கூட்டுறவில் புதிய செயலுத்திகளைத் தேடும் இந்தியாவும் ஈரானும்.
(ரஷ்யா மற்றும் மேற்கு ஆசியாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மீனா சிங் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா பாலாஜி.)
ஈரானில் தற்போது செயலுத்தி ரீதியாக, சீர்குலைவில் சிக்கியுள்ள, கவலைக்குரிய, பிராந்திய சூழலின் பின்னணியில், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதினாறாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் இந்த வாரம் தெஹ்ரானில் நடந்தது. இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே அவர்கள் இந்திய தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கினார், ஈரான் தரப்பில் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டாக்டர் சையத் அப்பாஸ் அராச்சி அவர்கள் தலைமை தாங்கினார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜவாத் ஸரீஃப் மற்றும் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் மூத்த ஆலோசகர் டாக்டர் அலி அக்பர் வெலாயத்தி ஆகியோருடன் விஜய் கோகலே அவர்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
இரு தரப்பினரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் மறு ஆய்வு செய்தன. இதில் தற்போதைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், ஷாஹித் பெஸ்தி துறைமுகம், சபாஹர் துறைமுகம், இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான முத்தரப்பு போக்குவரத்து ஒப்பந்தத்தின் முழு செயல்பாடுகள் ஆகியவையும் அடங்கும். மேலும், பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். வெளியுறவு அமைச்சர் மட்டத்திலான அடுத்த சுற்று கூட்டு ஆணையக் கூட்டம் ஈரானில் கூடிய விரைவில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது
ஈரானிடம் எண்ணெய் வாங்குவதற்கான பொருளாதாரத் தடைக்கு அமெரிக்கா அளித்திருந்த ஆறு மாத கெடு நீட்டிக்கப்படாததால், இந்தியா மே மாதம் முதல் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ள நிலையில் இந்த வெளியுறவு அலுவலக ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. துருக்கி, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை ஈரானுடனான எரிசக்தி உறவுகளைத் தொடர்ந்தபோது, இந்தியா எதிர்மறையாக முடிவெடுத்ததை இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி குறிப்பிட்டார். ஈரானில் இருந்து இந்தியா தற்காலிகமாக எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தாலும், தெஹ்ரானுடனான தனது மற்ற ஈடுபாடுகளை இந்தியா தொடர்ந்தது. உண்மையில் ஈரானுடனான இந்தியாவின் செயலுத்தி உறவுகள் எண்ணெய் வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டவை.
ஆப்கானிஸ்தான் தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து ஈடுபாடு மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. ஈரானுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளையும் இந்தியா ஆராய்ந்து வருகிறது. சமீபத்திய இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டின் போது, இந்தியாவும், ரஷ்யாவும் ஈரானுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை "பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நியாயமானவை" என்று கூறி, அவற்றைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளன. மார்ச் 2019 இல் நடைபெற்ற சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம் (ஐஎன்எஸ்டிசி) ஒருங்கிணைப்புக் குழுவின் 7 வது கூட்டத்தின் போது ஒத்துழைப்பை முன்னெடுப்பதில் இந்தியா தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
மே மாதம் முதல் தொடர்ந்து வளர்ந்து வரும் ஈரான் – அமெரிக்கா இடையேயான பதட்ட நிலைமை, இந்திய - ஈரான் உறவுகளுக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. ஈரானுடனான எரிசக்தி உறவுகளை மீட்டெடுக்கக்கூடிய வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. 2006 வரை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்த ஈரான், 2013-14 ஆம் ஆண்டின் இறுதியில் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், மே மாதத்தில் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தும் வரை சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்தது, நிலையான எரிசக்தி வழங்கும் நாடாக, ஈரானின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்க முடியாது
இந்தியாவுக்கான யூரேசியாவின் நுழைவாயிலாக, ஈரான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஈரானின் பிராந்திய முக்கியத்துவம், மேற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் வளர்ந்து வரும் பங்கு இவற்றை மனதில் கொண்டு, ஈரானுடனான தன் ஈடுபாட்டை மேம்படுத்துதல், இந்தியாவிற்கு அவசியமானதும் அவசரமானதுமாகும் இந்தியாவுக்கு அதன் இணைப்புத் திட்டங்களான ஐ.என்.எஸ்.டி.சி, சபாஹர் துறைமுகம், ஆப்கானிஸ்தானில் ஆதரவும் ஈடுபாடும், சீனா, ரஷ்யா, மத்திய ஆசிய குடியரசுகள் மற்றும் பிற பிராந்திய நாடுகளுடன் சீரான உறவைப் பேணுவதற்கான ஈரானின் ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் தேவை. புவி அரசியல் ரீதியாக, ஈரான்-சீனா-ரஷ்யா, ஈரான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-சீனா மற்றும் ரஷ்யா போன்ற பிராந்திய கூட்டமைப்புக்களின் மறுசீரமைப்புக்கு ஈரானுடன் இந்தியா தொடர்ந்து ஈடுபட வேண்டியது அவசியமாகிறது.
மே 2016 இல் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், தனது ஈரான் பயணத்தின் போது ஒத்துழைப்பின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகம், பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் இந்திய- ஈரான் உறவுகளின் அரசியல் செயலுத்திப் பரிமாணத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், முழுமையான விரிவான பொருளாதார ஒத்துழைப்பை உருவாக்க இரு நாடுகளின் தலைமையும் அப்போது ஒப்புக் கொண்டன. 2018 பிப்ரவரியில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் மூன்று நாள் இந்தியப் பயணமும்,இவ்வாண்டு ஜனவரியில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் அவர்களின் இந்தியப் பயணமும் இதற்கு மேலும் உத்வேகம் அளித்தது என்றால் அது மிகையல்ல..
வெளியுறவு செயலாளரின் ஆலோசனைகளில் பிரதிபலிக்கும் தற்போதைய இராஜதந்திர செயற்பாடுகள், திட்டமிட்ட இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரின் தெஹ்ரான் பயணம் ஆகியவை, ஈரானைத் தனிமைப்படுத்த அமெரிக்கா அளித்து வரும் அழுத்தத்தையும் மீறி, இந்திய – ஈரான் ஒத்துழைப்பை மேம்படுத்த மோதி அவர்களின் அரசுக்கு உள்ள விருப்பத்தைப் பறைசாற்றுகின்றன. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, மோதல் போக்கை நீக்கிவிட்டு, பிராந்திய அளவிலான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வது, இந்த இருநாடுகளுக்கு மட்டுமின்றி, பிராந்திய, உலக சமுதாயத்திற்கே நற்பயன் அளிக்கும் என்றால் அது மிகையல்ல.
Comments
Post a Comment