நிலவளம் குன்றுவதைத் தடுக்க உலக நாடுகள் உறுதிமொழி.

(மூத்த பத்திரிக்கையாளர் கே.வி. வெங்கடசுப்ரமனியன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.)

நிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வளமாகும். மனித வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான குடிநீர் , உணவு, மற்றும் இதர பல சுற்றுச்சூழல் சேவைகளையும் பல்லுயிர் வளத்தையும் அது வழங்கி வருகிறது. பருவநிலைக் கட்டமைப்பிலும் நிலம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

கடந்த பல பத்தாண்டுகளில், மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, நிலம் மற்றும் சுத்தமான குடிநீரை, அதிக அளவில் முன் எப்பொழுதும் இல்லாத அளவில் உபயோகித்ததால் நிலவளம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றால் உண்டான அதிக அழுத்தம், நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு, வறட்சி உள்ளிட்ட அதீதமான வாநிலை நிகழ்வுகள் போன்றவை, இந்த நிலவள சீர்குலைவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன. உலகின் பனிக்கட்டி அல்லாத மொத்த நிலப்பரப்பில் 70 சதவிகிதம் மனித நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகிறது. நிலவள சீர்குலைவும், பாலைவனமாக்கலும் பல நாடுகளுக்கு முக்கிய பொருளாதார, சமூக, மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக இருந்து வருகின்றது. நிலவள சீர்குலைவின் ஒரு வடிவமே பாலைவனமாக்கலாகும். இதன் காரணமாக விளை நிலம் பாலைவனம் ஆகின்றது.

இந்த மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காக, புதுதில்லியை அடுத்துள்ள புறநகர் பகுதியில், செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் நடைபெற்ற மாநாட்டில் 197 நாடுகளிலிருந்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். ஐ.நா.வின் பாலைவனமாக்கலுக்குக் எதிரான குழுவின் 14-வது மாநாட்டை இந்தியா நடத்தியது.

இந்த மாநாட்டில் பங்கு பெற்றவர்கள், நில மேலாண்மை, சீரழிந்த நிலத்தை மறுசீரமைத்தல், வறட்சி, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமன்பாடு, நீர் பற்றாக்குறை மற்றும் இதர பல பிரச்சனைகள் பற்றி கலந்தாலோசித்தனர். இந்த மாநாட்டில் அமைச்சர்கள், ஐக்கிய நாடுகளின் தலைவர்கள், அரசுகளுக்கு இடையேயான பிரதிநிதிகள், மற்றும் அரசுசாரா அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

12 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில், புதுதில்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த பூமியின் நிலவளங்கள் பறிபோவதைத் தடுத்து பூமியைக் காப்பாற்றுவதே புதுதில்லி பிரகடனத்தின் மையக் கருத்தாகும். 2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்பட்ட தொலைநோக்கு இலக்குகளை எட்ட, பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் வளம் குறித்த நிலம் சார்ந்த தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்று இந்தப் பிரகடனம் எடுத்துரைக்கிறது.

இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகள், 35 முடிவுகளை அங்கீகரித்துள்ளன. நிலவளம் குன்றுவதைத் தடுப்பது, பாலைவனமாக்கலையும் வறட்சியையும் எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றிற்கு இந்த நாடுகள் உறுதி மேற்கொண்டன. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 35 முடிவுகளும் 197 நாடுகளிலும் சட்டபூர்வமாகக் கட்டாயமாக்கப்படுகின்றன. வளம் குன்றிய நிலத்தை சீரமைக்கும் வழிமுறைகள் இந்தப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து நாடுகளும் உறுதி பூண்டன.

2030ஆம் வருடத்திற்குள், நிலவளம் குன்றுவதில் சமநிலைத்தன்மை என்ற நிலையை எட்ட, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கிப் பயணிப்பது என்று அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதன்படி, குறிப்பிட்ட காலவரையறைக்குள்ளும், சுற்றுச் சூழலுக்குள்ளும் நிலவளத்தை ஸ்திரமாக்கவும், அதிகரிக்கவும் உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாநாட்டில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிலவளம் குன்றியதால், உலக அளவில் 320 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நில மேலாண்மை கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு, எல்டிஎன் எனப்படும் நிலவளம் குன்றுவதில் சமநிலைத்தன்மை ஒரு முன்னுதாரண மாற்றமாக இருக்கும்.

உலகளாவிய நிலவளத் தீர்மானத்திற்கு, இந்தியாவின் உறுதிப்பாட்டை, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், மீண்டும் வலியுறுத்தினார். 2030ஆம் வருடத்திற்குள் 2 கோடியே 60 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை மீட்டெடுக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது, முந்தைய இலக்கை விட இது 50 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும். COP 14 என்ற மாநாட்டிற்கு இந்தியா தற்போது தலைமை வகிக்கின்றது. அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியா தொடர்ந்து தலைமை வகிக்கும்.

பாலைவனமாக்கல் என்பது, நாட்டின் சுகாதாரம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகிய அனைத்தையும் பாதிக்கின்றது என்பதை அனைத்து நாடுகளும் அறிந்து கொண்டுள்ளன. மனித சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு போன்றவற்றை மேம்படுத்த எடுக்கப்படும் அனைத்து புதிய முன் முயற்சிகளுக்கும் அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஒருங்கிணைந்த நில பயன்பாட்டு மேலாண்மையை உள்நாட்டு அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லுயிர் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் இழப்பு இவற்றுடன், நில நுகர்வு போன்றவற்றைக் குறைப்பதற்கும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிலவளம் குன்றுதல், வறட்சி போன்றவற்றினால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் தாக்கங்களை குறைப்பதற்கு, செயல்திறன்மிக்க அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள, நில மறுசீரமைப்பு என்பது மிகவும் எளிதான தீர்வு என்று, ஐ.நா. அமைப்பின் செயலாளர் இப்ரஹிம் தியாவ் அவர்கள் கூறியுள்ளார். நில சீரமைப்பு,பருவநிலை மற்றும் பல்லுயிர்களுக்கு இடையே நேரடி தொடர்பு உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.






Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.