பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்.

(மூத்த பத்திரிக்கையாளர் கே.வி. வெங்கடசுப்ரமனியன்,ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் - சத்யா அசோகன்.)

முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015-லிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவானது, உலகிற்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குமே மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும். கடந்த திங்கட்கிழமையன்று ஐ.நா சபைக்கு டிரம்ப் நிர்வாகம் முறையாக அறிவிப்பு அனுப்பியுள்ளதன் மூலம், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான செயல்முறை துவங்கியுள்ளது. முறையான அறிவிப்பு அனுப்பி, ஒரு வருடம் முடிந்த பின் விலகலானது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.

டிசம்பர் மாதம் 2 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், ஐ.நா பருவ நிலை சி.ஓ.பி 25 பேச்சுவார்த்தைகள் நிகழ உள்ளன. இப்பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது, சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நிலவி வரும் உள் நாட்டு அமைதியின்மை பிரச்னையால், அங்கு பேச்சு வார்த்தைகளை நடத்த முடியாது என, சிலி பின் வாங்கி விட்டது.

2015 ஆம் ஆண்டு, ஏறத்தாழ 200 நாடுகள் இந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பசுமைகுடில் வாயு உமிழ்வுகளை குறைப்பதன் மூலம், உலக வெப்பநிலை அபாயகரமான அளவுக்கு உயர்வதைத் தடுப்பது பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கமாகும். உலகின் சராசரி வெப்ப நிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்குக் கீழே வைத்திருக்க வேண்டும் என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்காகும். உலகின் இந்தக் குறிக்கோளுக்கு மிகப் பெரும் பங்கம் விளைவிக்கும் விதமாக, அமெரிக்காவின் விலகல் முடிவு அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளி வர முடிவெடுத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. பசுமைகுடில் வாயு உமிழ்வுகளில், உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத் தக்கது.. 2025 ஆம் ஆண்டிற்குள் தங்கள் நாட்டின் பசுமைகுடில் வாயு உமிழ்வை 26 முதல் 28 சதவிகிதம் குறைத்து விடுவதாக அமெரிக்கா உறுதியளித்திருந்தது. இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதால், பாரிஸ் ஒப்பந்தம், உலகின் 80 சதவிகித பசுமைகுடில் வாயு உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே கணக்கில் கொள்ள முடியும். அமெரிக்காவின் விலகல் முடிவுக்கு முன்னதாக, இது 97 சதவிகிதமாக இருந்தது.

அமெரிக்காவின் விலகல் ஏற்படுத்தக் கூடிய மிகப்பெரும் தாக்கத்தால், பருவநிலை மாற்றத்தை சீர்படுத்துவதற்காக செலவிடப்படும் நிதி அளவு பெருமளவில் குறையக்கூடும். இதற்கான நிதி ஆதாரங்களை உலக அளவில் திரட்டுவதில் அமெரிக்கா மிக முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருந்தது. பருவநிலை மாற்ற சீரமைப்புக்காக, வளரும் நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதற்கென உருவாக்கப்பட்ட பிரதான நிதியமான, பசுமை பருவ நிலை நிதியத்திற்கு அளித்து வந்த நிதிப் பங்களிப்புகள் அனைத்தையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி விட்டது.

இதன் விளைவாக, இப்போது உலகின் கவனம் இந்தியா, சீனா மற்றும் ஏனைய, அதிக பசுமைகுடில் வாயு உமிழ்வுகள் ஏற்படுத்தும் நாடுகளின் பக்கம் திரும்பக் கூடும். இந்த நாடுகள், பசுமைகுடில் வாயு உமிழ்வுகளைக் குறைப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். இந்த நாடுகள், பசுமைகுடில் வாயு உமிழ்வுகளைக் கட்டுபடுத்துவதற்கு உள் நாட்டளவில் நடவடிக்கைகள் எடுப்பதோடு மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கு, பசுமைகுடில் வாயு உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தத் தேவையான நிதி மற்றும் தொழில் நுட்பங்களில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை சமன்படுத்தவும் வேண்டியிருக்கும்.

