நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்கொள்ளவிருக்கும் விவகாரங்கள்.

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. ராமமூர்த்தி)

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர், வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதியிலிருந்து, டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் பல்வேறு சட்ட முன்வரைவுகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. தவிர, இரண்டு முக்கிய அவசர சட்டங்கள் சட்டங்களாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தேசிய நலன் குறித்த கொள்கை ஊக்குவிப்பு, செயல்திறன், மற்றும் அரசியல் ஒத்திசைவு ஆகிய மூன்று முக்கிய காரணங்களால் இக்கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. காரசாரமான விவாதங்கள் எதிர்பார்க்க்கப்படுகின்றன. பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியைக் கேள்வி கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 21 ஆம் தேதி துவங்கி, ஜனவரி முதல் வாரத்தில் முடிவுற்றது.

இவ்வாண்டில் நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில், மைல் கல்லாக விளங்கிய மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை முத்தலாக் சட்டம், மோட்டார் வாகனங்கள் சட்டம் மற்றும் தேசிய புலனாய்வுத் துறை திருத்தச் சட்டம் ஆகியவையாகும். ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு சட்டமும், அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கமும் நிறைவேற்றப்பட்டது, மழைக்காலக் கூட்டத்தொடரின் முக்கிய, தனித்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. ஆளும் கட்சி தனது முதல் பதவிக்காலத்தில், ஜனவரி மாதம் 8 ஆம் தேதியன்று முன்மொழிந்த குடியுரிமை திருத்த மசோதா, கடந்த ஆகஸ்டு மாதம், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் இத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளது.

இது தவிர, இரண்டு அவசர சட்டங்கள், இக்குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன. அவை, புதிய, உள்நாட்டு உறபத்தித் துறை நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு மற்றும் ஈ சிகரெட் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைத் தடை ஆகியவற்றுக்கான அவசர சட்டங்களாகும்.

எதிர்க்கட்சித் தலைவர்கள், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் ஜம்மு – காஷ்மீர் நிலவரம் ஆகிய விவகாரங்களை முன்வைக்கப் போவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி விவகாரமும் இக்கூட்டத் தொடரில் எழுப்பப்படும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், கடந்த ஞாயிறன்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். மாநிலங்கள் அவையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஆளும் கட்சியின் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.

நாட்டிற்கு வெளியேயும் திவால் சட்டம் பாயும் வகையில், இக்கூட்டத்தொடரில், திவால் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இந்திய நிறுவனங்களுக்கு அயல்நாடுகளிலிருந்து பெற வேண்டிய தொகையை வசூல் செய்யவும், அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய தொகையை வசூல் செய்யவும் வழி செய்யப்படும்.

வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களுக்கும் தீர்வுகள் எட்டப்படும் வகையில், திவால் சட்டத்தின் 227 ஆவது பிரிவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள கடன் திவால் சட்டம், இதற்கான தெளிவான சட்டக் குறிப்புக்களை உள்ளடக்காததால், சிக்கல் மிகுந்த வழக்குகளைத் தீர்க்க இது அவசியமாகிறது. நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்வதை விடுத்து, அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஆளும் கட்சியுடன் ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பது எதிர்க்கட்சிகளின் கடமை. ஒரு காலத்தில் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் சிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய நாடாளுமன்றம், புதிய இந்தியாவில் மீண்டும் அத்தகைய பேச்சாளர்களை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.