இந்தியா-சீனா இடையில் உயர்மட்ட பொருளாதார மற்றும் வணிக பேச்சுவார்த்தைக்கான செயல்முறையின் உருவாக்கம்
டாக்டர். ராஜ்தீப் பகனதி, சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர்
தமிழில், ஸ்ரீப்ரியா சம்பத்குமார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டில், உயர் அளவிலான பொருளாதார மற்றும் வர்த்தக் பேச்சுவார்த்தைக்கான செயல்முறையை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முடிவு எடுக்கப்பட்டது. எல்லைப் பிரச்சனைகளை சரி செய்ய, சிறப்புப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான இந்தியா மற்றும் சீனாவின் முடிவை, தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவும் ஒத்து இருக்கிறது. இந்த செயல்முறைக்கு இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனும் சீன துணை பிரிமியர் ஹு சுன் ஹுவா-வும் இணைந்து தலைமை வகிப்பார்கள்.
உயர் தலைமை மட்டத்தில் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது, சமீபத்தில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டின் குறிக்கோளாகும். அதிக முனைப்பையும் அவசர நிலையையும் அடைந்திருக்கும் வணிக மற்றும் பொருளாதார விவகாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இரு தரப்பும் முடிவெடுத்துள்ளதை, இந்த செயல்முறையின் உருவாக்கம் விளக்குகிறது. வணிக பற்றாக்குறையின் அளவு, 5000 கோடி டாலர் என்ற அளவில், பீஜிங்கிற்கு சாதகமான நிலையில் உள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த செயல்முறைப் பற்றி அதிக விவரங்கள் இன்னும் வெளி வராவிட்டாலும், ‘தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த இந்திய தொழில்துறைக்கு வாய்ப்பு கிடைக்குமா?’ என்ற கேள்வி கண்டிப்பாக எழுகிறது.
உலக வர்த்தக மையம் போன்ற பலதரப்பு அமைப்புகள், இப்படிப்பட்ட விஷயங்களுக்கான தீர்வை காண முடியாமல் இருப்பதும், இந்த இருதரப்பு செயல்முறை உருவாக ஒரு காரணமாக இருக்கலாம். உலக வர்த்தக மையத்தில் இருக்கும் தகராறு தீர்வுக் குழுவில் இப்போது மூன்று நீதிபதிகள் தான் இருக்கின்றனர். இது குறைந்தபட்ச அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் இரு நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த அமைப்பு மேலும் முடமாக்கப்படும்.
இந்தியா-சீனா வணிகப் பிரச்சனைகள் குறித்து, வெளியுறவுத் துறை அமைசகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள அறிக்கையில், 5600 கோடி டாலரை விட அதிகமான அளவில், வணிகப் பற்றாக்குறை, முற்றிலும் இந்தியவிற்கு எதிராக உள்ளது என்றும், இந்திய சரக்குகளும் சேவைகளும் சீனாவிலிருந்து கட்டணமற்ற தடையையும் எதிர்கொள்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சீனா தரப்பிலிருந்து, சரக்கு திணிப்பும், உண்மையான முதலீட்டு சுயவிவரம் இல்லாததும், இந்த வர்த்தக உறவுகளை இன்னும் சிக்கலாக்குகின்றன. பாதுகாப்புக் கட்டாயங்களும் வர்த்தக உறவுகளுக்கு ஒரு புதிய கோணத்தை அளிக்கின்றன. இந்தியாவில் ஹுவாய் நிறுவனம் கொண்டுவந்துள்ள 5ஜி சேவைகளால் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை அவசியமாகிறது. புது தில்லியில், சீன ஆய்வுகளுக்கான நிறுவனம் நடத்திய சீன டிஜிட்டல் சில்க் வழி என்ற மாநாட்டில் ஆராயப்பட தரவுகளின் படி, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில், ஹுவாய் மற்றும் ஸெட்.டி.ஈ-கு 42 சதவிகித சந்தைப் பங்கும், ஸ்மார்ட் ஃபேங்களுக்கான வர்த்தகத்தில், சீன பிராண்டுகளின் பங்கு 66 சதவிகிதமும் உள்ளன. இதைத் தவிர, சீனாவின் வென்சர் கேபிடலிஸ்டுகளின் முதலீடு 1000 கோடி டாலருக்கும் அதிகமாக உள்ளது.