இந்தியா, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தனக்களிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றுவதில் வலுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. சிஓபி 21(COP 21) எனப்படும் மாநாட்டில், தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 2030 ஆம் ஆண்டிற்குள்ளான இலக்குகளை, அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள்ளேயே, பெருவாரியாக எட்டிவிடுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. பாரிஸில் நிகழ்ந்த சி.ஓ.பி 21-ல் இந்தியா நான்கு உறுதிமொழிகளை அளித்தது.

தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட முக்கியப் பங்களிப்புகளில் இரண்டை எட்டுவதற்கான சரியான பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது.. அவற்றுள் ஒன்று, படிம எரி பொருட்கள் அல்லாத மாற்று எரி பொருட்கள் மூலமாக உருவாக்கப்படும் எரியாற்றலின் அளவை 40 சதவிகிதமாக்குதல். மற்றொன்று, 2030 ஆம் ஆண்டுக்குள், 2005 ஆம் ஆண்டில் உமிழப்பட்ட பசுமைக்குடில் வாயு அளவில் 33 முதல் 35 சதவிகிதம் வரை குறைத்தல் ஆகும். விரைவிலேயே, இந்த இலக்குகளை இந்தியா எட்டிவிடக்கூடும், 2030 க்குள், இலக்குகளைத் தாண்டி சாதனையும் படைக்ககூடும். சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் உற்பத்தியை மேற்கொள்ள, இந்தியா முனைப்புடன், விரைந்து செயல்பட்டு வருகிறது. சூரிய சக்தித் துறையானது, வெளி நாட்டு முதலீடுகளை மிகப் பெருமளவில் ஈர்க்ககூடிய வலுவுள்ள துறையாகும். இந்தியாவிலேயே உருவாக்குவோம் எனும் மேக் இன் இந்தியா முன்னெடுப்பிற்கு இது ஊக்கமளிக்கக் கூடும். 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் உமிழ்வுகளை நோக்கிய பயணப்பாதையில் சென்று கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது நேரடியாக இந்தியாவைப் பாதிக்காது என்றாலும், வருங்கால பருவநிலை மாற்றத்துக்கான கொள்கைகளை வகுப்பதை இது பாதிக்ககூடும். பருவ நிலை மாற்றத்தால் மிக எளிதாக பாதிக்கப்படும் நாடாக இருக்கும் இந்தியா, இது குறித்த கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களில் தாக்கங்களை இது ஏற்படுத்தகூடும்.

புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறையில் இந்தியா உலகுக்குத் தலைமை ஏற்று வழி நடத்துகிறது. படிம எரி பொருட்களை விட, புதுப்பிக்கதக்க எரியாற்றல் துறையில் இந்தியா அதிகமாக முதலீடு செய்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஏனைய பசுமைகுடில் வாயு உமிழ்வுகளின் அளவை குறைக்க வழி செய்யும் நீண்ட காலத் திட்டத்திற்கான செயலுத்திகளை விரைவில் முடிவு செய்ய உள்ளதாக இந்தியா கூறியுள்ளது. பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நிலையான வன மேலாண்மை மூலம் குறைக்க வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்துள்ளது. தேசிய வன கொள்கை 2018க்கான வரைவு, இந்தியாவின் மொத்த நிலப் பரப்பில், குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பகுதியை அறிவியல் முன்னெடுப்புகள் மற்றும் கடுமையான விதிகளை பின்பற்றுதல் மூலமாக, வனப் பகுதிகளாக ஆக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளது.

பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு, ஃப்ரான்ஸ் நாட்டுடனான சர்வதேச சூரிய கூட்டணி போன்ற சர்வதேச முயற்சிகளை இந்தியா மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டும். தனது இலட்சிய இலக்குகளை எட்டுவதற்கு இந்தியா இன்னமும் நீண்ட நெடிய பாதையில் செல்ல வேண்டியிருக்கும் என்ற போதிலும், தூய்மையான எரியாற்றல் எதிர்காலத்தை நோக்கி, இந்தியா சீராக முன்னேறி கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.