பிரேசிலியாவில் பதினொன்றாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு.


(சமூக அறிவியல் நிறுவன இயக்குநர், டாக்டர் ஆஷ் நாராயன் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

பிரேசிலியாவில் 11 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது, இக்குழுவின் துடிப்புமிக்க செயல்பாட்டிற்கும், வளர்ந்து வரும் அதன் முக்கியத்துவத்துக்கும் அடையாளமாக விளங்குகிறது. பிரிக்ஸ் நாடுகள் கடந்த தசாப்தத்தில், உலகளாவிய

வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக விளங்கின என்று, இந்த உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் உருவாக்கம், வளர்ந்து வரும் புதிய உலகளாவிய பொருளாதார ஒழுங்கு முறையின் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் உலகளாவிய ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்பதோடு மட்டுமல்லாமல், பிரிக்ஸ் அமைப்பு, ஒரு புதிய சிந்தனையையும், புதிய உலகப் பார்வையையும் வடிவமைக்க முயற்சித்து வருகிறது. "ஒரு புதுமைப் படைப்பான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி" என்பது, 11 ஆவது

பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் கருப்பொருளாக விளங்கியது. புதுமை என்பது, எதிர்காலத்தின் உரைகல். புதுமைப் படைப்புக்கள் அனைத்தும் சிறந்த சிந்தனைகளின் விளைவேயாகும். நாம் புத்தாக்கங்களைப் படைப்பவர்களாக இல்லாவிட்டால், காணாமல் போய்விடுவோம் என்பது நிதர்சனமான உண்மை.

ஏற்கனவே எதிர்பார்த்தபடி, ஐ.நா, உலக வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்நிலை அமைப்புகளை வலுப்படுத்துவதும், சீர்திருத்தவதும் அவசரத் தேவை என்று பிரிக்ஸ் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. பல்நிலைத்தன்மையனது, பல்வேறு சர்வதேச அமைப்புகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், பிரிக்ஸின் பல்நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. ‘பிரெட்டன் வுட்ஸ்’ தத்துவத்தின் கீழ், பல்நிலைத்தன்மை, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பது கண்கூடு. உண்மையில், மிகப் பெரிய முரண்பாடு என்னவென்றால், இன்று பல்நிலைத்தன்மையைத் தாக்குபவர்கள்தான், இந்த அமைப்புகளை முன்பு உருவாக்கியவர்கள் என்பதே. சந்தையின் வளர்ச்சிக்காக, தெற்கத்திய நாடுகள், உலகமயமாக்கலை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில்தான் கோரப்பட்டது. ஆனால், தற்போது, அதே நாடுகள், உலகமயமாக்கலைக் கைவிடுமாறு தெற்கத்திய நாடுகளை அறிவுறுத்துகின்றன.

பிரிக்ஸ் நாடுகள் முன்னெடுத்துள்ள புதிய பல்நிலைத்தன்மையை பகிரப்பட்ட, செழுமை என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அமைதியையும், பாதுகாப்பையும் பேணவும், நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும், மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யவும் பல்நிலைத்தன்மை அத்தியாவசியம் என்பதால், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டறிக்கையில் பல்நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக,, பயங்கரவாதத்தின் கொடுமைகளுக்கு எதிராக,

உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா கடுமையாகப் பாடுபட்டு வருகிறது. இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற பிரிக்ஸ் நாடுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, உறுப்பு நாடுகள் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட, அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதத்துக்கு பிரேசிலியா உச்சிமாநாடு கண்டனம் தெரிவித்தது வரவேற்கத்தக்கது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, அதன் முழுமையான அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து, தமது கண்டனங்களை ஐயப்பாட்டுக்கு இடமின்றி தெளிவுபடப் பதிவு செய்தார். வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம் என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தால் உலகப் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலர் இழப்பை சந்தித்திருப்பதாகவும், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக வர்த்தகத்தில் 15 சதம் மட்டுமே பங்கு கொண்டுள்ள பிரிக்ஸ் நாடுகள், தங்களுக்கிடையிலான வர்த்தகத்தைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக மேம்பாட்டைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதை கூட்டறிக்கை வரவேற்றது. அபாயகரமான பருவநிலை மாற்றங்களை உலகம் சந்தித்து வரும் வேளையில், 2030 ஆம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்ட, தாம் மேற்கொண்ட உறுதிப்பாட்டை பிரிக்ஸ்நாடுகள், மீண்டும் வலியுறுத்தியுள்ளன. பருவநிலை மாற்றம்

தொடர்பான ஐ.நா. வின் கொள்கைகளின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரிஸ்

ஒப்பந்தத்தை செயல்படுத்த பிரிக்ஸ் ஆதரவளிக்கிறது.

பிரேசில், ரஷ்ய மற்றும் சீன அதிபர்களுடனான இந்தியப் பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள், ஆக்கப்பூர்வமாக அமைந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா விடுத்த அழைப்பை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்றுக்கொண்டார். லத்தீன் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த இது பெரிதும் உதவும்.

புதிய வளர்ச்சி வங்கிக்கு, பிரிக்ஸ் நாடுகள் ஒரு புதிய உந்துதலை வழங்கியுள்ளன. இதனால் சர்வதேச அரங்கில், பிரிக்ஸ் நாடுகளின் கை ஓங்கியுள்ளது. தனது உறுப்பினர்களை விரிவுபடுத்துவதில் புதிய வளர்ச்சி வங்கி பெற்றுள்ள முன்னேற்றம் குறித்தும், உறுப்பு நாடுகளில் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவது குறித்தும் பிரேசிலியா உச்சி மாநாடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதுமைப் படைப்புக்களுக்கான பிரிக்ஸ் வலையம், புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆகியவற்றை பிரிக்ஸ் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பிரிக்ஸ் அமைப்பின் நிலைத்தன்மையும், முக்கியத்துவமும் பறைசாற்றப்படும்.

எந்தவொரு துடிப்பான அமைப்புக்கும் மாறுபட்ட சிந்தனை மட்டுமின்றி, தொடர்ந்த அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. பிரிக்ஸ், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்காகப் பணியாற்றுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அது, பொருளாதாரத்திற்கு அடிபணிந்த சமூகமாக இல்லாமல், சமூகத்திற்கு ஏற்ற பொருளாதாரமாக இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.