புதிய செயல்முறையின் அம்சங்களும் குறிக்கோள்களும் விவரிக்கப்பட்ட பின்னர், இதன் அம்சங்கள், தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும், ஆர்.சி.ஈ.பி எனப்படும் விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்புடன் எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இங்கும், இந்திய சந்தைகளில் சீன பொருட்களின் மிகுதி, தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லா முதலீடு மற்றும் ஈ-வர்த்தக சேவைகளுக்கு தரவுகளின் உள்ளூராக்கலின் தேவை ஆகியவை குறித்து இந்தியா சங்கடத்தில் உள்ளது. இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறையில், ஏற்கனவே சீனாவிற்கு ஒரு ஆதிக்க நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜபானுடனான இது போன்ற சமீபத்திய அனுபமன் அத்தனை லாபகரமானதாக இல்லாததால், இந்த செயல்முறையினுடைய அமைப்பின் இயல்பைப் பற்றி கேள்விகள் எழும்புகின்றன. 2014 ஆம் ஆண்டு, இந்திய அரசின் தொழில்துறை கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை, ஜப்பானிலிருந்து வரும் முதலீட்டு கோரிக்கைகளை அவசர கதியில் ஆராய்ந்து, செயல்படுத்தி, அதன் மூலம், மேன்மையான பலன்களைப் பெற, ‘ஜப்பான் பிளஸ்’ என்ற ஒரு சிறப்பு மேலாண்மைக் குழுவை உருவாக்கியது. அப்போதிலிருந்தே இதன் வளர்ச்சியின் வேகம் குறைவாகவே இருந்துள்ளது. திட்டமிடப்பட்ட சென்னை-பெங்களூரு தொழில்துறை வழிப்பாதை இன்னும் முன்னேற்றக் கட்டத்திலேயே உள்ளது. இந்தியாவின் 9 மாநிலங்களில் நடக்கும் 12 ஜப்பான் தொழில்துறை டௌன்ஷிப் பணித்திட்டங்களிலும் இதே மந்த வளர்ச்சியே காணப்படுகின்றது. இண்டோ-ஜப்பான் பரிசோதனையில் எதிர்கொள்ளப்பட்ட குறைபாடுகளைத் தவிர்த்து, சீராக செயல்படும் வகையில் சீனாவுடனான புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை ஒத்து உள்ள விஷயங்களுக்கான தீர்வை இந்த புதிய செயல்முறையும் காண வேண்டும். சீனாவுக்கு நிகராக அமெரிக்கா ஒரு வலுவான நிலையில் உள்ளது. ஆகையால் அதனால் நஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்ள முடிகிறது. இந்தியாவும் சீனாவுக்கு எதிரான தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த செயல்முறையில், சேவை மற்றும் மருந்துத் துறைகளைச் சார்ந்த இந்திய நிறுவனங்கள் சேர்ர்க்கப்பட்டுள்ளது, பீஜிங்குடன் சாதகமான நியமங்களை வைத்துக்கொள்ள இந்தியாவுக்கு உதவும். இந்தியாவின் உண்மையான வர்த்தகக் கவலைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் இந்தியாவிற்கு சாதகமான நிலையைத் தரும். சீனா கூறியுள்ளது போல, இந்த பொருளாதார மற்றும் வணிக பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் சாதகமான விளைவுகளைக் கொண்டு வரலாம். இந்த செயல்முறை, தற்போது இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறதா அல்லது, பொருளாதார இணைப்புகளை வைத்துக்கொள்ள புதிய துறைகளை நாடுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment