந்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தத் தாம் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தெரிவித்துள்ளார். ராஜபக்ச அவர்களின் திறமைமிக்க தலைமையின் கீழ், இலங்கை மக்கள், அமைதி மற்றும் செழிப்பான பாதையில் மேலும் முன்னேறுவர் எனத் தாம் நம்புவதாக, தமது நாட்டு மக்களின் தரப்பிலும், தமது தரப்பிலும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கையில், பிரதமர் மோதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருநாடுகளுக்கும் இடையே, கலாச்சார, வரலாற்று மற்றும் நாகரீகப் பிணைப்புக்கள் மேலும் வலுப்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை எட்டுவதற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட இந்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்துள்ளார். ராஜபக்ச அவர்களும், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணிபுரியத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு உதவுவதில், இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக, இந்தியா உருவெடுத்துள்ளது. இருப்பினும், மஹிந்த ராஜபக்ச அவர்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், இந்திய, இலங்கை உறவுகளில் இறுக்கம் காணப்பட்டது. எனினும், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டு அரசின் 2015-19 ஆட்சிக் காலத்தில், இருநாட்டு அரசுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிதல் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவும் இலங்கையும் பல புரிந்துணார்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அவற்றில் பலவற்றை, இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத் தடைகளாலும் எதிர்ப்பினாலும் செயல்படுத்த இயலவில்லை. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச அவர்களின் அணுகுமுறையைப் பொறுத்து அமையும்.

இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் இலங்கையில் கால தாமதம் அடைதல், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, செயலுத்தி ரீதியில் இலங்கையில் சீனா இருத்தல், இலங்கைவாழ் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு எட்டப்படாமை ஆகியவற்றை உள்ளடக்கிய கவலையளிக்கும் விஷயங்கள், இந்திய, இலங்கை உறவுகளைப் பாதித்துள்ளன.

கோத்தபய ராஜபக்ச அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் அவரது குடும்பத்தினர் முக்கியப் பங்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிர்வாகத்தில் இடம் பெறப்போகும் ராஜபக்ச சகோதரர்கள், முக்கிய விஷயங்களை எவ்வாறு கையாள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ராஜபக்ச குடும்பம், சீனாவுடன் நெருக்கமாக உள்ளது அறிந்ததே. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், பாதுகாப்புச் செயலராக, கோத்தபய ராஜபக்ச பதவியில் இருந்த போது, இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இலங்கை புறக்கணித்தது கண்கூடு. எனினும், தங்கள் தவற்றை உணர்ந்த ராஜபக்ச சகோதரர்கள், மீண்டும் பதவிக்கு வந்தால் தங்கள் தவற்றைத் திருத்திக் கொள்வதாக உறுதியளித்தனர்.

2005 – 2009 காலகட்டத்தில், பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்ச அவர்கள், இலங்கை விடுதலைப் புலிகளை முறியடிப்பதில் பெரும்பங்கு வகித்தார். இருப்பினும், மனித உரிமைகளை மீறியதாகவும், சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், இலங்கை சிறுபான்மையினர், பெருவாரியாக, ராஜபக்சவுக்கு எதிராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். எனினும், அனைத்து இலங்கை மக்களுக்கும் தாம் அதிபராக இருக்கப் போவதாக கோத்தபய ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப்பின், அவர் ஆற்றிய முதல் உரையில், ஈஸ்டர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இறுக்கத்தை அடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் தாம் கவனம் செலுத்தப் போவதாக, கோத்தபய ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். அதிபர் பதவிக்கு வந்த பின்னர், கோத்தபய ராஜபக்ச அவர்கள் இலங்கைத் தமிழர்களின்பால், எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்வார் என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்கும். இந்திய, இலங்கை உறவுகளில் கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்றாக இலங்கைத் தமிழர் விவகாரம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபய ராஜபக்ச அவர்களின் ஆட்சியில், பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையே உறவுகள் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும், இருநாடுகளுக்கும் இடையே, பரஸ்பரம் புரிதலும் ஒத்துழைப்பும் அவசியம். உள்நாட்டு விவகாரங்கள் இருநாட்டு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. எனவே, சிறுபான்மையினர், மனித உரிமை, சமரசம் போன்ற விஷயங்களில் கோத்தபய ராஜபக்ச அவர்களின் அணுகுமுறை, இந்திய, இலங்கை உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல், பொருளாதார, பாதுகாப்பு உதவிக்காக எந்த ஒரு நாட்டையும் சாராமல், நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை இலங்கை பின்பற்றுவதைப் பொறுத்து, இந்திய, இலங்கை உறவுகளின் எதிர்காலம் அமையும் என்றால் அது மிகையல்ல.

*******************************

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.