துருக்கியின் அமைதிப் புரட்சி போலியானது.
(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
கடந்த புதனன்று, துருக்கியின் பாதுகாப்புப் படை, மூன்று நோக்கங்களுடன் அமைதிப் புரட்சியைத் துவக்கியது. சிரியாவுடனான துருக்கியின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு, அப்பகுதியில் இயங்கும் பயங்கரவாதிகளை ஒழிப்பது, அப்பகுதியில் வசிக்கும் சிரிய மக்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்வதே அதன் மூன்று நோக்கங்களாகும்.
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தன்னிச்சையாக துருக்கி ராணுவம் தாக்குதலை நடத்துவதற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்து, அதிகாரபூர்வ அறிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. துருக்கியின் இந்த நடவடிக்கையால், அப்பகுதியின் ஸ்திரத்தன்மையும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்று இந்தியா கருதுகிறது. இதனால், மனிதநேய அத்துமீறல்களும், பொதுமக்களின் துன்பங்களும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இவ்விஷயத்தில் கட்டுப்பாடுடன் செயல்படுமாறு துருக்கியைக் கேட்டுக் கொண்ட இந்தியா, சிரியாவின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் துருக்கி மதிப்பளித்தல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், ஐ.நா. பொதுச்சபையில் பேசுகையில், துருக்கி அதிபர் எர்டோகன் அவர்கள், சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் சூழல் குறித்து விவரிக்க, தனது நீண்ட உரையின் பெரும் பகுதியை, எடுத்துக் கொண்டார். அப்பகுதியில் பாதுகாப்பான உறைவிடத்தை உருவாக்கி, அங்கு துருக்கியில் இருக்கும் 20 லட்சம் சிரிய அகதிகளைக் குடியமர்த்த அவர் பரிந்துரைத்தார். இவ்வாறு அகதிகளின் பாதுகாப்புக்காகத் தங்குமிடம் உருவாக்கப்பட்டாலும், சிரியாவின் இறையாண்மை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அவர் வலியுறுத்தினார்.
எனினும், சிரிய எல்லைக்குள் துருக்கி ராணுவம் மேற்கொண்ட இந்தத் தன்னிச்சையான தாக்குதல், சிரியாவின் இறையாண்மைக்கு அத்துமீறிய செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளை நிறுவிய உறுப்புநாடுகளுள் ஒன்றாக சிரியா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கி ராணுவத்தின் இந்த தன்னிச்சையான தாக்குதல், துருக்கி அதிபர், ஐ.நா.வில், சமநிலை மற்றும் பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்து ஆற்றிய உரைக்கு முரண்பட்ட செயலாக விளங்குகிறது.
ஐ.நா.வின் இறையாண்மையுள்ள உறுப்பு நாட்டில் துருக்கி தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. 1974 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், துருக்கி ராணுவம் சைப்ரஸ் நாட்டின்மீது படையெடுத்தது. அதே ஆண்டு, நவம்பர் மாதம், ஐ.நா. பொதுச்சபையின் 3212 ஆம் எண்ணிட்ட தீர்மானத்தின் மூலம், உறுப்பு நாடுகள் சைப்ரஸ் நாட்டின் இறையாண்மைக்கு ஒட்டுமொத்த ஆதரவு அளித்ததோடு, அயல்நாட்டுப் படைகள் சைப்ரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தின. 1974 ஆம் ஆண்டு, டிசம்பர் 13 ஆம் நாள், ஐ.நா. பொதுச்சபையின் இந்தத் தீர்மானத்தை அங்கீகரித்து, ஐ.நா. பாதுகாப்புக் குழு, 365 ஆம் எண்ணிட்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் 365 ஆம் தீர்மானத்தின்படி, துருக்கிப்படைகள் இன்றுவரை சைப்ரஸை விட்டு வெளியேறவில்லை.
அரசுசாரா பயங்கரவாதிகளுக்கு எதிராக, துருக்கி ராணுவத்தின் தன்னிச்சையான தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் கொழுந்து விட்டு எரியும் சிரியா பிரச்சனையில், குளிர்காயும் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புக்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
Comments
Post a Comment